என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது.
    • பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

    அவிநாசி:

    புளிம்பட்டியில் இருந்து அவிநாசி நோக்கி குரும்பபாளையம் அருகே தனியாா் பேருந்து வந்தபோது, அவ்வழியாக பறந்து வந்த பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது. இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுவதும் உடைந்தது.

    மேலும், பலத்த காயமடைந்த மயிலை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி என்பவா் மீட்டு, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயிலை மீட்டு வனப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றாா்.

    இதில் கடந்த பிப்ரவரி மாதம் தனது தோட்டத்துக்குள் நாய்கள் துரத்தி வந்த புள்ளிமானை மீட்டு வனத் துறையினரிடம் பெரியசாமி ஒப்படைத்தாா்.

    அதேபோல தற்போது பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். 

    • மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.
    • முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது.

    அவினாசி:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வரத்து குறைந்ததால் 215 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குவிண்டாலுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6.64 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் பகுதியைச் சோ்ந்த 2 விவசாயிகள் 44 மூட்டைகள் (2,238 கிலோ) தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

    இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.70க்கும், குறைந்தபட்சமாக ரூ.50க்கும், சராசரியாக ரூ.60க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    • அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    • அப்போது பொதுமக்களிடம் பெறப்பட கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.

    மங்கலம்:

    சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சியின் 5 -வது வார்டு உறுப்பினரும் தி.மு.க. நகரச் செயலாளருமான வேலுசாமி, வா- அய்யம்பாளையம் கிளைச் செயலாளர் சண்முகம், தி.மு.க. மூத்த நிர்வாகி பறையாகாடு மணி, கந்தசாமி, உதயக்குமார், ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், காளிபாளையம் 9-வது வார்டு மகாலட்சுமி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • விழிப்புணர்வு பேரணியை சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • மாநகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 250 பேரும், ஆசிரியர்கள் 25 பேரும் பள்ளியில் செயல்பட்டு வரும் இன்ட்ராக்ட் சங்க மாணவர்களுடன் இணைந்து சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளின் முக்கியத்துவம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் திருப்பூர் மாநகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

    காந்திநகர் டாலர் பிளாசா அமைந்துள்ள பகுதியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கியப்பகுதிகளின் வழியாக சென்று அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிறைவுற்றது.

    முன்னதாக இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி முதல்வர் பிரமோதினி, பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகத்தின் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சுகுமார், ரோட்டரி மற்றும் இன்டராக்ட் அமைப்பு அலெக்ஸ் பால், ரோட்டரிஅமைப்பின் முதன்மை நபர் ராஜலட்சுமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். 

    • போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடைபெற்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களி டமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 474 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறு த்தினார்.

    தொடர்ந்து பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளி சத்யராஜ் என்பவருக்கு இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மின் இணைப்பு பெறுவதற்கான ரூ.5080 முன்வைப்பு தொகைக்கான காசோலையை வழங்கினார்.

    முன்னதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தும், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது.
    • வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூரை தேடி வரும் வெளி மாநிலத்தினர், வெளி மாவட்ட மக்கள் பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர் என 1,500 கடைகள் மூலம் இங்கு மொத்த வர்த்தகம் நடைபெறுகிறது. அதே சமயம் சில்லரை விற்பனையாளர் குறைவு. ரோட்டோரம் இருந்த வியாபாரிகள் ஒருங்கிணைந்து பனியன் பஜார் அமைத்து, சில்லரை வியாபாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. மீண்டும் ஒருங்கிணைந்த பனியன் பஜார் உருவாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

    பனியன் வியாபாரிகளின் கோரிக்கைப்படி நிரந்தரமான கடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக குறு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பனியன் வர்த்தகத்தை வளர்க்கவும் வசதியாக மாநகராட்சி நிர்வாகம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. பனியன் விற்பனை கடைகள், ெரயில் நிலையம் அருகாமையில் இருந்தால் மட்டுமே வெளி மாவட்ட மக்களும், வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வசதியாக இருக்கும்.

    பனியன் வியாபாரிகளின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் காதர்பேட்டை பகுதியில் நிரந்தர கடைகள் அமைக்க உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் வியாபாரிகளுக்கு, தற்காலிகமாக கடைகளை அமைத்து கொடுக்கும் பணியும் வரும் வாரங்களில் துவங்குமென நம்பிக்கை பிறந்துள்ளது.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. போக்குவரத்து குறைவான, அகலமான ரோட்டின் ஒரு பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

    • சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    • கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் பழங்கால வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடுமலை அருகே சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்த உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்திலுள்ள, ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவிலில் புடைப்பு சிற்பங்களும், கல்வெட்டும் காணப்பட்டது. கற்கோவிலின் முன் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கோவில் கட்டியவர்கள் பெயரும், அதில் பணியாற்றியவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது. கடந்த 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் வரலாற்று சின்னமாக உள்ளது. புதுப்பிக்கும் போது கல்வெட்டு மற்றும் புடைப்பு சிற்பங்களை சேதப்படுத்தாமல் புதுப்பித்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    மேலும் கால்நடைகளின் தேவைக்காக கல்தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி சேவை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
    • ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் இறுதி போட்டி மோதுகின்றன

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவன அணிகளுக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (என்.பி.எல்.,), முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

    முதல் போட்டியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - ரிதம் நிட் இந்தியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட்மேன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 126 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ரிதம் 8 விக்கெட் இழப்புடன் 104 ரன் மட்டுமே எடுத்தது. 4 ஓவர் பந்து வீசி நான்கு விக்கெட் வீழ்த்திய ஈஸ்ட்மேன் அணி பவுலர் விஜயகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மற்றொரு அரையிறுதியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய எஸ்.என்., அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சி.ஆர்., கார்மென்ட்ஸ் 124 ரன் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. 4 ஓவர் பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்திய சி.ஆர்., கார்மென்ட்ஸ் பவுலர் ஆல்பிரட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    வருகிற 9-ந் தேதி காலை 9 மணிக்கு, நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டி நடக்கிறது. இதில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதுகின்றன.

    போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு நிப்ட்-டீ பிரீமியர் லீக் சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு,இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

    ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

    • மாநாட்டில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
    • நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரத்தில் 5-ந் தேதி உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை பார்வையிட உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தாராபுரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான மாநாடு தாராபுரத்தில் நாளை 5-ந் தேதி நடக்கிறது. மாநாட்டில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய். ஆனால் உழைத்து உற்பத்தி செய்த தேங்காய் 8 ரூபாய்.தேங்காயை விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். எனவே அந்த முழுமையான கோரிக்கையை இந்த மாநாட்டிலே எடுத்து இருக்கிறோம்.

    மேலும் பால், வெங்காயம், மக்காச்சோளம் போன்ற வேளாண் உற்பத்தி பொருள் அனைத்திற்கும் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்று மாநாட்டிலே வலியுறுத்த இருக்கிறோம்.ஆனைமலை திட்டத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும். உடனடியாக அதற்கு நிதி ஒதுக்க அறிவிப்பு செய்ய வேண்டும். கர்நாடக மந்திரி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டேன் என்று சொல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அந்த தண்ணீரை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

    • அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர்.
    • விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). இவர் தனது மனைவி காயத்ரி, தாயார் நாகம்மாள் (60) மற்றும் 2 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். வடிவேல் மற்றும் காயத்ரி இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    நாகம்மாள் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வடிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். மாலை வேலைக்கு சென்ற தனது தாயாரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.பின்னர் தனது தாயாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

    இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிக்க தூக்கு ப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது.
    • தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டை மேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது வழிபாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது.

    இந்தநிலையில் கோவிலுக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது. இதனால் பக்தி பரவசமடைந்த பக்தர்கள் உடனே பால் ஊற்றி வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் பாம்பு அங்குள்ள மரத்தடிக்குள் சென்று மறைந்தது.

    இதையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று மறைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

    பாம்பு லிங்கத்தை சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினர்.சோதனைச்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • விஜயமங்கலம் டோல்கேட்டில் வந்த 2 காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அவினாசி:

    திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 39). இவர் சிங்கப்பூரில் 15 ஆண்டாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது மனைவி கஸ்தூரி, மகள் யாஷிகா ஆகியோருடன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

    இதையடுத்து குணசேகரனின் குடும்பத்தினரை, அவரின் தந்தை சண்முகம், தாய் கலையரசி மற்றும் உறவினர்கள் ஒரு காரில், திருச்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியில் குணசேகரன் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த போது 2 காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தனர்.

    பின்னர் வலுகட்டாயமாக குணசேகரனை மட்டும் தங்களது காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். அதிர்ச்சியடைந்த குணசேகரனின் தந்தை சண்முகம், அவிநாசி போலீசில் புகார் அளித்தார்.

    உடனே, போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினர்.சோதனைச்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் விஜயமங்கலம் டோல்கேட்டில் வந்த 2 காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் இருந்த திருச்சி நாயக்கர் வீதியை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்(28), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த உசேன் முகமது மகன் சாஜித் அஹமது (32),காரைக்குடியை சேர்ந்த சலீம் அகமது மகன் முகமது நஜ்முதீன்( 34) ஆகிய 3பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது குணசேகரனை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை அவிநாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடமிருந்து குணசேகரனையும் மீட்டனர்.

    பின்னர் கைதான 3பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது குணசேகரனை கடத்தியதற்கான காரணம் தெரியவந்தது.

    குணசேகரனுக்கு சிங்கப்பூரில் பழக்கமான நண்பர் காரூன் என்பவர் நசீர் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது நசீர், குணசேகரனிடம் நீங்கள் குடும்பத்துடன் ஊருக்கு செல்ல, விமான டிக்கெட் செலவையும், கையில் ஒரு லட்சம் ரூபாயும் தருவதாக கூறியுள்ளார்.அதற்கு பதிலாக தான் கொடுக்கும் 500 கிராம் எடையுள்ள தங்கத்தை கோவையில் உள்ள தனது நண்பர்களிடம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.சம்மதம் தெரிவித்த குணசேகரன் தங்கத்தை வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார்.

    திடீரென அங்கு வந்த நசீர் தான் கொடுத்த தங்கத்தை ஒரு சில காரணங்களுக்காக இப்போது வேண்டாம் எனக்கூறி வாங்கி சென்றார். செலவுக்கு கொடுத்த பணத்தை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். பின்னர், பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    அதன்பின் குணசேகரன் குடும்பத்தினருடன் கோவை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இதற்கிடையில் குணசேகரனின் போட்டோவை ஏற்கனவே இங்குள்ள ஆட்களுக்கு நசீர் அனுப்பியதால் தங்கத்தை கொண்டு வந்து கொடுக்காமல் ஏமாற்றி செல்வதாக நினைத்த கும்பல் குணசேகரனை கடத்தியுள்ளனர்.இதில் தொடர்புடைய நசீரின் கூட்டாளிகள் கார்த்திக், முகமது நஜ்முதீன், சாஜித் அகமது ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3பேரையும் தேடி வருகின்றனர். தங்கம் கடத்த உதவியவரை 3பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×