search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நிரந்தர பனியன் பஜார் அமைக்க திட்டம்
    X

    வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நிரந்தர பனியன் பஜார் அமைக்க திட்டம்

    • பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது.
    • வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரை தேடி வரும் வெளி மாநிலத்தினர், வெளி மாவட்ட மக்கள் பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர் என 1,500 கடைகள் மூலம் இங்கு மொத்த வர்த்தகம் நடைபெறுகிறது. அதே சமயம் சில்லரை விற்பனையாளர் குறைவு. ரோட்டோரம் இருந்த வியாபாரிகள் ஒருங்கிணைந்து பனியன் பஜார் அமைத்து, சில்லரை வியாபாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. மீண்டும் ஒருங்கிணைந்த பனியன் பஜார் உருவாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

    பனியன் வியாபாரிகளின் கோரிக்கைப்படி நிரந்தரமான கடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக குறு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பனியன் வர்த்தகத்தை வளர்க்கவும் வசதியாக மாநகராட்சி நிர்வாகம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. பனியன் விற்பனை கடைகள், ெரயில் நிலையம் அருகாமையில் இருந்தால் மட்டுமே வெளி மாவட்ட மக்களும், வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வசதியாக இருக்கும்.

    பனியன் வியாபாரிகளின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் காதர்பேட்டை பகுதியில் நிரந்தர கடைகள் அமைக்க உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் வியாபாரிகளுக்கு, தற்காலிகமாக கடைகளை அமைத்து கொடுக்கும் பணியும் வரும் வாரங்களில் துவங்குமென நம்பிக்கை பிறந்துள்ளது.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. போக்குவரத்து குறைவான, அகலமான ரோட்டின் ஒரு பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×