என் மலர்
திருப்பூர்
- கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்ட ஆலோசகர் வக்கீல் வி.கந்தசரவணகுமார் தலைமையில், நிறுவனத் தலைவர் எஸ்.கண்ணன், நகரச் செயலாளர் எல்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த
ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கல்குவாரிகள் வேலை நிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டு உள்ளதால், கட்டுமான தொழிலுக்கு தேவையான எம்சாண்ட் மற்றும் ஜல்லி வகைகள் கிடைக்காத சூழ்நிலையில் கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி அரசு உடனே நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்டட கலைஞர்கள் நல சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
- சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது.
- சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசன்ஸ் வழிமுறைகளை எளிதாக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஜூன்.26 ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 9 நாட்களாக பல்லடம் பகுதியில் பல கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700 க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் சுமார் ரூ.1600 கோடி அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பல்லடத்தில் கல்குவாரிக ள் கிரசர்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.
- 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
- அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து நின்றிருந்த வாகனங்களில் மீது மோதியது.
பல்லடம்,ஜூலை.5-
கோவையில் இருந்து திருப்பூர் வரை செல்லும் ராஜலட்சுமி என்ற தனியார் பஸ் நேற்று வழக்கம் போல கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர் செல்வதற்காக பல்லடம் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருப்பூரைச் சேர்ந்த உதயகுமார்(32) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக ரமேஷ் என்பவர்இருந்தார்.
இந்த நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள்,1அமரர் ஊர்தி வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. புறச்சாலையில் செல்லும் அதே வேகத்தில் பல தனியார் பஸ்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலும் செல்கின்றன.
இதற்கிடையே ஆம்புலன்ஸில் டிரைவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பஸ்ஸில் முன்புறம் அமர்ந்திருந்த பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த விபத்தால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
- நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.
பல்லடம்,ஜூலை.5-
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர்.
இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சென்னையில் மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை சந்தித்து விசைத்தறி மின் கட்டணத்தை 8 மாத தவணையில் செலுத்த கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மின்கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.
ஜூலை1ந்தேதி முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை ரத்து செய்து, இனி வரும் ஆண்டுகளிலும் மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட அலங்கார பொருட்கள் கண்காட்சி வருகிற 7 ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்திரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் சிவசுப்ரமணி, திருமலைசாமி, குணசேகரன், செந்தில்குமார், ஆலோசகர் ஹேமந்த்ராம் உட்பட பலர் கூறியதாவது:
திருப்பூரில் முதன் முறையாக கட்டடங்களுக்கான எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் கட்டுமானப் பொருட்களுக்கான கண்காட்சி வரும், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடக்கவுள்ளது.
காலை 10 முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம். திருப்பூர் மேயர் தினேஷ்குமார், முன்னணி கட்டட கலை நிபுணர் பிரசன்னா பர்வதிகர் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். தேசிய வர்த்தக வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம், 'ஆர்ம்ஸ்ட்ராங்' பழனிசாமி, 'சக்தி பிலிம்ஸ்' சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
இந்த கண்காட்சியில் தமிழகம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருள், கட்டட உள் மற்றும் வெளி அலங்கார பொருள் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் அமையவுள்ளது. ஸ்மார்ட் ஹோம், ஹோம் தியேட்டர், கிச்சன் வேர்ஸ், 'ஏசி', அலங்கார விளக்குகள், மார்பிள் மற்றும் டைல்ஸ், பசுமை தொழில் நுட்பம் சார்ந்த பொருட்கள், அனைத்து அறைகளுக்கான அலங்கார பொருட்கள், மெத்தைகள் என அரங்குகள் பல வகையிலும் அமைகிறது.
விரிவான பார்க்கிங், குழந்தைகள் விளையாட்டு பகுதி, குலுக்கல் அதிர்ஷ்டப்பரிசு ஆகியவற்றுடன், தினமும் மாலை நேரம் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
- கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அங்கு கடைகள் அமைத்திருந்த சிறு, குறு வியாபாரிகள் தங்களது முதலீடுகளை இழந்து கடுமையாக பாதிப்புக்கு ஆளானார்கள்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காதர்பேட்டையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து அங்கு கடை அமைத்திருந்த 57 கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளை சார்பாக வியாபாரி சசிகுமாரிடம் வழங்கப்பட்டது.
இதில் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், கடை வியாபாரிகளின் நிலையை விளக்கி, அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
- பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.
- நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
தாராபுரம்,ஜூலை. 5-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.சின்னசாமி நகரவை மேல்நிலைப்ப ள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர் கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வையும், வழிகாட்டு தலையும் அளிப்பது தான் நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவு த்தேர்வு, கல்விக்கடன் அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வு களும் அதற்கான அணுகுமுறைகளும், இலவச பயிற்சி மையங்கள் போன்றவை குறித்த விபரங்கள் உள்ளிட்ட பிற தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. அனைவரும் கட்டாயம் கல்லூரி படிப்பில் சேர வேண்டும். அதற்கு உங்களுக்கு ஏதாவது தடை இருப்பின் உடனடியாக எங்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம். பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம். கல்லூரி காலங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் உயர்ந்த பொறுப்பிற்கு வரவேண்டும். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மிகப்பெரிய பொறுப்புகளை அடைய வேண்டும். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் மாணவ,மாணவிகளாகிய நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கையேடுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் தென்மேற்கு பருவமழை மாதிரி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கொடுத்த கையேடுகளை வெளியிட்டனர். அதனைத்ெதாடர்ந்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தாராபுரம் வட்டம், சித்தாரவுத்த ன்பாளையம் ஊராட்சியில் பழங்குடியினர் நலம் - நரிக்குறவர் இன மக்களுக்கான கோட்ட அளவிலான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து நரிக்குறவர் இன மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்க ளை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு ஆலோசகர் (பாராதியார் பல்கலைக்கழகம்) மீனாட்சி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட சமூக நலஅலுவலர் ரஞ்சிதாதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
- தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.
உடுமலை:
பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு விற்பனை அங்காடி செயல்படுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெண் பட்டுக்கூடுகளை விவசாயிகள் மற்றும் பட்டு வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின் பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் ஏல முறையில் பட்டுக்கூடுகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது இம்மையத்துக்கு 700-1,000 கிலோ வரை பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகின்றன.
குறைந்தபட்ச விலையாக ரூ.400க்கு துவங்கி 700 வரை விற்கப்படுகிறது. குறிப்பாக கோவையில் வளர்க்கப்படும் பட்டுக்கூடுகள் பிற மாவட்டங்கள், கர்நாடகா மாநிலங்களில் நல்ல விலைக்கு கிடைக்கிறது.
பட்டுக்கூடு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.
தரம் குறைந்தால் அதன் விலையும் குறையும். ஆகையால் பட்டுக்கூடுகளை பாதுகாப்புடன் விவசாயிகள் வளர்க்க வேண்டும் என்றனர்.
- டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மாணவியின் எதிர்காலம் கருதி ரகசியமாக கருவை கலைக்க முடிவு செய்தனர்.
இதற்காக கருக்கலைப்பு மாத்திரையை மருந்து கடையில் இருந்து வாங்கி வந்து சிறுமிக்கு கொடுத்தனர். இந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்தப்போக்கு அதிகமாகி சிறுமி இறந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவில் வழியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர் ராமேசுவரம் சென்று தனது உறவினர் வீட்டில் பதுங்கிக்கொண்டார். உடனே போலீசார் அங்கு சென்று அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
- மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.
மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.
- முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
- மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.இந்தநிலையில் மாணவர்கள் கல்லூரிக்கான நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-
ஒரு வாரத்துக்கு முன்பாகவே மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமுடியை ஒழுங்கான முறையில் திருத்திக்கொண்டு வருதல், ஆடை, அடையாள அட்டை அணிவது உள்ளிட்ட சில நெறிகள் கல்லூரி செயலி வாயிலாக, முதலாமாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டு பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
அதில் நெறிகளை பின்பற்றாமல் இருந்த 50 பேரிடம் அடையாள அட்டை பெறப்பட்டு, தலைமுடிகளை திருத்தி வரவும், முறையான ஆடை அணிந்து வருவதற்கும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஜூலை 11 முதல் 13ந் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- முதலில் வரும் 25 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடங்கப்படும்
திருப்பூர்:
திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 11-ந்தேதி தொடங்குகிறது
திருப்பூரில் நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியைப் பெருக்கும் வளா்ப்பு முறைகள் தொடா்பான பயிற்சி ஜூலை 11 முதல் 13-ந் தேதி வரையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-
திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியினை பெருக்கும் வளா்ப்பு முறைகள் எனும் தலைப்பில் ஜூலை 11 முதல் 13ந் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் நாட்டுக் கோழிகளின் வகைகள், வளா்ப்பு முறைகள், நாட்டுக் கோழிகளை பாதிக்கும் நோய்கள், தீவன மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு யுக்திகள் போன்ற தலைப்புகளில் விளக்கங்களும், பண்ணை மேலாண்மைக்கும் கோழிகளின் உற்பத்தி திறனுக்குமான தொடா்பு மற்றும் இதர செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சியின் இறுதி நாளில் அருகே உள்ள பண்ணைகளுக்கு அழைத்து சென்று நேரடி செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளன. முதலில் வரும் 25 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்புக்கு நபா் ஒருவருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும். இப்பயிற்சி தொடா்பான முன்பதிவுக்கு 0421-2248524 என்ற எண்ணைத்தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






