என் மலர்
திருப்பூர்
- சமூக விரோதிகள் குடித்து விட்டு பின்னர் புகைபிடித்து அந்த நெருப்பை அப்படியே போட்டு செல்கின்றனர்.
- தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலம் பகுதியில் வீடு வீடாக சேகரிக்கப்படும் குப்பைகள் டிராக்டர், லாரி மூலம் காங்கயம் சாலை முதலிபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு குப்பைகளை அப்படியே கொட்டி விட்டு செல்வதால் இரவு நேரங்களில் உலாவரும் சமூக விரோதிகள் குடித்து விட்டு பின்னர் புகைபிடித்து அந்த நெருப்பை அப்படியே போட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அவ்வப்போது தீவிபத்துகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு குப்பையில் கொட்டப்படும் பாறைகுழியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது போன்ற தீ விபத்து வருங்காலங்களில் ஏற்படாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
- 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல்லை ஆய்வு செய்தனர்.
- பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெருமாநல்லூர்:
விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள 765/ 400 கிலோ வாட் உயர் மின் கோபுர துணை மின் நிலைய திட்டத்தினால் ஏற்படும் ஆபத்திலிருந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற கோரியும், இத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் காவுத்தம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மற்றும் ஈரோடு தொல்லியல் துறை ஆய்வு அதிகாரி காவியா காவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல் என்ற குமரி கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தில் கிடந்த பானை ஓடுகள் ,முதுமக்கள் தாழி ,இரும்பு கசடுகள், தர்மசக்கரக்கல் என்னும் போர் நினைவுகள், ப்ரியல் சைட் எனப்படும் வட்டக் கல், கூடலூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் ,மீன் சின்னம் ,சுவாமி சிலைகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அவருடன் ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல்,வருவாய் ஆய்வாளர் ரியானா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருந்தனர்.மேலும் 9-ந் தேதி சாம்ராஜ் பாளையம் பிரிவு பகுதியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளனர்.
- ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தா
- மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும்.
திருப்பூர்,ஜூலை.6-
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9- ம் ஆண்டு சங்கமம் ,முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சிஏ.வி.பி கலையரங்கத்தில் நடைப்பெற்றது.ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஏ.வி.பி கல்லூரி முதல்வர் டாக்டர் லீலாவதி வரவேற்று பேசினார்.
கல்லூரி செயலாளர் லதா கார்த்திகேயன் பாராட்டுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மோட்டி வேசன் அகாடமி சி.இ.ஓ., முனைவர். ஜெகன் கலந்து கொண்டு மாணவர்கள் முயற்சியுடன் வெற்றி பெறுவதற்குரிய எளிய கருத்துகளையும், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் ,மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும்.
மாணவிகள் கல்லூரி காலத்தில் தங்களின் எல்லா தனித்திறமைகளையும் வெளிகாட்ட வேண்டும் என்றார். முடிவில் ஏ.வி.பி கல்லூரி ஆங்கிலத்துறை தலைவி மகாலட்சுமி நன்றி கூறினார்.
- கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் நகரானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ளசுமார் 12 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இதன் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலை ஒட்டியே அமைந்துள்ளதால், அடிக்கடி இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகாலை நேரத்தில் கோவில் சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே பெத்தாம்பாளையம் செல்லும் சாலை உள்ளதால் அந்த வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே கோவில் சுற்றுச்சுவரை சற்று தள்ளி அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் விபத்துக்கள் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.
எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் போரட்டம் நடைபெற்றது.
- தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பல்லடம்:
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தொடங்கியது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருந்தொழுவு மகாலிங்கம்,மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம்,கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்,மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன், மாநில துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், அகில இந்திய பிரதிநிதி நல்லாக்கவுண்டர் உள்பட பலர் பேசினர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
- மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மானை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றது தெரியவந்தது.
அவிநாசி,ஜூலை.6-
திருப்பூா் மாவட்டம் அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் பகுதியில் மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது பொங்கலூா் ரஞ்சித்குமாா் என்பவரது வீட்டில் மான் கறி சமைத்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பொங்கலூரைச் சோ்ந்த ரவி (40), ரஞ்சித்குமாா் (28), நாராயணன் (45), வெள்ளியங்கிரி (40) ஆகியோரை விசாரித்ததில், அவா்கள் மானை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து வனத் துறையினா் 4 பேரைக் கைது செய்து, அவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இணக்கக் கட்டணம் விதித்தனா்.
- குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது
- சிறுத்தையின் கால் தடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்
காங்கயம்,ஜூலை.6-
திருப்பூா் மாவட்டம் ஊதியூா் வனப் பகுதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வந்த சிறுத்தை, அங்கு பதுங்கியிருந்து மலையடிவாரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
இதையடுத்து காங்கயம் வனத் துறையினா் ஊதியூா் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுத்தை நட மாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். வனப்பகுதிக்குள் கூண்டுகளும் வைத்துள்ளனா். ஆனால் இதுவரை சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை.மலைப் பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் சிறுத்தை கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் ஊதியூா்-காசிலிங்கம்பாளையம் பகுதியில் உள்ள குப்புதுரை என்பவரது தோட்டத்துக்குள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு புகுந்த சிறுத்தை அங்குள்ள ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு வெள்ளாட்டுக் குட்டியை தூக்கிச் சென்றது. தகவலி ன்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, சிறுத்தையின் கால் தடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும் வனத் துறையினா் சிறுத்தையைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுகிறது.
- தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுகிறது.
காங்கயம்:
காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பழையகோட்டை சாலை, கரூர் சாலை, திருப்பூர் சாலை, வாய்க்கால்மேடு, மூர்த்திரெட்டிபாளையம், குதிரைப்பள்ளம்சாலை, அகிலாண்டபுரம், கோட்டைமேடு, கார்த்திகைநகர், பாரதியார் வீதி, காந்திநகர், உடையார்காலனி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் அதனை சரி செய்யும் பணியை மேற்கொள்வது, குடிநீர் மின் மோட்டார் இயங்காமல் பழுது ஏற்பட்டு குடிநீர் வினியோகம் தடைபடுவதால் அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் போது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் குடிநீர் விடுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வீதி. வீதியாக பிரித்து விடவேண்டும் எனவும், வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சரியாக எடுக்க வருவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுவதால், தூய்மை பணி ஆட்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார்.
- இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40).
சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிடவே, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.
இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இஸ்மாயில் கொள்ளையில் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
கைதான இஸ்மாயிலுக்கு உடன்பிறந்த சகோதரிகள் 9 பேர் உள்ளனர். இவர்களில் சிலர் திருமணமாகி திருப்பூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் வசித்து வருகின்றனர். சகோதரிகள் சிலருக்கு திருமணமாகவில்லை. இஸ்மாயில் ஒரே மகன் என்பதால் அவர்தான் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை.
இருப்பினும் வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார். இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் எவ்வளவோ முயன்றும் சகோதரிகளின் திருமண செலவுக்கான பணத்தை சேர்க்க முடியவில்லை.
இதனால் என்னசெய்வதென்று யோசித்துள்ளார். அப்போது அதிக பணம் வேண்டுமென்றால் திருட்டில்தான் ஈடுபட வேண்டும் என்று எண்ணிய அவர் திருடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு அவினாசியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். ஆனால் அவரை அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த அவர், எப்படியாவது பணத்தை புரட்டி விட வேண்டும் என்பதற்காக மீண்டும் 2022-ம் ஆண்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள வீட்டில் திருட முயன்றுள்ளார். அப்போதும் அவர் பொதுமக்கள் பிடியில் சிக்கி கொண்டார்.
நேற்று முன்தினம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த வடிவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். அங்கேயும் அவர் சிக்கிக்கொண்டார். இஸ்மாயிலை வீட்டிற்குள் வைத்து பூட்டியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர் அவமானமும் அடைந்தார். மேலும் தனது சகோதரிகளின் திருமண செலவுக்காக 3 முறை முயற்சி செய்தும் தனது கொள்ளை திட்டம் நிறைவேறாததால் மிகவும் வருத்தமடைந்தார்.
வெளியே சென்றாலும் யாரிடமும் தலை காட்ட முடியாது என்று எண்ணிய அவர், வடிவேல் வீட்டின் பீரோவில் இருந்த சேலையை எடுத்து அங்கிருந்த கொக்கியில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் போலீசார் வந்து இஸ்மாயிலை மீட்டனர்.
மேலும் இஸ்மாயில் போலீசாரிடம் கூறுகையில், 3 முறை முயன்றும் என்னால் கொள்ளையடிக்க முடியவில்லை. எனவே எனக்கு திருடுவதற்கு சரியான பயிற்சி இல்லை. அதனால்தான் பொதுமக்களிடம் சிக்கினேன் என தெரிவித்துள்ளார். உடன் பிறந்த 9 சகோதரிகளின் திருமண செலவுக்காக பனியன் தொழிலாளி கொள்ளையனாக மாறிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
- மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, மற்றும் கோவை மாவட்டம் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மில்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 1500 டன் நூல் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ.மில்களில் மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூல் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.இந்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மில்களில் வேலை பார்த்து வரும் சுமார் ஐந்து ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நூல்மில் உரிமையாளர்கள் கூறுகையில்:-
மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 50 சதவீதம் நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் மின்கட்டணம் உயர்வால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசு மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
- வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
- 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சமூக விரோதிகள் சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் ஆய்வு செய்த போது 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை முழுமையாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கிருந்த சில மரங்களின் பெரிய, பெரிய கிளைகளையும் வெட்டி கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் கூறியதாவது;-
இந்த வீட்டுமனை இடத்தில் மாதப்பூர் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் எண்ணற்ற மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வருவாய் ஆய்வாளருக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை கண்டறிந்து போலீசார் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்ட ஆலோசகர் வக்கீல் வி.கந்தசரவணகுமார் தலைமையில், நிறுவனத் தலைவர் எஸ்.கண்ணன், நகரச் செயலாளர் எல்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த
ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கல்குவாரிகள் வேலை நிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டு உள்ளதால், கட்டுமான தொழிலுக்கு தேவையான எம்சாண்ட் மற்றும் ஜல்லி வகைகள் கிடைக்காத சூழ்நிலையில் கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி அரசு உடனே நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்டட கலைஞர்கள் நல சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.






