என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குளிக்க தடை விதிக்கப்படும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமண லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    குறிப்பாக அமாவாசை , பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இது தவிர திருமூர்த்தி அணை வண்ண மீன் காட்சியகத்தை பார்வையிடவும் பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். டிசம்பர் மாதம் வரை நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறைந்து விடும்.

    கடந்த 2 மாதமாக தண்ணீரின்றி அணை வறண்டு கிடந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

    நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குளிக்க தடை விதிக்கப்படும். வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அடிவாரத்தில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மண்டபத்தை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருமூர்த்தி அணையில் சென்று கலக்கும். வெள்ள அபாயத்தை அறிவிக்கும் வகையில் அப்பகுதியில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. மலையின் மீது கருமேகங்கள் திரண்டாலே கனமழையை கணித்து அருவிப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.

    • பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்,

    தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • சர்வதேச நாடுகளின் இன்றைய எதிர்பார்ப்பு, பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி .
    • இனி வரும் நாட்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (சோலார்) மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் முதுகெலும்பாக விளங்கும் சாயத்தொழில் இன்று எதிர்கொள்ள முடியாத சவால்களையும், நெருக்கடி களையும் சந்தித்துள்ளது. நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை பின்பற்றி சாயக்கழிவால் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் சுத்திகரிப்பு செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

    சர்வதேச நாடுகளின் இன்றைய எதிர்பார்ப்பு, பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி . அவ்வகையில் திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.தற்போது திருப்பூரில் 420 உறுப்பினர்களும், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களும், 60 தனியார் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்படும் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்துக்காக மாபெரும் இயக்க செலவை சுமந்து கொண்டிருக்கின்றனர்.

    சாய ஆலைகளின் மாதாந்திர மின் கட்டணம் ஒரு லட்சமாக இருந்தது 1.60 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம், கேட்பு கட்டணம், பீக் ஹவர் கட்டணம் என 18 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மட்டும் மாதம் 30 கோடி ரூபாய் மின் செலவு ஏற்படுகிறது.

    பனியன் ஏற்றுமதி ஓராண்டாக குறைந்து போனதால் உற்பத்தியை 40 சதவீதமாக குறைத்துக்கொண்டு செலவை சமாளிக்க முடியாமல் சாய ஆலைகள் தடுமாறி வருகின்றன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பசுமை சார் உற்பத்தியை செய்து வரும் சாய ஆலைகளுக்கு பசுமை சான்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.மின் கட்டண செலவு மாபெரும் சவாலாக மாறியுள்ளதால் இனி வரும் நாட்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (சோலார்) மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

    ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தால் திருப்பூர் பகுதியில் நொய்யல் புத்துயிர் பெற்றுள்ளது. மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதால் சோலார் மின் உற்பத்திக்கு மாற அரசு உதவ வேண்டும். உற்பத்தி செலவில் 40 சதவீதம் மின் கட்டணத்துக்கே செலவாகிறது.

    எளிய முறையில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற்று சோலார் கட்டமைப்பை நிறுவ மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி உதவ வேண்டும். சோலார் அனுமதி பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் சரிவர இயங்காமல் இருப்பதால் சாய ஆலைகளும் ஸ்தம்பித்து போயுள்ளன. சவால்நிறைந்த சாய ஆலைத்தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதால் சோலார் மின் உற்பத்திக்கு மாற அரசு உதவ வேண்டும். உற்பத்தி செலவில் 40 சதவீதம் மின் கட்டணத்துக்கே செலவாகிறது.

    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் முருகசாமி கூறுகையில், 1,500 கோடி ரூபாய் செலவில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளோம். ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் வரை செலவு செய்து, சுத்திகரிப்பு செய்து வருகிறோம். வெளிமாவட்டங்களில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கழிவுநீரை காவிரியில் விடுகின்றனர்.

    ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை சிரமத்துடன் செயல்படுத்தும் திருப்பூர் சாய ஆலைகளுக்கு பசுமை சான்றிதழ் (கிரீன் டேக்) வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.

    • யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் (2023) அறிமுகப்படுத்தியது.
    • யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் குழந்தைகளுக்கான மத்திய அரசின் யு - வின் செயலி பயன்பாட்டை விரிவுபடுத்த தமிழக சுகாதாரத்துறை ஆயத்தமாகி வருகிறது.

    நோட்டில் மட்டுமே இருந்து வரும் தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல்மயம் ஆக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.

    கர்ப்பிணியர், குழந்தைகளுக்கான தடுப்பூசி விபரம் மற்றும் அட்டவணையை இச்செயலி மூலமாக மொபைல் போன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

    திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் யு - வின் செயலி இயக்கம் மே மாதம் அறிமுகமானது. மீதமுள்ள 36 மாவட்டங்களில் இம்மாதம் 31-ந்தேதிக்குள் யு - வின் செயலியை இயக்கத்துக்கு கொண்டு வர சுகாதாரத் துறை ஆயத்தமாகியுள்ளது.

    மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட இணை இயக்குனர், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி, எந்த நாளில் செலுத்த வேண்டும் என்பதில் பெற்றோர் பலர் ஒரு வித குழப்பம் அடைகின்றனர்.மொபைல் போன் வழி நினைவூட்டல் இருந்தால் தடுப்பூசி செலுத்த முன்கூட்டியே தயாராகி விடுவர். சரியான தேதியில் செலுத்துவது சாத்தியமாகி விடும்.யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஜோதிபாசு வெளியே சென்றிருந்த சமயத்தில் எலி மருந்தை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து 2பேரும் குடித்தனர்.
    • 4 வயது சிறுவனை கொன்று தாய்-பாட்டி தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார பகுதியை சேர்ந்தவர் அம்மாப்பட்டியான்(வயது 62), தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (55). இவர்களது மகள் நந்தினி (35). இவருக்கும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காரியாப்பெட்டிவலசு பகுதியை சேர்ந்த ஜோதிபாசு என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன் திலக் கலாம் (4).

    தமிழரசி கத்தார் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் நாடு திரும்பினார். இதையடுத்து அவர் தனது மகள் நந்தினியுடன் திருப்பூர் மாவட்டம் மூலனூர் கன்னிவாடி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மருமகன், பேரனுடன் வசித்து வந்தார். நந்தினி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் அவர்கள் குடியிருந்த வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இதையடுத்து தமிழரசி தனது மகள் நந்தினியிடம் சொந்தமாக வீடு ஒன்றை கட்டலாம் என தெரிவித்துள்ளார். தமிழரசி கத்தாரில் வேலை செய்யும் போது கிடைத்த பணத்தை ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதனை உறவினர்கள் செலவு செய்து விட்டனர். இதனால் நந்தினி, தனது தாய் தமிழரசியிடம் , கத்தாரில் வேலை செய்த பணத்தைதான் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டாயே என்று கோபப்பட்டுள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த 2பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். ஜோதிபாசு வெளியே சென்றிருந்த சமயத்தில் எலி மருந்தை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து 2பேரும் குடித்தனர். மேலும் 4 வயது சிறுவன் திலக்கலாமுக்கும் கொடுத்தனர். அதனை குடித்த சிறிது நேரத்தில் 3பேரும் மயக்கமடைந்தனர். திலக்கலாம் சம்பவ இடத்திலேயே இறந்தான். தமிழரசியும், நந்தினியும் உயிருக்கு போராடினர். மகன் இறந்ததால் மிகவும் மனமுடைந்த நந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    தமிழரசி உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இந்தநிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே நந்தினி தூக்கில் பிணமாக தொங்கியதுடன், திலக்கலாம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக மூலனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நந்தினி, திலக்கலாம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசி இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். வீடு பிரச்சினையில் இந்த தற்கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 வயது சிறுவனை கொன்று தாய்-பாட்டி தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவ படிப்பு முடிக்காமல், இருவரும் மருத்துவம் பார்த்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
    • சுசியா கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்த்ததை ஒப்புக்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் சின்னக்கரை லட்சுமி நகரில் தனியார் கிளினீக் செயல்பட்டு வந்தது. இங்கு சகோதரிகளான திவ்யா, சுசியா டாக்டர்களாக உள்ளனர். எம்.பி.பி.எஸ்., முடித்த திவ்யா சென்னையில் தங்கியுள்ளார். பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.,) முடித்த சுசியா கிளினீக்கில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மருத்துவம் பார்த்த போது சுசியா மருத்துவத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதையடுத்து கிளினீக்கிற்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் திவ்யா, சுசியா இருவரும் மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராகினர்.

    அப்போது திவ்யா சென்னையில் இருந்து மகப்பேறு மருத்துவம் தொடர்பாக வீடியோ காலில் சுசியாவிடம் பேசி, கர்ப்பிணிகளுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன் மூலம் சுசியா கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்த்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக திருப்பூர் மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், ஒருவர் எம்.பி.பி.எஸ்., மற்றொருவர் பி.டி.எஸ்., படிப்பு முடித்துள்ளனர். மருத்துவ படிப்பு முடிக்காமல், இருவரும் மருத்துவம் பார்த்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். மருத்துவ படிப்பு முடித்ததால் முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கடந்த சில வருடங்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் திருப்பூர் வந்த இவர் தாய் பாப்பம்மாளுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கண்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இவரை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் சிவபெருமான் (41) அழைத்துச்சென்று வந்தார். சிவபெருமான் தறி தொழிலாளியாக உள்ளார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டை புதுப்பிப்பது குறித்து தாயும், மகனும் பேசினர்.

    இதற்காக தான் வெளிநாட்டில் வேலை செய்தபோது அனுப்பிய பணம் மற்றும் அக்கம்பக்கத்தில் கொடுத்து வைத்திருந்த பணம் என ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை சேகரித்து வீட்டில் வைத்திருந்தனர்.

    இதனை தெரிந்துகொண்ட சிவபெருமான் யாருக்கும் சந்தேகம் வராதபடி பகல் நேரங்களிலேயே வீட்டிற்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடி சென்று உள்ளார். இந்த நிலையில் கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார் .

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 75 ஆயிரம் பணத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணத்தை தான் வாங்கிய கடனை அடைத்துள்ளதுடன், நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்தும் வெளியிடங்களுக்கு சென்றும் உல்லாசமாக இருந்து செலவழித்துள்ளார். சிவபெருமானை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    • வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .

    திருப்பூர்:

    திருப்பூா் விஜயாபுரம் செந்தில்நகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயராஜ், இவரது மனைவி ராஜே ஸ்வரி (வயது39). ஜெயராஜ் குவைத் நாட்டில் டெய்லராக பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதியின் மகன் சஞ்சய் (18), மகள் திவ்யதா்ஷினி (8). விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் திவ்யதா்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தாா்.

    இந்நிலையில் ராஜேஸ்வரி, பள்ளியில் இருந்து திவ்யதா்ஷினியை அழைத்துக் கொண்டு விஜயாபுரத்தில் இருந்து நல்லூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தாா். நல்லூா் காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் திவ்யதா்ஷினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

    ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்து அங்கு திரண்ட பொதுமக்கள், காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் (32) என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் வீரசின்னகண்ணனை பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

    இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்தவா் வேகமாக வாகனத்தை இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வீரசின்னகண்ணனை கைது செய்வதுடன், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

    இதனிடையே மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வீரசின்ன கண்ணன் மீது 304 ஏ பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வருகிற 8-ந்தேதி( சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு செய்ய உள்ளாா்கள்.

    அவிநாசி வட்டத்தில் பழங்கரை, தாராபுரம் வட்டத்தில் நஞ்சத்தலையூா், காங்கயம் வட்டத்தில் வடுகபாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் கடத்தூா், பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி, திருப்பூா் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல், திருப்பூா் தெற்கு வட்டத்தில் விஜயாபுரம், உடுமலை வட்டத்தில் சிந்திலுப்பு, ஊத்துக்குளி வட்டத்தில் மொரட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
    • கொப்பரை விளைநிலங்களில் ஏழு முதல் ஒன்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு ஒரு பைசா மின்சார கட்டண உயர்வுக்காக நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு, கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், வட்டார தலைவர் வேல்மணி, நகரதலைவர் தங்கவேல், ராசு, கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    1972 ஆம் ஆண்டு ஒரு பைசா மின்சார கட்டண உயர்வுக்காக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் பலியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் தற்போது மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. திருப்பூர். கோவை மாவட்டங்களில் சமீப நாட்களாக கொப்பரை தேங்காய் விலை மிகவும் சரிவடைந்து வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் 73 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தற்போது 70 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது.விளைநிலங்களில் ஏழு முதல் ஒன்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் தென்னை விவசாயிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை விலை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.எனவே உடனடியாக தென்னை விவசாயிகளை காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு சான்றிதழுக்கும் மூன்று நகல்கள் மற்றும் உரிய கட்டணம் கொண்டுவரவேண்டும்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கையின் இறுதிக் கட்டக் கலந்தாய்வுநாளை 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    முதலில் நடைபெற்ற இரண்டு கலந்தாய்வுகளில் 735 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 129 காலியிடங்கள் மற்றும் 20 சதவீதம் கூடுதலாகப் பெறப்பட்ட 50 இடங்கள் என மொத்தம் 179 காலியிடங்களுக்கு இந்த இறுதிக்கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    மொத்தக் காலியிடங்களில் 75 இடங்கள் இளநிலை கலைப் பிரிவுகளிலும் (தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல்), 41 இடங்கள் வணிகவியல் பாடப் பிரிவுகளிலும் (வணிகவியல், வணிகவியல் -கணினி பயன்பாடு, மின் வணிகவியல், மற்றும் வணிக நிா்வாகவியல்), 63 இடங்கள் அறிவியல் பாடப் பிரிவுகளிலும் (கணினி அறிவியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், மற்றும் புள்ளியியல்) காலியாக உள்ளன.

    தரவரிசை மற்றும் இனச் சுழற்சி அடிப்படையிலேயே விண்ணப்பதாரா்கள் அழைக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெறும். இனவாரியான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பதாரா்கள் இல்லாதபொழுது, தமிழக அரசு வழங்கியுள்ள இனச்சுழற்சி மாற்ற நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    இதுவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவா்களும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இருப்பினும் முன்னா் இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு சோ்க்கை நடைபெறும்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் அசல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றைக் கொண்டுவரவேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் மூன்று நகல்கள் மற்றும் உரிய கட்டணம் கொண்டுவரவேண்டும். பெற்றோா் உடன் வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

    • புகார் மீது உண்மை தன்மை இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா தெரிவித்தார்
    • 100 நாள் வேலை உறுதி அளிக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி அளிக்கும் திட்டத்தில், கொண்டம்பட்டி ஊராட்சியில்சுமார் 30க்கும் மேற்பட்டவர்களின் வேலை அளிக்கும் அட்டையை பயன்படுத்தி பல லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு பொதுமக்கள் தரப்பில் புகார் மனு அனுப்பப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் பிரேமலதா தலைமையிலான குழுவினர் கொண்டம்பட்டி ஊராட்சி மற்றும் குடிமங்கலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். புகார் மீது உண்மை தன்மை இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திட்ட அலுவலர் பிரேமலதா தெரிவித்தார்.

    ×