என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மகிழ்ச்சியான ஞாயிறு” கொண்டாட்டம் நடைபெறுகிறது.
    • கலைநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் "மகிழ்ச்சியான ஞாயிறு" கொண்டாட்டம் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மண்டலம்-2, 17வது வார்டு புதிய பேருந்து நிலையம் அருகில், 60 அடி ரோடு, கண்ணகி நகர், எம். எஸ். நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே கடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை போல், இந்த நிகழ்ச்சியையும் தமிழ்நாட்டில் சிறந்த நிகழ்ச்சியாக்க அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையான இந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன.
    • நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் 14வது வந்தே பாரத்ரெயில் சேவை சென்னை-கோவை இடையே கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ெரெயில் சேவையான இந்த ரெயிலில்,7 ஏ.சி. பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 500க்கும் அதிகமானவர்கள் பயணம் செய்ய முடியும்.

    புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ெரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் எல்லா நாட்களிலும் இது நிரம்புமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 8-ந்தேதியில் இருந்து இப்போது வரையிலும் ஒரு நாள் விடாமல் இந்த வண்டியில் இடம் கிடைக்காத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த மாதம் 15-ந் தேதி வரையிலுமே ஒரு இடம் கூட இல்லாத அளவுக்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

    வந்தே பாரத் ரெயில்  ரெயில்யில் சேவை துவக்கப்பட்ட நாளில் இருந்து 100 நாட்கள் வரையிலும் புல் ஆகி இருப்பது கோவைக்கும், சென்னைக்கும் இடையிலான ெரயில் தேவையை உணர்த்துவதாக உள்ளது. இதற்கு இந்த ரெயிலில் உள்ள வசதிகளும், சேவையும் முக்கியக் காரணமாக இருப்பதுடன் நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    இந்த ரெயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது போலவே கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ெரயிலை இயக்கினால் அமோக வரவேற்பு கிடைக்குமென்ற வாதமும் வலுத்துள்ளது. கோவையில் கேரள மக்கள் அதிகமிருப்பதால் திருவனந்தபுரம், மங்களூருக்கும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    வேகத்தைப் பொறுத்தவரையில் முதல் 14 வந்தே பாரத்ரெயில்களில் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலின் வேகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.டில்லி-வாரணாசி வந்தே பாரத் 96.37 கி.மீ., வேகத்திலும், நிஜாமுதீன்- ராணி கம்லாபதி வந்தே பாரத் 95.89 கி.மீ., வேகத்திலும் இயக்கப்படும் நிலையில், இந்த ரெயிலின் சராசரி வேகம் தற்போது 90.36 கி.மீ., என்ற அளவில் உள்ளது.

    ஜோலார்பேட்டையிலிருந்து கோவை வரையிலான 280 கி.மீ., தூரத்துக்கு வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.ஈரோட்டில் காவிரி ஆற்றின் மேலே பாலத்தை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது.இந்தப் பணிகள் முடிந்தபின்பு, சென்னை-கோவை வந்தே பாரத் ரெரயிலின் வேகம், 110 கி.மீ.,லிருந்து 130 கி.மீ., வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதன் காரணமாக இப்போது 5:50 மணி நேரமாகவுள்ள பயண நேரம் மேலும் 20ல் இருந்து 30 நிமிடங்கள் வரை குறையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,ஜூலை.7-

    சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை மாத மாதாந்திர பராமரிப்பு, தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால் சென்னை செல்லும் 8 ெரயில்கள் முழுமையாகவும், 4 ெரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அந்த பட்டியலின் படி தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) ஜூலை 11,18,25 மற்றும், ஆகஸ்டு 1ந் தேதி (செவ்வாய்கிழமைகளில்) ஆகிய நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    அரக்கோணம், பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்கு ெரயில் செல்லாது. மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து ெரயில் (எண்:12679) இயக்கம் துவங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரெயில் பயணிகள் தொடர் வலியுறுத்தலால், திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர ரெயில் (எண்:06044) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்ததால் ெரயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் புறப்படும் ெரயில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் வழியாக செல்லும். இந்தரெயிலில், 3 ஏசி., 9 படுக்கை வசதி, 5 பொது, 2 சரக்கு பெட்டி இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடமாநிலம் செல்லும் ெரெயில்பயணிகள் வசதிக்காக, ரப்திசாஹர், ஹிம்சாகர், பாட்னா உட்பட 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன.

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கையை தெற்கு மத்திய ெரயில்வே அதிகரித்துள்ளது.

    எர்ணாகுளம் - பரூனி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஓங்கோல் - விஜயவாடா இடையே, சிரலா நிலைத்தில் 1 நிமிடம் நிற்கும்.ஸ்ரீவைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நெல்லூர் - ரேணிகுண்டா இடையே குண்டூரில் 2 நிமிடங்கள் நிற்கும்.

    எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் விஜயவாடா - வாரங்கல் இடையே கம்மம், வாரங்கல் - பெலம்பல்லி இடையே ராமகுண்டம் மற்றும் மன்சிர்யல் ஆகிய நிலையங்களில் 1 நிமிடம் நின்று செல்லும்.இவை தவிர மேலும் 11 ரெயில்கள் கூடுதலாக நின்று செல்லும் நிலையங்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

    • இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார்.
    • ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ரூபிணி ( வயது 24). பல்லடம் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) . இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் ரூபினியின் சகோதரி கணவர், கடந்த பிப்ரவரி மாதம் ராஜா மற்றும் ரூபிணி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

    சென்னை பேரூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபிணியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் ரூபிணியின் கையை உடைத்துள்ளார்.

    நேற்று இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூருக்கு ரூபிணியை ராஜா அழைத்து வந்தார். அங்கு வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    இதனால் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவசர தொலைபேசி எண் மூலம் போலீசாரை வரவழைத்தார். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த ரூபிணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் இது குறித்து ரூபிணி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.
    • தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    குடிமங்கலம்:

    தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.

    மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டி கடன் திட்டங்கள், மானியத் திட்டங்கள் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மிக எளிதாக மளிகைக் கடை, பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கும் எலி மருந்தைப் பயன்படுத்தி பல தற்கொலைகள் நிகழ்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடோல்) பூச்சி மருந்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.அதேநேரத்தில் தடையை மீறி இந்த எலி மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எலிகளைக் கட்டுப்படுத்த தோட்டம் மற்றும் வீடுகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் பாஸ்பரஸ்க்கு எதிர்வினை மருந்து இல்லாததால் சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    எனவே 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்தை பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் விற்பனை செய்யக் கூடாது.மீறி விற்பனை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகஸ்தர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் குடிமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலரை 9788425208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
    • சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தக்காளி, வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தநிலையில், போதிய விலை கிடைக்காததால் சமீப காலங்களாக அவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. இந்தநிலையில் தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சொட்டுநீர்ப் பாசனத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி என்பது விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக உள்ளது. சின்ன வெங்காய விதையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுதவிர உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்துவிதமான இடுபொருட்களும் விலை உயர்ந்துள்ளது.அந்தவகையில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு பிடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொண்டுள்ளோம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் பாசன நீரின் தேவை குறைகிறது. மேலும் நீரில் கரையும் உரங்களை சொட்டுநீருடன் கலந்து வழங்கும் போது, குறைந்த அளவு பயன்பாட்டில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    ஆனால் விவசாய விளைபொருட்கள் விலை உயர்வு என்பது மட்டும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறுவது வேதனை தருகிறது.தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்கிறது.

    அதுபோல தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் விலை குறையும் போது ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.இதன்மூலம் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறும் நிலையை மாற்ற உதவும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் பகுதியில் தனியார் சாய ஆலை உள்ளது. இங்கு பனியன் துணிகளுக்கு சாயமேற்றி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • நேரடி முகவர்கள், கள அலுவலர்களாக திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.

    திருப்பூர்:

    அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளம் கிடையாது. பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    அதன்படி திருப்பூர் அஞ்சல் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் வருகிற 19-ந் தேதி காலை 10 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. தாராபுரம் பகுதி மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர் பகுதி மக்களுக்கு வருகிற 20-ந் தேதி திருப்பூர் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

    நேரடி முகவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படைவீரர்கள், மகிலா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் பங்கேற்கலாம். கள அலுவலர்களுக்கு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் குரூப்-ஏ, பி அந்தஸ்தில் உள்ளவர்களின் மீது துறை ரீதியாக எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.

    ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் அந்தந்த அலுவலகத்துக்கு தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேரடி முகவர்கள், கள அலுவலர்களாக திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரிய வேண்டும். ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    மங்கலம்:

    கழிவுப்பஞ்சு விலை உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட காரணங்களால் 160 ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடா்பாக திருப்பூரை அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மறுசூழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவை, திருப்பூா், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 680 ஓ.இ.(ஓபன் எண்ட் மில்கள்) மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், திருப்பூா், கோவை, வெள்ளக்கோவில், உடுமலை, ராஜாபாளையம் ஆகிய பகுதிகளில் கிரே உற்பத்திக்கான ஓ.இ.மில்கள் அதிக அளவில் உள்ளன. கிரே நூல்களை பயன்படுத்தி விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

    கலா் நூல்களில் பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளான கழிவுப்பஞ்சு பருத்தி விலையில் இருந்து சுமாா் 75 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் மின்சார கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான பீக் ஹவா்ஸ் கட்டணம் , டிமாண்ட் சாா்ஜ் கட்டணத்தால் தொழில் நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, கழிவுப் பஞ்சு விலையை கட்டுப்படுத்தக் கோரியும் மின்சார கட்டணத்தை குறைக்கக் கோரியும், ஓ.இ.மில்களில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் முதல்கட்டமாக தமிழகத்தில் 160 ஓ.இ. மில்களில் உற்பத்தி நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

    மேலும் எஞ்சியுள்ள ஆா்டா்களை முடித்தவுடன் ஓரிரு நாள்களில் அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    • பஞ்சுகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
    • ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்குளி:

    ஹரியானாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றி க்கொண்டு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செங்கப்பள்ளியை நோக்கி இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

    ஊத்துக்குளி-செங்கப்பள்ளி பிரிவு அருகே செல்லும் போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே டிரைவர் கீழே இறங்கி பார்ப்பதற்குள் லாரியில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பற்றி எரிந்தது. பஞ்சுகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    உடனே இது குறித்து ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாகின. லாரியின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயால் இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவார்கள்.
    • பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு வருகிற 13 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, காங்கயம், பல்லடம், பொங்கலூா், திருப்பூா், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் கீழ்கண்ட தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

    இதற்கு விண்ணப்பிக்க ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 28 வயதுக்கு உள்பட்டவராகவும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்களில் பணியாற்றியிருக்கவும் வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்) ஜூலை 20 -ந்தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்) ஜூலை 24 ந்தேதியும் நடைபெறும்.

    ஆகவே இதற்கு தகுதிவாய்ந்த நபா்கள், இணை இயக்குநா்-திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 13 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
    • கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது

    திருப்பூர்,ஜூலை.7-

    அரசு கேபிள் டி.வி.யின் செட்டாப் பாக்ஸ் இயக்கம் துவங்கும் போதெல்லாம் திரையில் வரும் தகவல் சேனலில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி அதன் வாயிலாக வருவாய் ஈட்ட கேபிள், டி.வி., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு கேபிள் டி.வி., அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் கேபிளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தொலைக்காட்சி, ஆன் செய்யப்படும் போதெல்லாம், லேண்டிங் சேனல் எனும் அரசு கேபிள் தகவல் சேனல் ஒளிபரப்பாகும்.

    அதில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், முதல்வரின் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு, கேபிள் டி.வி., தொடர்பான தகவல், பொது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் ஆகியவை ஒளிபரப்பாகும்.

    இந்தநிலையில் இந்த தகவல் சேனலில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதில் கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்ப விளம்பரம் ஒளிபரப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

    இதன் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். முதலில் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×