என் மலர்
திருப்பூர்
- 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கணபதிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் விற்பனை செய்த பாக்கியநாதன், பெரிய ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.
- பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை தனியார் பேக்கரியில், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தேநீர் அருந்திவிட்டு அவர் கொண்டு வந்த, கை பையை மறந்து விட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்த பேக்கரி ஊழியர் பிரவீன் கைப்பை இருப்பதைப் பார்த்தவர், அதனை எடுத்துக் கொண்டு பல்லடம் போலீஸ் நிலையத்தில், நடந்த சம்பவத்தை கூறி ஒப்படைத்தார். போலீசார் அந்த கைப்பையை சோதனை யிட்டபோது அதில் 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.
இதையடுத்து அதில் இருந்த முகவரியை பார்த்தபோது, சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஆசாத் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். இதையடுத்து நேற்று அவர் பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார். மேலும் கைப்பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பேக்கரி ஊழியருக்கு நன்றி தெரிவித்தார். போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் பேக்கரி ஊழியரை பாராட்டினர்.
- தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா சூட்டிய ஜூலை-18-ம் நாளினையே“தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும்
- போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா சூட்டிய ஜூலை-18-ம் நாளினையே"தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இதன்படி 18-7-2023-தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் 12-7-2023 (புதன்கிழமை) அன்று திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும்பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்க ப்படுவார்கள்.
போட்டிக்கான தலைப்புகளானது கட்டுரைப்போட்டி- தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்.பேச்சுப்போட்டி- தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின்எழுதுகோல்.இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் மூன்றாம்பரிசு ரூ. 5,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்குட்பட்டு நடைபெற வேண்டும்.
- கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில மாணவரணி செயலாளர் பாலு சுப்பிரமணியம் முன்னிலையில் பல்லடம் அரசு கலைக் கல்லூரி .எல் .ஆர் .ஜி. கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசாணை 161 விதியின்படி மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்குட்பட்டு நடைபெற வேண்டும். அதேபோல் மாணவர்கள் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டு முறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
நிகழ்ச்சியின் போது திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் முனைவர் கிரிஷ் சரவணன், மாவட்ட அமைப்பு செயலாளர் மணிகண்ணன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நந்தகோபால், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், ஊடகப் பேரவை ரவிசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், ஒன்றிய தலைவர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சாமிநாதன், மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது.
- பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
கடந்த வாரம், 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையில் கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது. மொத்தம் 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
பல்லடம் பி.டி.ஓ., ரமேஷ், அவிநாசி ஒன்றியத்துக்கும், அங்கிருந்த லீலாவதி காங்கயத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குடிமங்கலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட பியூலா எப்சிபாய் பல்லடத்துக்கும் பல்லடத்துக்கு மாற்றப்பட்டிருந்த பிரியா கலெக்டர் அலுவலக (வளர்ச்சி) மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளர் மகேந்திரன் குடிமங்கலம் பி.டி.ஓ.,வாகவும், காங்கயம் பி.டி.ஓ., ராகவேந்திரன் வெள்ளகோவிலுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ளார்.
- ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க மனு கொடுத்துஇருந்தார்.
- ரூ.52.50 லட்சம் இழப்பீடாக வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்பு கொண்டனர்.
திருப்பூர்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின் பேரிலும் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்லடம் பி. வடுகபாளையம் பகுதியை சேர்ந்த சக்தி பிரவீன் (வயது 26) என்பவர் பல்லடத்தில் உள்ள தனியார் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.கடந்த 29.5.2022 அன்று கோவை-திருச்சி ரோட்டில் சோளியப்பக்கவுண்டன்புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் வலது கால் துண்டானது. இதற்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.தனக்கு ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க மனு செய்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ரூ.52.50 லட்சம் இழப்பீடாக வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்பு கொண்டதால் சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான ஆணையை மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் வழங்கினர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடினார். காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல் பாலாஜி கிருஷ்ணன் உடன் இருந்தார். மேலும் நீதிபதிகள் செல்லத்துரை, கண்ணன், ரஞ்சித் குமார் மற்றும் வக்கீல் சங்க தலைவர் ரகுபதி, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலாங்காடு பிரிவு அருகில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.
- செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்றுவதற்காக, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகராட்சி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்புடன் இணைந்து கடம்ப வனம் எனும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 75ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்று திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலாங்காடு பிரிவு அருகில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மண்டல தலைவர்கள் ,கவுன்சிலர்கள் ,மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கை மட்டும் தனியாக கிடந்ததால், யாராவது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணிய போலீசார் அப்பகுதி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் வாலிபர் உடல் மற்றும் கையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மண்ணரை கேட்டு தோட்டம் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் கை தனியாக கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கை மட்டும் தனியாக கிடந்ததால், யாராவது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணிய போலீசார் அப்பகுதி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கை இல்லாத நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனால் வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில், அங்கு சுற்றி திரிந்த நாய்கள் வாலிபரின் கையை கவ்விச்சென்று காட்டுப்பகுதியில் போட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வாலிபர் உடல் மற்றும் கையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது.
- பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும்.
திருப்பூர்:
முத்தமிழ் திருவிழா -2023 மலரில் இடம்பெற தமிழ் இலக்கிய, இலக்கண கட்டுரைகளை 31ந் தேதிக்குள் அனுப்பலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது. ஆன்மிக பெரியோர்கள், ஆதீனகர்த்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்.
தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கணங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்தரங்குகள் நடக்கின்றன. பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகளை பெற்று தொகுப்பு மலர் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை இப்பணியை ஒருங்கிணைக்கிறது.
தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம், தமிழும் பிற மொழிகளும், தமிழின் பண்பாடு, வரலாறு, மாட்சிமைத்திறன், அறிவியல் மற்றும் கல்வி சிந்தனை சார்ந்த பொருளில் கட்டுரைகள் இருக்க வேண்டும்.பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும். கட்டுரைகள், ஏ4 அளவு தாளில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
muthamilthiruvizhakovai2023@gmail.com அல்லது 80726 54314 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் அனுப்பலாம். கட்டுரைகளை ஜூலை 31ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டுரையாளரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80726 54314, 86103 25998 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காண்டூர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
- கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது
உடுமலை:
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காண்டூர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது.
பி.ஏ.பி. திட்டம் இன்றளவும் நடைமுறையில் இருப்பதற்கு காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் மழைக்காலங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீரில் அடித்து வரப்படுகின்ற மண் மற்றும் பாறைகள் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாயின் கரையை சேதப்படுத்தி வந்தது.
இதனால் கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அணை நிரம்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.அதைத்தொடர்ந்து கால்வாயின் கரையை சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.கட்டுமான பணியை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- கோவிலுக்கு அறங்காவலர் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது.
- இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அறங்காவலர் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது. இதில் அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் குழு தலைவராகவும், கருணாம்பிகா பொன்னுசாமி, ரவி பிரகாஷ், கார்த்திகா, ஆறுமுகம், ஆகியோர் அறங்காவலர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியை நடைபெற்றது.
- தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
உடுமலை:
உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 இணையர்களுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் மீட்பு மற்றும் அன்னதான திட்டம் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய செயல். அதை எல்லோராலும் சிறப்பாக செயல்படுத்த முடியாத சமயங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு தேவையான சீர்வரிசைகள் வழங்கி ஒரு சிறப்பான வாழ்க்கைக்கு அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் மணவிழா காணும் 6 இணையர்களை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியும், சந்தோஷசமும் அடைகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும், தமிழ்நாடு அரசு சார்பாகவும் பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
அதே போல மணமக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று ஒற்றுமையோடும், விட்டுக் கொடுத்து சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அரசுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் திருமணத்தை நடத்தி வைத்த எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 6 மணமக்களுக்கும் தலா சீர்வரிசை ப்பொருட்களாக, திருமங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், 1 பீரோ,1 கட்டில், மெத்தை, 2 தலையணை, 1 பாய், 2 கைக்கடிகாரம், 1 மிக்சி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என மொத்தம் ரூ.30,000 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பொருளாளர் முபாரக் அலி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார்,எஸ்.கே. தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், பாபு,பிஏபி., பாசனசங்கத் தலைவர் மொடக்குப்பட்டி ரவி, உடுமலை தாசில்தார் கண்ணாமணி உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






