என் மலர்
திருப்பூர்
- காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது.
- குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது.
திருப்பூர்:
கடந்த மாசி பட்டத்தில் பல விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது. வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தக்காளி செடிகள் கருகின. விளைச்சல் பாதிப்பால் தக்காளி விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. தட்டுப்பாடு காரணமாக கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. உச்ச விலைக்கு விற்பனையான போதிலும் போதிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த வைகாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் தக்காளி செடிகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றனர்.
அடுத்த மாதத்தில் புதிய தக்காளி அறுவடை துவங்கிவிடும். எனவே சில வாரங்களில் விலை குறைய துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
- பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி மற்றும் கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் போதுமான அளவில் உணவு, குடிநீர் கிடைக்காத நிலையில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் 2 காட்டு யானைகள் திருமூர்த்திமலையையடுத்த பொன்னாலம்மன் சோலை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து மாமரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியதுடன், ஏராளமான தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிச் சென்றன.
விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.இதனால் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
- ல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
திருப்பூர்:
கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி திருப்பூர், கோவையில் நூல் மில் உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓ.இ., மில்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி உற்பத்தி தொழிலை பொறுத்தவரை, ஓ.இ., மில்கள், விசைத்தறிகள், ஆட்டோ லூம், சுல்ஜர், சைசிங் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த செயல்பாடுகளால் காடா துணியாக வடிவம் பெறுகின்றன. ஓ.இ., மில்களில் இருந்து கிடைக்கும் நூலை பயன்படுத்தியே, விசைத்தறிகள் இயங்குகின்றன. நூல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். எனவே இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜவுளி துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
- வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
உடுமலை:
உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு ஜூன் 1-ந் தேதி முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மேலும் 5 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், நாளை 10ந் தேதி முதல், 15-ந் தேதி வரை பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
- அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை விளக்கப்பட்டது.
- உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்பாடு விளக்கப்பட்டது.
காங்கயம்:
காங்கயம் வட்டாரத்தில் 2023-ம் ஆண்டு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் குழு கண்டறியப்பட்டு அக்குழுவில் உள்ள 25 விவசாயிகளுக்கு காங்கயம் அருகே காடையூர் பகுதியில் முதல் கட்ட பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சியில் அங்ககச் சான்று ஆய்வாளர் ஹேமா கலந்துகொண்டு அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகர் அரசப்பன் கோடை உழவு, உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், அங்கக வேளாண்மையில் இவற்றின் பங்கு ஆகியவை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி பரம்பரகத் க்ரிசி விகாஷ் யோஜனா திட்டம் (பி.கே.வி.வை) பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் ரேவதி பாசன நீர் மாதிரி எடுத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்கள் பற்றி கூறினார். அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தேவராஜ், வசந்த் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- கடந்த 2 வாரங்களாக பக்ரீத் மற்றும் கோவில் திருவிழாக்கள் காரணமாக நல்ல விலை கிடைத்தது.
- அதிக அளவில் ஆடுகளை ஏற்றி வந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக பக்ரீத் மற்றும் கோவில் திருவிழாக்கள் காரணமாக நல்ல விலை கிடைத்தது.தற்போது ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆடுகளின் விலை குறைந்துள்ளது. இதனால் ஆடுகளின் விலை சற்று குறைவாகவே இருந்தது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக நல்ல விலை கிடைத்ததை நம்பி அதிக அளவில் ஆடுகளை ஏற்றி வந்த விவசாயிகளுக்கு இந்த வாரம் ஏமாற்றமே கிடைத்தது.
அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.5,500 ஆகும். இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
- விடுதியில் மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்துள்ளனர்.
- 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விடுதி வசதி தேவைப்படும் மாணவிகள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறலாம்.
குண்டடம்:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திருப்பூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான இலவச விடுதியானது குண்டடம் ஒன்றியத்தில் உள்ள சேடபாளையத்திலும், மூலனூர் ஒன்றியத்தில் உள்ள மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தரமான சரிவிகித உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் வாட்டர் ஹீட்டர், தனித்தனி படுக்கை வசதியுடன் கூடிய அறைகள், மாதந்தோறும் மாணவிகளுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் வழங்குதல், நூலக வசதி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
மாணவிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் விடுதி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. விடுதியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 200 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவிகள் சேர்க்கை ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விடுதி வசதி தேவைப்படும் மாணவிகள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறுமாறு குண்டடம் ஒன்றிய பொறுப்பு மேற்பார்வையாளர் அமுதா மற்றும் மூலனூர் ஒன்றிய பொறுப்பு மேற்பார்வையாளர் வசுமதி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.
மேற்கண்ட விடுதிகளில் சேர விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். குண்டடம் ஒன்றியம்: 9788858646, மூலனூர் ஒன்றியம்: 9788858648.
- 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
- என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு மனு கொடுத்தார்
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை, திருநம்பிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
அவர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை, வீட்டு வசதி, கல்வி உதவித்தொகை, திறன் வளர்ப்பு பயிற்சி, சுயஉதவிக்குழு உறுப்பினராக சேர்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்காக காய்கறி கடை நடத்த ஏற்பாடு செய்யக்கோரி மனுக்கள் கொடுத்தனர். என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை ஒருவர் அவர் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு தனக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்.
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அதிகாரி, சமூகநலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
- இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் ‘ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு ‘ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார்.
திருப்பூர்:
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் 'ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது. திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் 'ஜெட்' தரச்சான்று பெற விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேருக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) சார்பில், ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. டீமா தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கி பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார். பின்னர் தரச்சான்று பெறும் வழிமுறைகள், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.
டீமா பொருளாளர் சுபாஷ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை உதவி இயக்குனர் மனீஷ் வசிஸ்தா, துணை மேலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தொழில்துறையினர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இயற்கை சார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இயக்குவதற்கு அங்கீகாரமாக 'ஜெட்' தரச்சான்று பெற்று பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் டீமா சங்கம் சார்பில் திருப்பூர் பேஷன் இன்ஸ்டிடியூட் புதிதாக தொடங்கப்பட்டது. நூல், நிட்டிங், பேட்டர்ன் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மெர்ச்சன்டைசிங், காஸ்ட்டிங் அண்ட் புரோகிராமிங், ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, தர மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. முழுநேரம், பகுதி நேர பயிற்சியும் உள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
- தமிழகத்தில் மின் கட்டண உயா்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- இக்கட்டான நிலையில் தொழில் நடத்த முடியாமலும், அண்டை மாநிலங்களுடன் தொழிலில் போட்டி போட முடியாத சூழலும் உருவாகி உள்ளது.
மங்கலம்:
மின்சாரத்துக்கான டிமாண்ட் கட்டணம் 3 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று விசைத்தறி தொழில் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து விசைத்தறிகள் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் கட்டண உயா்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பஞ்சு விலை கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் அதிகரித்து வரும் மின் கட்டணத்தால் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மின்கட்டண உயா்வை தொடா்ந்து டிமாண்ட் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குறைந்த அழுத்த மின் மாற்றிக்கான கட்டணம் ரூ.35லிருந்து, 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.184 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இதேபோல உயா் அழுத்த மின்மாற்றிக்கான டிமாண்ட் கட்டணம் ரூ.550ல் இருந்து ரூ.562 ஆக அதிகரித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும், இந்த டிமாண்ட் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்த வேண்டும். இதனால் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் டிமாண்ட் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் தொழில் நடத்த முடியாமலும், அண்டை மாநிலங்களுடன் தொழிலில் போட்டி போட முடியாத சூழலும் உருவாகி உள்ளது. எனவே டிமாண்ட் கட்டணத்தை பழையபடி குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
- கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
- அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
காங்கயம்:
கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கரூா், திருச்சி, நாகப்பட்டினத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த வழித் தடத்தில் சூலூா், பல்லடம், அவிநாசிபாளையம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, பரமத்தி ஆகிய ஊா்கள் உள்ளன.
இந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளை கோவையில் பேருந்து நடத்துநா்கள் முதலில் ஏற்றுவதில்லை. தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகளையே முதலில் ஏற்றுகின்றனா். இதனால் கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஆசிரியா் வடிவேல் என்பவா் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் கோவை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்பொது மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவையிலிருந்து குறிப்பிட்ட வழியாகச் செல்லும் பேருந்துகளில் பேருந்து நிலையப் பொறுப்பாளா்கள் மூலம் அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.
- போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது.
பெருமாநல்லூர், ஜூலை.8-
திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூலிபாளையம் அடுத்துள்ளது வெள்ளியம்பாளையம். இப்பகுதியை சுற்றி எஸ்.பெரியபாளையம், கோவி ந்தம்பாளையம், பெட்டிக்கடை, திம்மநாயக்கன்பாளையம், சிவசக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். உடனே இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது. சமூக வலைதளங்களில் தவறான புகைப்படத்தை பதிவிட்டு சிலர் இது போன்று சமூக வலைதளங்களில் தகவலை பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் எஸ்.பெரியபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






