என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
குண்டடம், மூலனூர் ஒன்றியத்தில் இலவச தங்கும் விடுதிகளில் மாணவிகள் சேர்க்கை
- விடுதியில் மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்துள்ளனர்.
- 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விடுதி வசதி தேவைப்படும் மாணவிகள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறலாம்.
குண்டடம்:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திருப்பூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான இலவச விடுதியானது குண்டடம் ஒன்றியத்தில் உள்ள சேடபாளையத்திலும், மூலனூர் ஒன்றியத்தில் உள்ள மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தரமான சரிவிகித உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் வாட்டர் ஹீட்டர், தனித்தனி படுக்கை வசதியுடன் கூடிய அறைகள், மாதந்தோறும் மாணவிகளுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் வழங்குதல், நூலக வசதி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
மாணவிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் விடுதி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. விடுதியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 200 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவிகள் சேர்க்கை ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விடுதி வசதி தேவைப்படும் மாணவிகள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறுமாறு குண்டடம் ஒன்றிய பொறுப்பு மேற்பார்வையாளர் அமுதா மற்றும் மூலனூர் ஒன்றிய பொறுப்பு மேற்பார்வையாளர் வசுமதி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.
மேற்கண்ட விடுதிகளில் சேர விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். குண்டடம் ஒன்றியம்: 9788858646, மூலனூர் ஒன்றியம்: 9788858648.






