என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
    • ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- எங்களது பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரியும், வீடுகள் தோறும் அவைகளுக்கு உணவு வைப்பார்கள். அதனை உண்டு விட்டு தெருக்களில் சுற்றித் திரியும். இரவில் அங்குள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் அந்த நாய்கள் இறந்து கிடந்தன. தற்போது எங்கள் பகுதியில் ஒரு தெரு நாய் கூட இல்லை. இருந்த அனைத்து நாய்களுமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.

    மற்றொருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தோம். மாலை நேரங்களில் தெரு நாய்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடும். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதையடுத்து அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு அது இறந்து விட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொடிய விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளது. அதனால் தான் உடனே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். நான் அதனை எங்கள் வீட்டுக்கு அருகே அடக்கம் செய்துவிட்டு வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போய் விட்டதாக அக்கம் - பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே நாய்கள் இறப்பு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கொடிய விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், புரதச்சத்து உணவுகள், மற்றும் உணவுகள் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்லடம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி, உள்ளிட்டோர் உணர்வுகளை சுவைத்து பார்த்து, அதனை சமைத்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையம் ஊராட்சி புள்ளியாண்டம்பாளையத்தை சேர்ந்த சடையப்பன் என்பவரது மகன் பெரியசாமி (வயது 44). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அங்கு அவருடன் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.

    இந்தநிலையில் டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு எலக்ட்ரீசியன் பெரியசாமி மின் கம்பத்தில் ஏறி உள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு வராமல் தாமாக சென்று பழுதை சரி செய்ய மின்கம்பத்தில் ஏறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தேரோடும் சாலைகளில் மின் கம்பிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களை தவிர்க்க புதை வடக்கம்பிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
    • ரூ.4 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச் சாலைகளாக மேம்படுத்தி தர வேண்டும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சித்துறை அலுவலர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் உடுமலை வருகை புரிந்தனர். அப்போது அவர்களிடம் நகரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து உடுமலை நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் உலா வரும் வீதிகளில் 1 லட்சம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் தேரோடும் சாலைகளில் மின் கம்பிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களை தவிர்க்க புதை வடக்கம்பிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    உடுமலை நகரின் இதயப்பகுதியான மத்திய பேருந்து நிலையம் சந்திப்பில் சுற்றுலா தலங்களுக்கு செல்லக் கூடிய சாலை சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் செயற்கை நீரூற்று, புல் தரைகள், பூச்செடிகள் அமைத்து அழகு படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கு ரூ.33 லட்சம் ஒதுக்கித் தர வேண்டும்.

    பழனி, திருமூர்த்திமலை, ஏழுமலையான் கோவில் ஆகிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வாகன நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ளவும் இளைப்பாறவும் தற்போது இருக்கும் பேவர் பிளாக் சாலைகளை தரம் உயர்த்தி ரூ.4 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச் சாலைகளாக மேம்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • 11-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

     திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலிபாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர், அலகுமலை துணை மின் நிலையங்களில் வருகிற 11-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    முதலிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன்நகர், ஆர்.வி.இ. நகர், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்காகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம்.

    நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு, பழவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர் மற்றும் அலகுமலை துணை மின்நிலையத்துக்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிப்பாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • மருந்து கழிவுகள் கிடந்த சாக்குப்பைகளில் வேலூரில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியின் பெயர் பதிவிடப்பட்டு இருந்தது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே சில மூட்டைகள் கிடந்தன. அந்த வழியே சென்றவர்கள் அதனைப் பார்த்தபோது, அதற்குள் டாக்டர்கள் பயன்படுத்தும் கையுறை, மற்றும் சில மருந்து அட்டைகள், பனியன் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் போம் எனப்படும் பஞ்சு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடந்தன. அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி இதே போல சில மூட்டைகள் கிடந்தன.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மருந்து கழிவுகள் கிடந்த சாக்குப்பைகளில் வேலூரில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியின் பெயர் பதிவிடப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த கல்லூரியில் இருந்து மருத்துவ கழிவுகள் இங்கு வந்து போடப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் சின்னக்கரை மற்றும் அருள்புரம் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுத்தனர். எனவே அங்கிருந்து காலாவதியான மருந்துகளை கொண்டு வந்து போட்டுள்ளனரா? என சந்தேகம் உள்ளது.

    மேலும் பனியன் நிறுவனங்களில் பயன்படுத்தும் போம், நூல் கண்டுகள் கிடப்பதால் பனியன் நிறுவனத்தில் இருந்து போட்டுள்ளனரா? எனவும் சந்தேகம் உள்ளது. மருந்து கழிவு சாக்குப்பைகளில் வேலூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியின் பெயர் பதிவிடப்பட்டுள்ளது.

    எனவே அங்கிருந்து கொண்டு வந்து போடப்பட்டுள்ளதா? எனவும் சந்தேகம் உள்ளது. இது போன்று மருத்துவ கழிவுகளை போடுவதால் சுகாதார சீர்கேடு, நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
    • பதவி பெற்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. முன்னதாக மாணவர் மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளை பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.

    பள்ளியின் மாணவர் மன்ற தலைவர்களாக கியோன் அபிஷேக், தர்ஷினி , துணைத்தலைவர்களாக ஹியக் நரசிம், கீர்த்தனா, விளையாட்டுத்துறையின் செயலாளராக யதுகிருஷ்ணா ஆகியோர் பதவியேற்று கொண்டனர். மேலும் பல்வேறு அணியின் செயலர்கள், துறையின் செயலர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரிய பொறுப்பாளர்கள் ஆகியோர் பொறுப்பேற்று க்கொண்டனர்.

    பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு ரோட்டரி அமைப்பின் முன்னாள் ஆளுநர் இளங்குமரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்து மாணவர்களிடையே தலைமைப்பண்பினால் கிடைக்கும் பெருமை பற்றியும், ஒற்றுமையின் பலன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.

    முடிவில் பள்ளியின் மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோருடன் இணைந்து பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.
    • இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது.

    திருப்பூர்:

    பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தற்போது சொந்த ஊரான திருப்பூருக்கு வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.பெரிதாக ஆசைப்படுவதில்லை.ஆசைப்படாததால் மகிழ்ச்சிகரமாக வாழ்கின்றனர். சிறு, குறு தொழில்கள் அங்கு குறைவு. பெரிய இரும்பு ஆலைகள் இருந்தும், சுரங்கம் இருந்தும் மக்கள் பின்தங்கியுள்ளனர்.மரங்களை தெய்வமாக வணங்கும் உயர்ந்த கலா சாரம் உள்ளது. மரங்களுக்காக பெரிய பண்டிகை கொண்டாடுவதை பார்த்து அசந்து போனேன்.

    இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது. தங்கம், வைர சுரங்கம் தவிர மற்ற சுரங்கங்கள் அதிகம் உள்ளன.அனைவருக்கும் இந்தி தெரிந்துள்ளது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு குழு மக்களுக்கும் தனித்தனி மொழி இருக்கின்றன.

    தி.மு.க.,வை பொறுத்த வரை, பல்வேறு நிலையில், பலவகை நிலைப்பாட்டை எடுக்கும் கட்சி. மது இல்லாத தமிழகம் இருந்தால் மாநில வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மதுவிலக்கால் 6 மாதம் அல்லது ஓராண்டு மட்டும் அரசுக்கு சிரமமாக இருக்கும். அதன்பின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் வாயிலாக நிலைமை சீராகி விடும். மது பழக்கத்தால் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. சாராய ஆலை அதிபர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.

    பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற சிந்தனையை நோக்கி ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும். பெண்களுக்கு சரியான உரிமை கிடைக்க பொது சிவில் சட்டம் அவசியம். குறிப்பாக பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
    • சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார் தலைமை வகித்து பேசியதாவது:-

    புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். அரைகுறை ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதாலேயே பதிவு எண் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய பதிவு சார்ந்த கள ஆய்வின்போது சில வணிக நிறுவனங்களை கண்டறிய முடிவதில்லை. அனைத்து வர்த்தகர்களும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மாதாந்திர ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பினால் உடனடியாக பதிலளிக்க வேண்டும். காலம்தாழ்த்தினால் நோட்டீஸ் உத்தரவாக மாறும். அபராதம் செலுத்தவேண்டிய நிலையும் ஏற்படும்.

    ஜி.எஸ்.டி., சார்ந்து எந்த சந்தேகம், விளக்கங்கள் தேவைப்பட்டாலும் வணிக வரி அதிகாரிகள், அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் மாவட்ட வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் பேசுகையில், காலதாமதமாக செலுத்தப்படும் வரிக்கு 18 முதல் 14 சதவீதம் வரை வட்டி தொகை வசூலிக்கப்படுகிறது. இதை 6 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.

    தொழில்நுட்ப கோளாறுகளால் ஆன்லைனில் பதிவு சான்றுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றார். 

    • கோழிப்பண்ணை செயல்பட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளதால், ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளோம்.

    தாராபுரம்:

    தாராபுரம் தாலுகா சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. சுகாதார கேடு ஏற்படுவதால் இந்த கோழிப்பண்ணை செயல்பட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: -சின்னக்காம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையால், குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. விவசாய நிலங்களில் நீர் மாசுபடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தபோது பண்ணைக்கு இனி கோழிகள் வராது என கலெக்டர் தெரிவித்தார். ஆனால் கடந்த 1ந்தேதி போலீசார் முன்னிலையில் 30 ஆயிரம் கோழிகள் வந்திறங்கியுள்ளன. கடந்த 3ந் தேதி நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் தெரிவித்தபோது அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த வந்தோம். கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் எங்களிடம் பேச்சு நடத்தினார்.

    கோழிப்பண்ணை பகுதியில் விரைவில் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளதால், ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளோம். நடவடிக்கை இல்லாவிடில் மீண்டும் போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டியில் இந்து முன்னணி சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் வடிவேல், பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். வருகிற 30-ந் தேதி அவிநாசியில் பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து மக்களை அழைப்பது, 16ந் தேதி திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் 27 இடங்களில் மாநாடு குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, பக்தி அமைப்புகள், சிவனடியார்கள், சமுதாய தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • போட்டிகளை நடத்தி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காமராஜரின் பணிகள் தொடர்பான பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டி மாணவ, மாணவிகளுக்கு நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை போன்று வட்டார, மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.கல்வி அலுவலகங்களிலும், காமராஜ் போட்டோ வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

    காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் வருகிற 15ந் தேதி அரசு பள்ளிகள் செயல்படும். அன்று வேலை நாள். இவ்வாறு அவர் கூறினார்.

    ×