search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பகுதியில் நாய்களை விஷம் வைத்து கொன்றவர்கள் யார்? - போலீசார் விசாரணை
    X

    சாலையோரத்தில் இறந்த நிலையில் கிடந்த நாயின் பரிதாபக் காட்சி.

    பல்லடம் பகுதியில் நாய்களை விஷம் வைத்து கொன்றவர்கள் யார்? - போலீசார் விசாரணை

    • சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
    • ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- எங்களது பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரியும், வீடுகள் தோறும் அவைகளுக்கு உணவு வைப்பார்கள். அதனை உண்டு விட்டு தெருக்களில் சுற்றித் திரியும். இரவில் அங்குள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் அந்த நாய்கள் இறந்து கிடந்தன. தற்போது எங்கள் பகுதியில் ஒரு தெரு நாய் கூட இல்லை. இருந்த அனைத்து நாய்களுமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.

    மற்றொருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தோம். மாலை நேரங்களில் தெரு நாய்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடும். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதையடுத்து அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு அது இறந்து விட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொடிய விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளது. அதனால் தான் உடனே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். நான் அதனை எங்கள் வீட்டுக்கு அருகே அடக்கம் செய்துவிட்டு வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போய் விட்டதாக அக்கம் - பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே நாய்கள் இறப்பு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கொடிய விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×