என் மலர்
உள்ளூர் செய்திகள்

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
தென்னை விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
- கொப்பரை விளைநிலங்களில் ஏழு முதல் ஒன்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு ஒரு பைசா மின்சார கட்டண உயர்வுக்காக நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு, கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், வட்டார தலைவர் வேல்மணி, நகரதலைவர் தங்கவேல், ராசு, கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-
1972 ஆம் ஆண்டு ஒரு பைசா மின்சார கட்டண உயர்வுக்காக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் பலியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் தற்போது மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. திருப்பூர். கோவை மாவட்டங்களில் சமீப நாட்களாக கொப்பரை தேங்காய் விலை மிகவும் சரிவடைந்து வருகிறது.
வெளிமார்க்கெட்டில் 73 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தற்போது 70 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது.விளைநிலங்களில் ஏழு முதல் ஒன்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் தென்னை விவசாயிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை விலை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.எனவே உடனடியாக தென்னை விவசாயிகளை காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






