search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Wall"

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ளசுமார் 12 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இதன் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலை ஒட்டியே அமைந்துள்ளதால், அடிக்கடி இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகாலை நேரத்தில் கோவில் சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே பெத்தாம்பாளையம் செல்லும் சாலை உள்ளதால் அந்த வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே கோவில் சுற்றுச்சுவரை சற்று தள்ளி அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் விபத்துக்கள் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.

    எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×