search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dress Code"

    • ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது
    • இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்

    கேரளத்தின் கடற்கரையோரம் லக்கடிவ் கடல் பகுதியில் (Laccadive Sea) உள்ள 36 தனித்தனி தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டம், லட்சத்தீவு. இது இந்தியாவிற்கு சொந்தமானது.

    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களிலேயே சிறியதான இதில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுபவரால் இது நிர்வகிக்கப்படுகிறது. இதன் தற்போதைய நிர்வகிப்பாளர் ப்ரஃபுல் கோடா பட்டேல்.

    பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அங்கு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பெல்ட், டை, ஷூ மற்றும் சாக்ஸ் உள்ளிடக்கிய பள்ளி சீருடைகளின் புதிய வடிவம் ஒன்றை கட்டாயமாக்கியுள்ளது.

    அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    "பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அணிவதால் அவர்களிடையே ஒரு உறுதித்தன்மை ஏற்படும். இதன் மூலம் மாணவர்களிடையே ஒழுக்க உணர்வும் வளரும். பரிந்துரைக்கப்பட்ட சீருடை வடிவங்களை தவிர வேறு உடைகளை அணிவது பள்ளி மாணவர்களை பாதிக்கும். இந்த முடிவு, மாணவர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தபட்டவர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது."

    "ஒவ்வொரு மாணவ மாணவியரும் குறிப்பிட்டுள்ள சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். இந்த சீருடை முறையை தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் மாணவ மாணவியர் கண்டிப்பாக கடைபிடிப்பதை பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவின்படி, 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செக் டிசைனில் அரை பேண்ட் மற்றும் வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும், அவ்வகுப்பு வரை உள்ள மாணவியர் செக் டிசைனில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    அதே போல் 6-இல் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கடல் நீல நிறத்தில் முழு பேண்டும், வான் நீல நிற அரைக்கை சட்டையும், மாணவியர்கள் கடல் நீல நிறத்தில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    "இது லட்சத்தீவில் வசித்து வருபவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது" என்று லட்சத்தீவு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹம்துல்லா சயீத் குற்றம் சாட்டினார்.

    இந்த புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்கு எதிராக மாணவ-மாணவியர்களின் துணையுடன் வகுப்பு புறக்கணிப்பு உட்பட கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பள்ளி சீருடையின் காரணமாக ஒரு போராட்டம் வெடித்ததும், அச்சிக்கல் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும்
    • ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது

    அமெரிக்காவில் காவல்துறையினரும் ராணுவத்தினரை போன்றே தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி 20-ம் நூற்றாண்டில் சட்டங்கள் கடுமையாக இருந்தன. இவற்றை மீறியவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி நேர்ந்தது.

    சமீப ஆண்டுகளில் இத்தகைய சட்டங்களில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் சீக்கியர் ஒருவரை தனது தாடியை அதிகம் வளர்க்க அமெரிக்காவின் நியூயார்க் காவல்துறை அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    அமெரிக்காவில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் கூறுகிறது.

    சரன்ஜோத் டிவானா எனும் சீக்கியர் தனது திருமணத்திற்காக தனது தாடியை அரை அங்குலம் அதிகம் வளர்க்க முயன்றார். பாதுகாப்பு காரணங்களால் இதற்கான அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது.

    "காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து நியூயார்க்கர்களும் தங்கள் மத சம்பிரதாயங்களை கடைபிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என நியூயார்க் மாநில ட்ரூப்பர்ஸ் பெனவலண்ட் அசோசியேஷன் எனும் காவலர் நலச்சங்க தலைவர் சார்லி மர்பி தெரிவித்துள்ளார்.

    சீக்கிய மத கோட்பாடுகளின்படி, ஆண்கள் கட்டாயம் தலைப்பாகை அணிய வேண்டும். அவர்கள் தங்கள் தலைமுடியையும் தாடியையும் எடுக்கக்கூடாது. ஆனால், நியூயார்க் காவல்துறையில் உள்ள ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

    "பணியாளர்களின் பன்முகத்தன்மையை மதிக்கிறோம். தலைப்பாகை அணிவது தொடர்பாக கொள்கை வகுக்க செயல்பட்டு வருகிறோம்", என காவல்துறை செய்தித்தொடர்பாளர் டியன்னா கோஹன் கூறினார்.

    2022-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், தாடி வைத்திருப்பதாலோ, தலைப்பாகை அணிவதாலோ சீக்கியர்களுக்கு கடற்படையில் சேருவதை தடுக்க கூடாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    • மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.இந்தநிலையில் மாணவர்கள் கல்லூரிக்கான நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இது குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-

    ஒரு வாரத்துக்கு முன்பாகவே மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமுடியை ஒழுங்கான முறையில் திருத்திக்கொண்டு வருதல், ஆடை, அடையாள அட்டை அணிவது உள்ளிட்ட சில நெறிகள் கல்லூரி செயலி வாயிலாக, முதலாமாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டு பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.

    அதில் நெறிகளை பின்பற்றாமல் இருந்த 50 பேரிடம் அடையாள அட்டை பெறப்பட்டு, தலைமுடிகளை திருத்தி வரவும், முறையான ஆடை அணிந்து வருவதற்கும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முறையாக ஆடை அணியாத ஆண், பெண் பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
    • சிலர் கோவிலின் புனிதம் குறித்த உணர்வின்றி ஆடை அணிந்து வருகிறார்கள்.

    ஹரித்துவார் :

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஹரித்துவார் தக் ஷ் பிரஜாபதி மந்திர், ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ மந்திர், டேராடூன் தபகேஷ்வர் மகாதேவ மந்திர் ஆகிய கோவில்களை நிர்வகித்துவரும் மகாநிர்வானி பஞ்சாயத்தி அகாரா அமைப்பின் செயலாளர் மகந்த் ரவீந்திர பூரி கூறுகையில், முறையாக ஆடை அணியாத ஆண், பெண் பக்தர்கள் இந்தக் கோவில்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெண்கள் தங்கள் உடம்பை 80 சதவீதம் மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும். இந்த ஆடைக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.

    மேலும் அவர், சிலர் கோவிலின் புனிதம் குறித்த உணர்வின்றி ஆடை அணிந்து வருகிறார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதையடுத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விரைவில், நாடு முழுவதும் எங்கள் அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும்.

    அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கல்லூரிகளில் பேராசிரியர்கள் ‘மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும்.
    • இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    சென்னை

    உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

    அதேபோல், கல்வி வளர்ச்சி, ஆராய்ச்சி உள்பட அனைத்திலும் உயர்கல்வித் துறை சிறந்ததாக மாற வேண்டும், அதிலும் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போதைய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதன் ஒரு அங்கமாக, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்ற கருத்தை உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக உயர்கல்வித் துறையின் துணை செயலாளர் ப.தனசேகர், உயர்கல்வித் துறைக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிக்கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார்.

    அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு குரலையும் பதிவு செய்கின்றனர்.

    ×