என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி.
- நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
- கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது.
பல்லடம்:
கரூர் அருகே உள்ள பசுபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண் (வயது 22). இவர் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர், நேற்று கரூரில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பல்லடத்தை அடுத்த பெரும்பாலி என்ற இடம் அருகே சென்ற போது, நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழியாக சென்ற போது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரண் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து சரணின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






