என் மலர்
திருப்பூர்
- தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
- நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பூர்:
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 23-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.
தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 28ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 0422-2590080,94869-77757 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ெரயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ரெயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
கோவை- ராமேஸ்வரம் (16618) வாராந்திர ரெயில், கோவை ரெயில் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்கத்தில் ராமேஸ்வரம்- கோவை (16617) ரெயில், புதன்தோறும் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:13மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30க்கு கோவை வந்தடையும். இந்த 2 ரெயில்களும் நாளை 18-ந் தேதி முதல் சிவகங்கை ரெயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக கூடுதலாக 2 நிமிடங்கள் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி பிளாட்பார்மில் பராமரிப்பு, மேம்பாட்டு பணி நடப்பதால் ஸ்வர்ண ஜெயந்தி, மில்லினியம் சூப்பர்பாஸ்ட் ரெயில் 4 நாட்களுக்கு சித்தூர் திருப்பதி செல்லாது.
ஆந்திர மாநிலம், திருப்பதி ரெயில் நிலைய பிளாட்பார்மில் (2 மற்றும் 3), மேம்பாட்டு பணியை தென் மத்திய ரெயில்வே ஒரு மாதம் மேற்கொள்கிறது.இதனால், 7 ரெயில்கள் முழுமையாகவும், 12 ரெயில் பாதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ஸ்வர்ண ஜெயந்தி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:12643) வருகிற 18, 25, ஆகஸ்டு 1, 8-ந் தேதி ஆகிய 4 நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும்.
இதனால் சித்தூர், திருப்பதி நிலையங்களுக்கு ரெயில் செல்லாது. காட்பாடி - ரேணிகுண்டா வழித்தடத்தில் பயணிக்கும்.இதேபோல் எர்ணாகுளம் - நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் (எண்:12645) வருகிற 22, 29, ஆகஸ்டு 5ம் தேதி ஆகிய நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும். இதனால் சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
பாலக்காடு - திருச்சி (16844) ரெயில் தினமும் காலை 6:30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சிரெயில் நிலையத்திற்கு மதியம் 1:32க்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது தினமும் மதியம் 2மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, இரவு 8:55க்கு பாலக்காடு வந்தடையும்.
திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ரெயில் நிலையம் இடையே தண்டவாள பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பாலக்காடு- திருச்சி (16844) ரெயில் திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி ரெயில்வே நிலையம் செல்லாது.
மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
- உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது.
திருப்பூர்:
அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி, மகளிரணி, பாசறை அமைத்தல் மற்றும் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், மின்கட்டணமும், குடிநீர் கட்டணமும் உயர்ந்து விட்டது. மொத்தத்தில் தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி வரும் 20-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி துணை செயலாளர் மூர்த்தி, வட்ட செயலாளர்கள் கணேசன், இம்மானுவேல், நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொங்குநகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் பி.கே.முத்து முன்னிலையிலும், கோல்டன்நகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன் முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மகளிருக்கு உரிமைதொகை ரூ.1000 வழங்குவதில் தகுதியானவர்களுக்கு என்ற ஒரு புதிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பப் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அரசே ஒரு தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கலுக்கு 2 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கொரோனா நிதியும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- போராட்டத்தில் தெற்கு அவிநாசி பாளையம் கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் தெற்கு அவிநாசி பாளையம் கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் ஏர் கலப்பை, மண்வெட்டி வைத்து 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொங்கலூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். அவிநாசி பாளையம் பத்மநாபன், தொட்டியபாளையம் சம்பத், ஆனந்த், அய்யம்பாளையம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், துணைப்பொதுச்செயலாளர் பார்த்தசாரதி , இனாம் நில விவசாயிகள் இயக்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் முருகேசன், சங்கத்தின் மாநில, மாவட்ட ஒன்றிய, நிர்வாகிகள், நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் திருஞானசம்பந்தன்,தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் புலவர் திருக்குமரன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
- எண்27 பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் சுண்டமேடு பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் சுண்டமேடு பகுதியில் 450 குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இப்பகுதி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர். எனவே சுண்டமேடு பகுதியில் இருந்து இடுவம்பாளையம் செல்ல காலை 8-30மணிக்கும் , மாலை 5மணிக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஏற்கனவே எண்27 பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
- திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது
- பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.
திருப்பூர்:
மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக, ஆண்டுதோறும் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் இன்று மாதம் தொடங்கியது.இதையொட்டி திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே, பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட உள்ளது.
சேவூர் அழகு நாச்சியம்மன் என்ற பத்ரகாளியம்மன் மற்றும் காமராஜ் நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில்களில் த்திருவிழா இன்று தொடங்கியது. மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு திரவியஅபிஷேக ஆராதனைகளும், அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து வாரந்தோறும் உபயதாரர்களால் கூழ் ஊற்றுதல் மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இன்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு, கிருத்திகை, பவுர்ணமி, பூரம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று (ஆகஸ்டு 11-ந்தேதி) காலை 10 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அதை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, சிறப்பு பஸ் இயக்க முடிவு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று மாத முதல் அமாவாசையையொட்டி தாராபுரம் அமராவதி ஆறு மற்றும் உடுமலையில் நீர்நிலைகளில் பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
- கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜூலை-18 ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழாவினை மாநில முழுவதும் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வண்ணமும், மேலும் அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ-மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது காலை 9.30 மணியளவில் திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகைப்படக்கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புகைப்படக்கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இந்த தமிழ்நாடு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தங்காய்புதூர், மீனாட்சி வலசு மற்றும் சின்னாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- அந்தப் பகுதியில் அதிகளவில் மான்கள் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கண்டியன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட தங்காய்புதூர், மீனாட்சி வலசு மற்றும் சின்னாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கோபால் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அந்தப் பகுதியில் அதிகளவில் மான்கள் நடமாட்டம் இருப்பதாகவும், ஆனால் சிறுத்தை அந்த பகுதியில் இருப்பதற்கான கால் தடங்கலோ, வேறு எந்த அறிகுறியும் இல்லை என வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் தெரிவித்தனர்.
- நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
- ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
காங்கயம்:
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
ராசாத்தாவலசு துணை மின்நிலையம்: ராசாத்தாவலசு, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
வெள்ளக்கோவில் துணை மின்நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.
தாசவநாயக்கன்பட்டி துணை மின்நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.
ஊதியூா் துணை மின்நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.
உடுமலை:
உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தர் சார்பில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியருக்கு எரிவாயு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் கே.கல்யாணி தலைமை வகித்தார். எரிவாயு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் கல்யாணி, செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன் முன்னிலையில் வாசிக்க மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் எரிவாயு சிக்கனம் , எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் சிலிண்டரை எளிதாக பெறுவது குறித்தும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஐந்து கிலோ சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை சுலபமாக பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது. பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் விவேகானந்தன் கலந்துகொண்டு மாணவர்கள் உழவர் பாதுகாப்புத் திட்ட கல்வி உதவித் தொகையை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
எரிவாயு குறித்த வினாடிவினா நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடுமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் வானொலி தங்கவேலு, சமூக ஆர்வலர் விஜயகுமார்,மணி மற்றும் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காரில் இருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
- இவர்கள் கூட்டாக சேர்ந்து, பூட்டியுள்ள வீடுகளை பார்த்து கொள்ளையடித்து செல்லும் நோக்கத்தில் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சின்னக்கரைபகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் 3 பெரிய பட்டாகத்திகள் இருந்தன. இதுகுறித்து காரில் இருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது காரில் இருந்த 4 பேர் தப்பி சென்றனர். காரின் ஓட்டுநர் மட்டும் சிக்கிக் கொண்டார். மேலும் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களையும் போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த ரஜினிகாந்த் மகன் ரோகன்(வயது 22), பாளையங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் சுரேஷ்(23) கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த முக்கூர் சாமி மகன் முத்துகிருஷ்ணன்(22) அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் அண்ணாமலை(22) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கூட்டாக சேர்ந்து, பூட்டியுள்ள வீடுகளை பார்த்து கொள்ளையடித்து செல்லும் நோக்கத்தில் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 கார், 3 மோட்டார் சைக்கிள்கள், 3 பெரிய பட்டாக்கத்திகள், ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இவர்களுடன் வந்து தப்பியோடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள் மீது கோவை, சூலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில், திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
- தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அவினாசி,ஜூலை.16-
அவினாசியை அடுத்து அணைப்புதூர் எருமைக்காடு தோட்டம்கணபதிசாமி காம்பவுண்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 38). இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் .இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டு ஆகிறது. இவர்களது மகள் கோவையில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது மனைவி தனது மகளைப் பார்க்க கோவைக்கு சென்று விட்டார். ராஜேந்திரன் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. எனவே வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே பார்த்தபோது ராஜேந்திரன் தீக்காயங்களுடன் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.விசாரணையில் ராஜேந்திரன் தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தில் நைலான் கயிறு சுற்றி இருந்தது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.






