என் மலர்
திருப்பூர்
- காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.
- யானை தாக்கியதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, காட்டுப்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த யானை ஒன்று, ஒரு மாட்டை தாக்கியது. இதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.
இதனால் கால்நடை வளர்க்கும் மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் யானையின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை முன்னாள் ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சென்று சோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது அவர் கூறியது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது சிறுமியின் தாயார் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸ்(வயது 65) என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். பள்ளி விடுமுறை நாளின் போது அந்த சிறுமி ராணுவ வீரர் வீட்டிற்கு சென்று சிறு சிறு வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.
அவ்வாறு வேலைக்கு செல்லும்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸ் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதன் மூலம் அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமானதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் லாரன்சை கைது செய்தனர்.
- பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது
- 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான இந்த பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 52 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.91 ஆயிரத்துக்கு 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- மேற்கூரை விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் சுரேஷ்குமார்(வயது 38). இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, மேற்கூரை விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்றிருந்த மனைவி வீடு திரும்பிய போது கணவர் சுரேஷ்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயம் அடைந்தார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 58). சம்பவத்தன்று இரவு பனப்பாளையம் பகுதியில் உள்ள கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம் - பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் நிஷாந்த் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம்.
- இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.
திருப்பூர்,ஜூலை.17-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கவுன்சிலிங், இன்று மற்றும் நாளை 18-ந்தேதி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து வகுப்புகள் துவக்கப்படும் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு வேளாண் மை பல்கலையில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. 4,000ம் இடங்களுக்கு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பெரும்பாலான இடங்கள் பொது கவுன்சிலிங் முறையில் சேர்க்கப்படுகின்றன. சிறப்பு ஒதுக்கீட்டின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இப்பிரிவில் 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு துறைக்கான முன்னுரிமை இடங்கள் 20 உள்ளன.
இவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்க தயார் நிலையில் உள்ளோம். முன்னாள் ராணுவத்தினருக்கான முன்னுரிமை அடிப்படையில் 20 இடங்கள் நிரப்ப தயாராக உள்ளோம்.
பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம். 200க்கு 200 மதிப்பெண் பெற்ற 3 பேர், வேளாண் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். 199.5 மதிப்பெண் பெற்ற 17 பேர் வேளாண் படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.
199 மதிப்பெண் பெற்றவர்கள், 60 - -70 பேர் உள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு முறையிலும் சேர்க்கை நடக்கும்.தொழில்கல்வி படித்த மாணவர்களுக்கு 240 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலும் தயாராகியுள்ளது.
பொது கவுன்சிலிங் இன்று மற்றும் நாளை ஆன்லைன் முறையில் நடக்கிறது. விருப்பத்தின் அடிப்படையில் முதலாவது சுற்று இட ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றம் செய்யவும், இந்த இருநாட்களில் வாய்ப்பளிக்கப்படும். 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இது முடிந்தவுடன், உடனடியாக பணம் செலுத்தி வகுப்புகளில் சேரலாம்.
விருப்பத்தின் பேரில் காத்திருப்பின்படி தகுதியுள்ள கல்லூரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இது இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முறையில் தேர்வு செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர்
- அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை
உடுமலை,ஜூலை.17-
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு கோடை கால மழை போதிய அளவு பெய்யாமல், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர். அவ்வகையில் கேரளாவில், பொரியல் தட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, குறைந்த தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் இச்சாகுபடியை ஆண்டு முழுவதும் மேற்கொள்கின்றனர்.
தற்போது கோட்டமங்கலம், மைவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இப்பகுதியில் விளையும் பொரியல் தட்டை, கேரளா மாநிலம் பாலக்காடு, மூணாறு, மறையூர் போன்ற பகுதிகளுக்கு அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.நடவு செய்து செடிகளுக்கு 50 நாட்கள் ஆன பிறகு காய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அறுவடை செய்யலாம்.ஏக்கருக்கு சராசரியாக 100 முதல் 150 கிலோ வரை ஒரு பறிப்பில் கிடைக்கும். அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை.கடந்தாண்டு போதிய விலை கிடைக்கவில்லை. ஓணம் பண்டிகை சீசனில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
முக்கிய சீசனில் கேரளா வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்து கொள்வதால் விற்பனை சந்தை பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
- பல்லடம் நகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும்.
- பல்லடம் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் 23வது ஒன்றிய மாநாடு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், துணைச் செயலாளர் ரவி, மற்றும் கட்சி நிர்வாகிகள் மூர்த்தி, ஜீவா, கணேசன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்த மாநாட்டில், பல்லடம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் கட்ட வேண்டும். பல்லடம் நகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன், மற்றும் ரத்த வங்கி, அமைக்க வேண்டும். நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை காப்பாற்ற மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அதிக மக்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்க ஆவின் பால் நிலையம் தொடங்கப்பட்டது
- ஆவின் பால் விற்பனை நிலையத்தை ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
தாராபுரம்:
தாராபுரத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் ரூ.3 லட்சத்தில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையத்தை ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து ைவத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் "தாராபுரம் வடக்கு பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு தனியார் பால் நிறுவனங்களை விட குறைந்த விலையில் பால் மற்றும் பால் பொருட்கள் கலப்படம் இல்லாமல் சுத்தமான முறையில் கிடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அதிக மக்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்க ஆவின் பால் நிலையம் தொடங்கப்பட்டது என்றார். இதையடுத்து அமைச்சர் அலுவலகத்தில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், மேலாண்மை இயக்குனர் கனகராஜ், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர் ஜெயராமமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வராஜ், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர அவைத்தலைவர் கதிரவன், நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரம் உயர்த்த வேண்டும்.
திருப்பூர்:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை முழுமையாக இயக்க வேண்டும், ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் ெரயில் நிலையம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாநகர செயலாளர் டி.ஜெயபால் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- 100-க்கும் மேற்பட்ட குடோனில் இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
- வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போராட்டம் நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் 85-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் பனியன் கட்டிங் வேஸ்ட் துணியில் இருந்து நிறம் வாரியாக சிறு, சிறு துணியை பிரித்து அதை மொத்தமாக வாங்கி ஓ.இ. மில்களுக்கு சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்கள். ஓ.இ.மில்களுக்கான முக்கிய மூலப்பொருளை வினியோகம் செய்யும் வியாபாரிகளாக உள்ளனர்.
திருப்பூர் டூம்லைட் மைதானம், நெசவாளர் காலனி, மங்கலம் பகுதிகளில் இருந்து பனியன் கட்டிங் வேஸ்ட் பிரிக்கப்பட்ட துணிகளை பெற்று 100-க்கும் மேற்பட்ட குடோனில் இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். நாளொன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கழிவுதுணிகளை ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஓ.இ.மில்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஓ.இ.மில்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று முதல் தொடர் வியாபார நிறுத்தம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தக இழப்பு ஏற்படுவதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
+2
- தரிசு நிலத்தில் சுமார் 66 கிலோ மீட்டர் தூரத்திற்கு களம் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
- 3-ம் சுற்று போட்டியில் அப்துல் வாஹித் என்பவர் ஓவரால் வின்னர் பட்டத்தை தட்டி ச்சென்றார்.
பல்லடம்:
காட் ஸ்பீட் நிறுவனத்தின் சார்பில் 2023ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்(பைக் ரேஸ்) போட்டிகள் 5 சுற்றுகளாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முதல் சுற்று போட்டி மங்களூரிலும், 2-ம் சுற்று போட்டி சிக் மங்களூரிலும் நடைபெற்று முடிந்த நிலையில் 3-ம் சுற்று போட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.
இப்போட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் எந்தவித தொந்தரவும் ஏற்படுத்தாமல் முறையாக அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றி தரிசு நிலத்தில் சுமார் 66 கிலோ மீட்டர் தூரத்திற்கு களம் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
இந்தியா முழுவதும் உள்ள முன்னணி வாகன நிறுவனங்களில் இருந்து 110 பைக் ரேஸ் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சவுமியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தரிசு நிலத்தில் முறையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒரு நிமிட இடைவெளியில் ஒவ்வொரு பைக் ரேஸ் வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். 66 கிலோ மீட்டர் தூரத்தை 56 நிமிடங்களில் கடந்து 3-ம் சுற்று போட்டியில் அப்துல் வாஹித் என்பவர் ஓவரால் வின்னர் பட்டத்தை தட்டி ச்சென்றார்.
தொடர்ச்சியாக 4-வது சுற்று போட்டி பூனேவிலும், 5-ம் சுற்று போட்டி நாசிக் நகரிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 சுற்றுகளிலும் அதிக புள்ளிகள் பெறும் பைக் ரேஸ் வீரர் தேசிய சாம்பி யன்ஷிப் பட்டத்தை வெல்வார் என தெரி விக்கப்பட்டுள்ளது.






