என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது.

    பல்லடம்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற அங்காளம்மன்கோவில், பொன்காளியம்மன் கோவில், கடைவீதி மாகாளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நேற்று சோலை லட்சுமி தாராபுரத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டார்.
    • ஞானசேகரனை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பழனிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் ஞானசேகரன் ( வயது 43). மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சோலை லட்சுமி ( 33). நேற்று சோலை லட்சுமி தாராபுரத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவருக்கு போன் செய்து ஞானசேகரன் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் ஞானசேகரனை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கோடை சீசனில் கம்மங்கூழ் தயாரிப்புக்காக கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
    • கம்பு சாகுபடி செய்து கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி கம்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தானிய தேவைக்காகவும் கால்நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கு

    றிப்பாக கோடை சீசனில் கம்மங்கூழ் தயாரிப்புக்காக கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும். எனவே இந்த சீசனை இலக்காக வைத்து பரவலாக வீரிய கம்பு சாகுபடி செய்து கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. கோடைகாலத்தில் கம்புக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    • 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர்.
    • சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ஊராட்சி அருள்புரம் பகுதியில் 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கோவிந்தராஜுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் இது குறித்து திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அருள்புரம் பகுதியில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வந்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(வயது 40), பிரேம்குமார்,(19) ஆகிய இருவரையும் பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கத்திரிக்காய் பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.900 வரை விற்பனை ஆகிறது.
    • கத்திரிக்காய் விலை கட்டுப்படியாகும் நிலையில் உள்ளது

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செடிகளில் இருந்து விவசாயிகள் கத்திரிக்காய் அறுவடை செய்து வருகின்றனர்.கத்திரிக்காய் விலை கட்டுப்படியாகும் நிலையில் உள்ளது.

    கோவை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் பொள்ளாச்சி பகுதி வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். தினசரி மார்க்கெட்டில் 18 கிலோ கத்திரிக்காய் பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.900 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்ய பூசாரி சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு காமாட்சியம்மன், முருகன், கருப்பராயன், உள்ளிட்ட சாமி சிலைகள் உள்ளது. இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்ய பூசாரி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கோவில் கதவு திறந்து கிடந்துள்ளது.

    உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த 8 கிலோ எடை கொண்ட கோவில் மணி, மற்றும் முருகன் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பித்தளை வேல் , மற்றும் கருப்பராயன் முன்பு இருந்த இரும்பு அரிவாள்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடம் சென்ற போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப் பகலில் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவசக்தி காலனி குப்பை கிடங்கை உடனே அகற்ற வேண்டும் என்றனர்.
    • அடிப்படைத்தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பெரியகோட்டை ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படைத்தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கே.ஜி., நகர் மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

    சிவசக்தி காலனி குப்பை கிடங்கை உடனே அகற்ற வேண்டும் என்றனர். இதில் அதிமுக., ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர் ராஜன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
    • கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்த மோகன்ராஜ்(வயது 31), திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்த உசேன் (35), அவரது சகோதரர் காதர்(40) மற்றும் கரூரை சேர்ந்த அருண் (25) ஆகியோர் தங்கியிருந்து பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அவர்கள் தங்கியிருந்த வீடு நீண்டநேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உசேன் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனே இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உசேனையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் தங்கியிருந்த அருண், காதர் ஆகியோரை காணவில்லை. இதனால் அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வேறு ஏதேனும் காரணமா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2பேரும் பிடிபட்டால் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த இடத்தில் தடயவியல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆய்வு செய்தார். இந்த கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.
    • விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் காலை உடல் பயிற்சி செய்வது வழக்கம்.

    இன்று காலை வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குமரன் ரோடு எம்ஜிஆர்., சிலை அருகே செல்லும் போது, குமரன் ரோட்டை கடந்து பார்க் ரோடு வழியாக செல்ல முயன்றார். அப்போது குமரன் ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். இதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது.

    வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் திடீரென தேவானந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.
    • மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    கோவையில் அமைச்சர் முத்துசாமியை விசைத்தறியாளர்கள் சந்தித்து, மின் கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும். தற்பொழுது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்து மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தனர்.

    விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் மின்துறை அமைச்சர், மின்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • பல லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்
    • பொதுக்குழு கூட்டத்திற்கு சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மங்கலம்:

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி, துணைசெயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலையில் கிளை சங்க பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிலுவை மின் கட்டணத்திற்கு வட்டி அபராதம் ஏதும் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்ககோரி ஒவ்வொரு விசைத்தறியாளரும் தனித்தனியாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்புவது , தமிழக அரசு 25 சதவீத மானிய விலையில் சூரியஒளி மின் உற்பத்தி தகடுகள் வழங்க வேண்டும்.

    குறைந்த கூலியின் அடிப்படையில் தொழில் செய்து வரும் பல லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வடமாநிலங்களில் இருந்து டப்பாக்களில் அடைத்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தல்.
    • கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்தி நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான விடுதி அருகே வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா மற்றும் போதை சாக்லெட் விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் பிரதான் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ¼ கிலோ கஞ்சா, 16 டப்பா போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வடமாநிலங்களில் இருந்து டப்பாக்களில் அடைத்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதேபோல் அவினாசி போலீசார் பழங்கரை பஸ் நிலையம் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரேம் சிங் ரின்வா (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

    ×