என் மலர்
திருப்பூர்
- டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
- விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடைக்குள் புகுந்தது.
இதில் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் குண்டடம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் முத்துச்சாமி(65) சுப்பன் (70) மற்றும் லாரி டிரைவர் ரத்தினகுமார் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகேந்திரன், மாணிக்கம், செல்லமணி ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
- அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில், மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில், திருப்பூர் மாநகராட்சி காந்தி வித்யாலயா பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
மேலும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. பேரணியை தொடங்கி வைத்ததுடன், கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் அறியும் வண்ணமும், மேலும்அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிமாணவ- மாணவிகள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு நடைபேரணியை காந்தி வித்யாலயா பள்ளியில் இருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
இப்பேரணி மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்தி வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த சுமார்250 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, தமிழ் மொழியின் பெருமையும், தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளையும் உரக்கச் சொல்லி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அமைக்கபட்டுள்ள தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்த வரலாற்றுப் பதிவுகள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடப்பட்டது.
மேலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது.குறிப்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்ப ட்டுள்ள இப்புகைப்பட கண்காட்சி யானது இன்று முதல் 23-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாள்தோறும் காலை 9:30 மணி முதல் மாலை5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட ஏ ற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் துணை மேயர் பாலசுப்பிர மணியன், மாநகராட்சி 4-ம்மண்டலத்தலைவர் இல.பத்ம நாபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்பாலமுரளி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (திருப்பூர்) பக்தவச்சலம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளும் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தி செல்வதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
- சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடினான்.
தாராபுரம்:
தாராபுரம் பழனி ரோட்டில் தாசநாயக்கன்பட்டி அருகே தனியார் டெக்ஸ்டைல் மில் உள்ளது . இந்த மில்லில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர் தொழிலாளர்களுக்கான குவாட்டர்ஸ் அதே பகுதியில் உள்ளது.
ஒடிசா மாநிலம் சாந்தாமாஜி என்பவர் குடும்பத்துடன் குவாட்டர்ஸ்ஸில் தங்கிவேலை செய்து வருகிறார. மதிய உணவு வேளையில் சாந்தாமாஜி வீட்டுக்கு சென்றபோது அவரது மூன்று வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடினான்.
அப்போது அங்கு இருந்த கழிவு நீர் தொட்டி மீது ஏறி இருவரும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென தொட்டி மூடி உடைந்து இருவரும் கழிவு நீர் தொட்டியில் விழுந்தனர். அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக இருவரையும்மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தாமாஜியின்3 வயது மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர். மற்றொரு சிறுவனுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த சிறுவனின் பிணம் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தாராபுரம் அலங்கியம்எஸ்.ஐ சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சி நகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்கிறார்கள். கவுரவ விருந்தினர்களாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவுக்கு வருபவர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்கிறார். முடிவில் பொதுச்செயலாளர் திருக்குமரன் நன்றி கூறுகிறார். விழாவில் சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார் ராமசாமி, இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
- தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் மராண்டி(45). இவர் ஊட்டியில் உள்ள எஸ்டேட்டில் தனது குடும்பத்தினருடன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஊட்டியில் வாடகைக்கு வீடு ஒன்றை பிடித்து தங்கி இருந்தார்.
இதனையடுத்து தனது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று ரயில் மூலம் கோவை வந்தார். அதிகாலை 4 மணி அளவில் ரயில் திருப்பூர் அடுத்த கூலிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பாத்ரூம் செல்வதற்காக பங்கஜ் மராண்டி வந்துள்ளார்.
அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.நீண்ட நேரமாகியும் அவர் இருக்கைக்கு திரும்பாததால் மனைவி மற்றும் குழந்தைகள் ரயில் முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை கோவை வந்ததும் கோவை ரயில்வே போலீசில் தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது அது பங்கஜ் மராண்டி என்பது தெரியவந்தது.பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
- ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது
ஊத்துக்குளி, ஜூலை.19-
ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது. ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் என். பிரபு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய தலைவர் பி. பி.பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார்.
மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என். கணேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலன், கலாமணி உள்பட பல கலந்து கொண்டனர்.
- அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
- கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம்- பெத்தாம்பாளையம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியே மோட்டர் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மகன் அக்பர் சேட்(37) பல்லடம் மங்கலம் ரோடு இளங்கோ விதியைச் சேர்ந்த சதாம் புதின் மகன் அசாருதீன்(22) என்பதும் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து 89 கிலோ புகையிலை பொருட்களையும், அதனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- டி.டி.வி.தினகரன் தலைமையில் தமிழக அரசியல் வரலாறு எழுதப்பட வேண்டும்.
- கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும்,மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கினார்.
திருப்பூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பாலுச்சாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான சி.சண்முகவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது " அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும் உறுதியாக எடுத்து வருகிறார். தமிழக மக்களுக்கான பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்" என்றார். மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி பேசும்போது, டி.டி.வி.தினகரன் தலைமையில் தமிழக அரசியல் வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் துணை செயலாளர் புல்லட்ரவி, பொருளாளர் முத்துக்குட்டி, இணைச் செயலாளர் வினுபிரியா, துணை செயலாளர் கீதா, பொதுக்குழு உறுப்பினர்கள் நாகேந்திரகுமார், சத்யா, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, சுதாகர், சிவசக்தி, முருகன், ராஜாங்கம், பாலு, ஹைதர் அலி, முத்துராஜன், நாகேஷ், சதீஷ், ஆனந்த், இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜல்லி, எம்சாண்ட் விலை உயர்வை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏழாவது மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 7-வது மண்டலத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் சங்க தலைவர் ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். மண்டல செயலாளர் எஸ்.ஸ்டாலின்பாரதி அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநிலத் தலைவர் டி.ராஜேஷ், மாநில துணைத்தலைவர் விஜயபானு, மாநில மக்கள் தொடர்பு அலுவலர் சரவணராஜா, மாநில உதவி தலைவர் அறிவழகன், மாநில முன்னாள் தலைவர் தில்லைராஜன், மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.பொன்னுசாமி மற்றும் 7-வது மண்டலத்தைச் சார்ந்த திருப்பூர், கோவை, உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காங்கயம் பொறியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். திருப்பூர் சங்க செயலாளர் ஆர்.பிரகாஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லி, எம்சாண்ட் விலை உயர்வை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கோவை சங்கத்தலைவர் ராமகிருஷ்ணன், உடுமலை சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், தாராபுரம் சங்கத் தலைவர் முருகானந்தம், பொள்ளாச்சி சங்கத் தலைவர் ஜவகர் பாண்டியன், மேட்டுப்பாளையம் சங்கத் தலைவர் கார்த்திகேய பிரபு, காங்கயம் சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட ஏழாவது மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
- முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில்முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை , ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் என கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் வேலை தேடுபவர்களும் வேலை அளிப்பவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.
தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. இந்த பணி முற்றிலும் இலவசமானது.
மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும்.
- பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தீர்மான நகல்களை விவசாயிகள் சிலர் நேரில் சென்று வாய்மொழியாக கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும். வாய் மொழியாக கேட்டால் தர இயலாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தீர்மான விவரங்களை பார்வையிட்ட விவசாயிகள் பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






