என் மலர்
திருப்பூர்
- போக்குவரத்து, காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்
பெருமாநல்லூர்:
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் போக்குவரத்து, காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெருமாநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, திருப்பூர் சாலை, ஈரோடு சாலை, அவிநாசி சாலை வழியாக கொண்டத்து காளியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினகரன், காவல் உதவி ஆய்வாளர்கள் அன்பரசு, உமா மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கேஎம்சி., பப்ளிக் பள்ளி, சக்தி விக்னேஸ்வரா, விக்னேஸ்வரா, தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.
- பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள தாண்டாகவுண்டன்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த காளிமுத்து மகன் திலோத் (வயது 22), கரூரை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் சண்முகவேல் ( 23),திருச்சியை சேர்ந்த ரவி மகன் விஷ்வா ( 22), செந்தில்குமார் மகன் அறிவழகன் ( 22) ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்போனை பறித்து சென்றதாக தெரிகிறது.
இது குறித்து பாரத்சகினி பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில்சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரி, மற்றும் போலீசார் அன்பரசன், கார்த்திகேயன்,மயில்சாமி,சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பாமாயிலை அரசின் மானியத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 100 நாள் வேலை திட்ட வேலை ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:
டெல்லியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் கைலாஷ் சௌத்திரி, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து,மகளிர் அணி தலைவி ராஜரீகா, கோவை மாவட்ட பொருளாளர் மகாலிங்கம்,அதிமுக., திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென்னை விவசாயிகள் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் இருக்கின்ற தண்ணீரை கொண்டு தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அதனால் தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தென்னை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அதே சமயம் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை அரசின் மானியத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அருகில் உள்ள கேரளாவில் தேங்காய் எண்ணெய் வீட்டு சமையல், நொருக்கு தீனி உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
நாடு முழுவதும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மட்டும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேகதாது நதியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பனை கட்ட திட்டமிட்டுள்ளதை தடுக்க வேண்டும் என்றதற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்றும் காவேரி நதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் ஆணையிட மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். 100 நாள் வேலை திட்ட வேலை ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இது குறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், திருப்பூர்மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.
- ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.
பல்லடம்:
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, மேலாளர் சண்முகராஜா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர்.
காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.இதில் வியாபாரிகள் கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் 14 கடைகளும், தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளும், தலா ரூ. 11ஆயிரம் முதல் 11.500 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டது.
இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இளம்வயதில் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார்.
மதுரையில் ஆகஸ்ட் 20 ந் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க திருப்பூர் அ.தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாநகரில் ஆட்டோக்களில் விளம்பர பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார். மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணிகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கட்சி நிர்வாகிகள் கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், சி.எஸ்.கண்ணபிரான், ஆண்டவர் பழனிசாமி, சின்னசாமி, யுவராஜ் சரவணன், தனபால், அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்
- ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வர்த்தகர் பிரிவு மாநில தலைவரும் எம்.பி.யுமான விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவின் மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை சோனியா காந்தி இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தமிழகத்தின் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி அமைந்திட அனைவரும் மாநிலத் துணைத் தலைவர் ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது
- தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் திருப்பூர் டவுன் தெற்கு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட தனியார் தொழிற்சாலையில் மின்சார மீட்டரை எரித்து மின்சார கட்டணத்தை குறைத்து மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது
தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது .இதில் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துமின்சார வாரியம் சார்பில் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த மோசடியில் ஈடுபட்ட போர்மேன் பாபு முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
- நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.
- திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருபவர் அறிவழகன் . இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தாடிக்காரமுக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அறிவழகன் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதினர். இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சாலையில் விழுந்தனர்.
லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சாலையில் இருந்து எழுந்த இருவரும் போலீஸ்காரர் அறிவழகனைப் பார்த்து கடுமையாக திட்டியதோடு நான் யார் தெரியுமா? யார்கிட்ட பேசுற, நீ எந்த ஸ்டேசன்ல வேல பாக்குற சொல், நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.
ஒருகட்டத்தில் வாலிபர் ஒருவர், நான் நாளைக்கு பாரின் போகனும், இப்படியே எப்படி செல்வது, நீயே சொல்லு, நீ எந்த ஸ்டேசன்ல இருக்க என தனது மொபைலில் வீடியோ எடுத்தபடியே போலீஸ்காரர் அறிவழகனை மிரட்டும் வகையில் பேசினார் .
இதையெல்லாம் கேட்டபடி பொறுமையாக பைக்கில் அமர்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் அறிவழகன் செய்வதறியாது திக்குமுக்காடினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நைசாக போலீஸ்காரர் அறிவழகனை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
போலீஸ் உடையில் இருந்த நபருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னாவது என அப்பகுதியில் இருந்த சிலர் பேசிக்கொண்டனர். போலீஸ்காரரை மிரட்டும் வகையில் பேசிய நபர்கள் இருவரும் யார் என திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- 101 விவசாயிகள் 75 ஆயிரத்து 13 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.37லட்சத்து 31ஆயிரத்து 403க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.
நேற்று வியாழக்கிழமை 101 விவசாயிகள் கலந்து கொண்டு 75 ஆயிரத்து 13 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.56.80 க்கும், குறைந்தபட்சம் ரூ.46.44க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37லட்சத்து 31ஆயிரத்து 403க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- குவாரிகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்களா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
- விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது குவாரிகளின் தற்போதைய நிலைமை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்களா? சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா?
விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய் சிங் சிவக்குமார், துணை தாசில்தார் சுப்பிரமணியம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
- கடந்த சில நாட்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும்.
இதற்கிடையே பல்லடம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அந்த விளக்குகள் சில நாட்கள் எரிவதும், அதற்குப் பின் பழுதாவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் நால்ரோடு பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






