என் மலர்
திருப்பூர்
- தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.
- கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
மூலனூர்
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் சந்தை நடந்தது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து இருந்தது.
இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
மூலனூர் பகுதியில் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- புதிய பஸ் நிலைத்திற்குள் உள்ளே வரும் பஸ்கள் மிக வேகமாக வருவதால் காத்திருக்கும் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
அவினாசி
அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-
கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):-
அவினாசி பு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். வார்டு பகுதியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். அவினாசி முழுவதும் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பல கூட்டங்களில் வலியுறுத்தியும் பயனில்லை. பேரூராட்சி பகுதியில் நடைபெறும் வேலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதே கிடையாது.
தங்க வேல் (3-வது வார்டு):-
மாகாளியம்மன் கோவில் அருகில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மண்கொட்டி அந்த இடத்தை சமன்படுத்த வேண்டும்.
கார்த்திகேயன் (11-வது வார்டு):-
சங்கமாங்குளம் வீதியில் பள்ளி, குடியிருப்புகள் நிறைய உள்ளது. இங்கு சாக்கடை கால்வாய் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே அங்கு வடிகால் அமைக்க வேண்டும். புதிய பஸ் நிலைத்திற்குள் வரும் பஸ்கள் மிக வேகமாக வருகின்றன. இதனால் அங்கு காத்திருக்கும் பஸ் பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே பஸ் நிலைய நுழைவு வாயிலில் வேகத்தடை அமைக்க வேண்டும்.தலைவர்: வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை கால்வாய் அமைக்கப்படும்.
பருக்கதுல்லா (15-வது வார்டு):-
அவினாசி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால் ஆடு, கோழிகளை கடிப்பதுடன் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.எனவே தெருநாய்களை பிடிக்க வேண்டும்.சுகாதார ஆய்வாளர் :தெருநாய்களை பிடிக்க அதற்கு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வந்தவுடன பிடிக்கப்படும்.
இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் பேசினர்.
- சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளினால் விபத்துகள் ஏற்படுவதாகவும் புகாா் அளித்தனா்.
- கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.
வெள்ளக்கோவில்
வெள்ளக்கோவில் பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரனிடம் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா் கள ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:- வெள்ளக்கோவில் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிய கூடாது. உப்புப்பாளையம் மேற்கு, மு. பழனிசாமி நகா், காமராஜபுரம், சீரங்கராய க்கவுண்டன்வலசு, இந்திரா நகா், கச்சேரிவலசு, அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மாடுகள், வெள்ளாடுகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன.
கால்நடைகளால் பெரும் விபத்து ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில் இனி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் பொது சுகாதார சட்டம் 1939 ன்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.
- அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது.
உடுமலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன்(தளி) ,போதை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
அதைத் தொடர்ந்து காணொளி வாயிலாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் என்.சி.சி, கல்லூரி மாணவர்கள், போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர். பேரணி கல்லூரியில் இருந்து உடுமலை திருமூர்த்திமலை சாலையை சென்றடைந்து மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ்(சட்டம்ஒழுங்கு), சந்திரமௌலி(மதுவிலக்கு)உள்ளிட்ட போலீசார், மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ப.விஜயா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் ராசேந்திரன்,கார்த்திகா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம், தளி, அமராவதிநகர், கணியூர் உள்ளிட்ட காவல் சரக பகுதியில் 20 இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சம்பந்தமான ஒளிபரப்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது. இந்தப் பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் போலீசார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக் கூறியதுடன் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
- சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது
- இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது.
தாராபுரம்
தாராபுரம் பகுதியில் சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மாலையில் 3 மணிக்கு மேல் கருமேகம் சூழ்ந்து ஜில்லென குளிர்காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழை மெல்ல தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக பொழிந்தது.
மழை மாலையில் 4மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை சூறாவளி காற்றுடன் பெய்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக அலங்கியம் சாலையில் மழை நீர்தேங்கியது. அந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.
அதே போல் மூலனூர், போளரை, கரையூர் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கால்நடைகளுக்கு போதுமான புற்கள் காடுகளில் வளர தொடங்கி விடும் என்றும், இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயில் குறைந்து இதமான காலநிலை நிலவியதுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் உஷ்ணத்தில் தவித்த மக்கள் உற்சாகமடைந்தனா்.
பின்னா் இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது.
- குழந்தைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவத்துடன் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
- அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள், குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவத்துடன் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை போதுமான உயரத்தில் உறுதியான சுவர் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைவிடப்பட்ட குவாரி குழிகளை சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் கட்டுமான குழிகள், அகழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைக்கவும், ஓட்டுனர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
- சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மங்கலம்
சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணிக்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வனிதா, வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவ,மாணவிகள் சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.இந்த பேரணியானது சாமளாபுரம் -லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் பள்ளி வளாகத்தில் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப்பொருளின் தீமைகள் குறித்து மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, மைதிலிபிரபு , லிட்ரசி பள்ளியின் ஆசிரியர்கள் , ஏ.வி.ஏ.டி.பள்ளியின் ஆசிரியர்கள் , மங்கலம் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
- கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை.
உடுமலை:
உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குடிநீர் திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குளறுபடிகள் காரணமாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆவேசம் அடையும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.அந்த வகையில் நேற்று ஆர். வேலூர் ஊராட்சியில் பூலாங்கிணறு குடிநீர் திட்டத்திற்கு வால்வு பொருத்துவதற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வால்வு பொருத்தக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சீரான முறையில் குடிநீர் வழங்குமாறும் தெரிவித்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை. பழைய பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கு தகுந்தவாறு குடிநீர் வழங்குகிறார்கள்.அது மட்டுமின்றி குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள பழைய வால்வை அகற்றிவிட்டு அளவு சிறியதாக உள்ள வால்வை பொருத்துகிறார்கள்.
இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தனர்.
- அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
- போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
உடுமலை:
உடுமலை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அங்கு வருகை தந்த உடுமலை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அலுவலகப்பணிக்கு இடையூறு செய்ததுடன் கூச்சல் போட்டு ரகளை செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலை போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த போலீசார் அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து சார்பதிவாளர் கணேசன் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார்.அதன் பேரில் மனுஏற்பு ரசீது பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.இந்த சம்பவத்தால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டதுடன் கச்சேரி வீதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
- சுமார் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியை சேர்ந்த சுமார் 70 வயது மூதாட்டி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் பிரபாகரன் (38), என்பவர் கடந்த 9ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது.
- பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையம் அருகே, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக பஸ் பின்புறமாக மோதியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பயணிகள் உள்பட, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குழந்தைகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில், அனுசுயா (63), பாருண் (29), நவீன் (23), ஹென்சா (1), ஷிவா பாத்திமா (7), நவ்ஷத் (30), யமுனா (8), ஆகியோர் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கி விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது. ஓட்டுனர்களின் அலட்சியத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது.
- முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது. இந்த உரக்கிடங்கு வளாகத்தில் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., துணை செயலாளர் கே.ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், செம்மாண்டம்பாளையம் சக்திகுமார் ,நகராட்சி பொறியாளர் திலீபன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.






