என் மலர்
திருப்பூர்
- மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்றது.
- மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.
திருப்பூர்:
தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வழக்குரைஞா்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
திருப்பூர்,ஆக.13-
திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியங்கள், சாமளாபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சாமளாபுரம் பேரூராட்சி, பல்லடம் மற்றும் பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், குடிநீா் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்
- பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 88 திருக்கோவில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படாத கோவில்களுக்கு உறுப்பினர்களை நியமித்து விரைவில் நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால்தான் திருக்கோவில்களில் இருக்கக்கூடிய துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து குடமுழுக்கு நடைபெறாத திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கும் மற்றும் பராமரிக்கப்படாத திருக்கோவில்களை மேம்படுத்தும் பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும். நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில்களை நல்ல முறையில் பராமரித்து கோவில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கே வரக்கூடிய பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உரிய முறையில் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு அந்த கோவில்களிடம் ஒப்படைத்து அந்த கோவில்களுக்கு கூடுதலாக நிதிகளை பெற்று சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் இந்த நியமன ஆணைகளை பெற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோவில் நல்ல முறையில் பராமரித்து செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெய தேவி, அண்ணக்கொடி,திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், காங்கேயம் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நாளை 14-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது.
- தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும்.
திருப்பூர்:
பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் - தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்ககம் இணைந்து நடத்தும் திருப்பூர் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை 14-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோயம்புத்தூர் ,திருப்பூர் ,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது.
தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்என்சிவிடி.எஸ்சிவிடி., திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8,10,11மற்றும் 12-ம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்கள் அறியும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், எண்- 115, 2வது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி, பழையபேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் என்ற முகவரியிலும், இம்மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை ( திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ) ( 9499055695 ,0421-2230500, 9894783226 , 9499055700, 9499055696, 9944739810 , 9442178340 , 9842481456 ,770843777 , 9442651468) ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
தாராபுரம், ஆக. 13-
தாராபுரத்தில் புதிதாக 15-வது மத்திய நிதி திட்டத்தின் சாலை நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும், சாக்கடை ரூ. 22 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு சாக்கடை மற்றும் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர துணை செயலாளரும் கவுன்சிலருமான கண்ணன், நகர அவைத்தலைவர் கதிரவன் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.
- ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.
திருப்பூர்
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.தற்போது அவர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.
அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, கோவை, ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
- ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர்.
- வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்கு பெற்ற பவள கொடி கும்மியாட்டம் நடைபெற்றது .
இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பவளக்கொடி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் பாடினர். குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர். சிறு வயது முதல் 50 வரையிலான ஆண்கள், பெண்கள் உலக சாதனை நிகழ்ச்சிக்காக பாரம்பரியமான உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். வள்ளி கும்மியாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
- லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
- கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த போதிய அளவு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் வெயில் சற்று கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை குறிப்பு விவரம் வருமாறு:-
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை 36 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.திருப்பூரில் வரும் வாரம் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு.சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல் 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். ஐந்து மாதங்களுக்கு மேலான வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.
தற்போது நிலவும் வானிலையால் கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த வாய்ப்புள்ளது. போதிய அளவு சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் மண் வளம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
- தற்போது உழவன் மொபைல் செயலியிலும், குடிமங்கலம் வட்டார தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை
உடுமலை
தமிழக அரசு உழவன் மொபைல் செயலி வாயிலாக விவசாயிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.இதில் புதிதாக விவசாயிகள் தங்கள் மண் வளத்தை தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மண் வளம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம், சர்வே எண், நில உரிமையாளர் பெயர், மொபைல்போன் எண் ஆகிய தகவல்களை பதிவிட்டால் அந்த விளைநிலத்திலுள்ள மண்ணின் ஊட்டச்சத்து நிலை உள்ளிட்ட மண் வள அட்டையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சேவையில் குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட எந்த வருவாய் கிராமமும் இடம் பெறவில்லை. இதனால், அவ்வட்டார விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வேளாண்துறை சார்பில் மண் வள அட்டை வழங்க சில ஆண்டுகளுக்கு முன் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அப்போதே பல குளறுபடிகள் நிலவியது.தற்போது உழவன் மொபைல் செயலியிலும், குடிமங்கலம் வட்டார தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை.
இது குறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து அனைத்து கிராமங்களின் தகவல்களும் துல்லியமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தென்னை நார், கோகோ பித் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- 95 சதவீதம் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தான் இயங்குகின்றது.
உடுமலை:
தென்னை நார் தொழிற்சாலைகளை, வெள்ளை நிற பிரிவில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்குரிய தீர்வை எதிர்பார்க்கிறோம் என கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் தென்னை நார், கோகோ பித் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தொழில் வெள்ளை நிற பிரிவில் இருந்து ஆரஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளை நிற பிரிவிலேயே தொடர வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தென்னை நார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுதாகர் கூறியதாவது:-
தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென்னை நார் தொழிலால் மாசு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் சென்றன. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு வெள்ளை நிற பிரிவில் இருந்து ஆரஞ்ச் பிரிவுக்கு இத்தொழிலை மாற்றியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டதால் வெள்ளை நிற பிரிவில் தொடர்கிறது. கடந்த 6 மாதத்துக்கு முன் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி வெள்ளை, பச்சை, ஆரஞ்சு என 3 வகைகளாக பிரிக்கலாம் என கருத்து கேட்டு தெரிவிக்க தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் 2 நாட்களுக்கு முன் சென்னையில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது.
அதில் தென்னை நார் தொழில்கள் 95 சதவீதம் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தான் இயங்குகின்றன. எனவே தொழில் வெள்ளை நிற பிரிவுக்கு மாற்ற வேண்டும்.5 சதவீதம் மட்டும் ரசாயனம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆரஞ்ச் நிறத்துக்கு மாற்றலாம். இது குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு அமைச்சர் பரிசீலனை செய்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடைக்காரா்கள் தெரிவித்தனர்.
- மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்
பல்லடம்
கொரேனா கால கட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் கடைகளை மூடிய 204 கடைக்காரா்களுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:-
பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான அறிஞா் அண்ணா பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், அண்ணா வணிக வளாகம் ஆகியவற்றில் மாத வாடகைக்கு கடைகளை எடுத்து நடத்தி வந்த 204 கடைக்காரா்கள் கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் தங்களுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் எடுத்து கூறினாா்.இதையடுத்து 2020 ம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் 2021 ம் ஆண்டு மே, ஜூன் என மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதன் மூலம் பல்லடம் நகராட்சியில் 204 கடைக்காரா்கள் தற்போது பயன் அடைகின்றனா். அவா்களுக்கு ரூ.1கோடியே 45 லட்சத்து 42ஆயிரத்து 260 வாடகை தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இத்தொகையை பல்லடம் நகராட்சி நிா்வாகமே ஏற்றுக்கொள்கிறது என்றாா்.
- சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.
- விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன
பல்லடம்
பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.ஆய்வின்போது, குவாரிகளின் தற்போதைய நிலை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனரா, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமாா், மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியம், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், கனிம வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.






