என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா முன்னிலை வகித்தார்.
    • பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வழக்கறிஞர் சங்கம், மெல்வின் ஜோன்ஸ் அரிமா சங்கம், மற்றும் மருத்துவமனைகள், அக்குபஞ்சர் சிகிச்சை மையம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமுக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி மேகலா மைதிலி தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா முன்னிலை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.
    • 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று சந்திக்க வருமாறு அழைப்பு வந்துள்ளதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சார்பில், தேங்காய்க்கு உரிய விலை வேண்டும், கொப்பரை தேங்காய் ஒன்றுக்கு ரூ.140 வழங்க வேண்டும், 35 ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற கள்ளுக்கான தடையை நீக்கி அனுமதி தர வேண்டும், பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை கவர்னரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தனர். கவர்னர் தரப்பிலிருந்து நாளை 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று சந்திக்க வருமாறு அழைப்பு வந்துள்ளதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னருக்கு அனுப்பி, சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். சுதந்திரதினம் அன்று மாலை சந்திக்க நேரம் ஒதுக்கி கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ளது. எனது தலைமையில் 5 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கவர்னரை சந்திக்க உள்ளோம். அப்போது எங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், பல்லடம் நகராட்சி 2 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ராஜசேகரன் தலைமையில் 14வது வார்டு பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், தாமோதரன் மற்றும் கவின்,ஆர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிககள் ஸ்டிக்கர்களை விநியோகம் செய்தனர்.
    • சிலர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர், செல்போன் ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை,அதிமுக ., நிர்வாகிகளுக்கு பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் நடராஜன் வழங்கினார்.

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் தண்ணீர் பந்தல் ப.நடராஜன், சென்னியப்பன் ,பரமசிவம், வைஸ் முத்துக்குமார், ஆறுமுகம், சுப்ரமணியம், மங்கையர்க்கரசி கனகராஜ், சதீஷ்குமார், இச்சிப்பட்டி நாச்சிமுத்து, கிட்டுசாமி, வேலுச்சாமி, நெய்க்காரர் மணி மற்றும் ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் பலர் இணைந்தனர்.

    • உடல்நிலை பாதிப்பு காரணமாக மாணவி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி எம். நாதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கந்தேஸ்வரி (வயது 14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த கந்தேஸ்வரி, இறைவணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆசிரியர்கள் மீட்டு அவிநாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கந்தேஸ்வரி உயிரிழந்தார்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் என 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்குள் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    அதேபோல் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
    • சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி கடைகள் உள்ளது. இதன் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சிகரெட் புகைத்து விட்டு குப்பைகளின் மேல் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மளமளவென பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம் - பக்கம் உள்ள வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடம் வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, கத்தரிக்காய் ரூ.55, பீர்க்கங்காய் ரூ.50,பெரிய வெங்காயம் ரூ.25 ,சின்ன வெங்காயம் ரூ. 55, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, புடலங்காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.200, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.60, பச்சை மிளகாய் ரூ.80, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே உள்ள காவிலிபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் , எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர், சிவன்மலை, படியூர், பாப்பினி, வீரணம்பாளையம் மற்றும் தம்மரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அய்யனாரப்பன் குட்டை புனரமைக்கும் பணி, ரூ.1.80 லட்சம் மிதிப்பீட்டில் ரெட்டிபாளையம் காலனியில் ஆயில் மில் அருகில் 1-வது குறுக்கு வீதியில் சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி, ரூ.9.10லட்சம் மதிப்பீட்டில் கத்தாங்கன்னியில் புதிய கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி , ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டிபாளையத்தில் புதிய நியாய விலைக்கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படியூர் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கயம் யூனியன் சேர்மன் மகேஸ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், வார்டு உறுப்பினர் சிவகுமார், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
    • தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மாநகர காவல்துறை சார்பில் பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

    சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கொண்டு வரும் உடைமைகளை எந்திரத்தின் வழியாக ஸ்கேன் செய்து பார்க்கும்போது உள்ளே, தடை செய்யப்பட்ட பொருட்கள், போதை பொருட்கள் இருப்பதை கண்டறியும் வகையில் கருவி நிறுவப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறும்போது, "தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டறியலாம்" என்றார்.

    • வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார்.
    • தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் இருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இவருடைய வீட்டில் ஆட்டோ டிரைவர் வீரமணிகண்டன் (34) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் வீரமணிகண்டன் இருந்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அவரிடம் வாடகை கேட்டு சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வீரமணிகண்டன் கடந்த 1-ந் தேதி தீக்குளித்து இறந்தார்.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வீட்டு உரிமையாளர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்தநிலையில் சிவக்குமாரை தெற்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×