என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி
கோரிக்கைகளை விளக்க கவர்னருடன் நாளை விவசாயிகள் சந்திப்பு
- சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.
- 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று சந்திக்க வருமாறு அழைப்பு வந்துள்ளதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பல்லடம்:
கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சார்பில், தேங்காய்க்கு உரிய விலை வேண்டும், கொப்பரை தேங்காய் ஒன்றுக்கு ரூ.140 வழங்க வேண்டும், 35 ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற கள்ளுக்கான தடையை நீக்கி அனுமதி தர வேண்டும், பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை கவர்னரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தனர். கவர்னர் தரப்பிலிருந்து நாளை 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று சந்திக்க வருமாறு அழைப்பு வந்துள்ளதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னருக்கு அனுப்பி, சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். சுதந்திரதினம் அன்று மாலை சந்திக்க நேரம் ஒதுக்கி கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ளது. எனது தலைமையில் 5 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கவர்னரை சந்திக்க உள்ளோம். அப்போது எங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






