என் மலர்
திருப்பூர்
- பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
- 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.
திருப்பூர்:
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.மாநிலத்தில் தி.மு.க., -அதி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கி உள்ளன. பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையே அடையாளம் காட்டி விட்டது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்காக வாக்காளர் பட்டியலில், துல்லியத் தன்மை கொண்டு வரும் நோக்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயரில் உள்ள பிழைகளை சரி செய்ய, முகவரி மாற்றம் செய்வதற்கென சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடத்தப்பட இருக்கிறது.
இதற்கு திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் தயாராகியுள்ளன. முகாம்களில் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளில் முழு அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க., தலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதே போன்று பிற கட்சிகளும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.
- திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.
- ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 694 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.
ஏலத்தில் ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.7,176 வரை, கொட்டுரகம் (மட்ட ரகம்) ரூ.2,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
- ஊராட்சி செயலாளர் அம்சவேணி ஊராட்சியில் நடைபெறும் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவித்தார்.
- ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
காங்கம்:
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பொத்தியபாளையம் ஊராட்சி குருக்களியம்பாளையத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சந்திரசேகர்,துணைததலைவர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர்கள், அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் அம்சவேணி ஊராட்சியில் நடைபெறும் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவித்தார்.
- கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
- கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் எம்.ஜி.புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மகன் யுவன்ஸ்ரீ (வயது 20), இவர் கோவை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து நண்பருடன் பல்லடம் வந்த அவர் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேன் அதிவேகமாக வந்து யுவன் ஸ்ரீ மீது மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சரக்கு வேன் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
- கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
பல்லடம்:
பல்லடம் அண்ணா நகர் பகுதியில், சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் மேற்குப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் இதனால் கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
அண்ணாநகர் மேற்குப் பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் இங்குள்ள தாழ்வான பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும் மழை பெய்தால் இங்கு மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு அருகே கழிவுநீர் தேங்குவதால் ஆழ்குழாய் கிணற்று மூலம் வரும் நீரும் கழிவு நீராகவே வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கால்வாய் அமைத்து இந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார்
- தமிழாசிரியை. சந்திரவடிவு வரவேற்புரை ஆற்றினார்.
அவினாசி:
அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார்.உதவித்தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார்.அறக்கட்டளை தலைவர் என்.பாலகிருஷ்ணன் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூபாய் பத்தாயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
அறக்கட்டளை உறுப்பினர் வள்ளியாத்தாள் சார்பில் அவரது மகன் சம்பத்குமார் 12-ம் வகுப்பு மாணவிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பிளஸ்-2வில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.3000 வழங்கினார்.
அறக்கட்டளை செயலாளர் சு .நடராசன் அறக்கட்டளை யின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி அறிமுக உரை ஆற்றினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் கணேஷ் அறிவுச்சுடர், அறக்கட்டளை முத்து குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.உதவி தலைமை ஆசிரியை திலகவதி நன்றி கூறினார். தொடர்ந்துஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. தமிழாசிரியை. சந்திரவடிவு வரவேற்புரை ஆற்றினார். 10ம் வகுப்பு மாணவர்களில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேயூர் அரசு மருத்துவமனை டாக்டர் யசோதா தன் பெற்றோர் நினைவாக ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூ.10000 வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பிளஸ்-2மாணவர்களுக்கு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் எஸ்.பழனிசாமி ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூ.10000 வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
- வெள்ளகோவிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
- ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். வெள்ளகோவிலில் 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன, விசைத்தறிக்கூடங்கள், ஆயில் மில்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. வெள்ளகோவிலில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். வெள்ளகோவில் வழியாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. விசேஷ தினங்களில் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இருப்பதில்லை.
இதனால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு வரும் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டும், படியில் தொங்கியவாறும் பயணிக்கின்றனர். அதைத் தொடர்ந்து வரும் பேருந்துகள் ஒரே நேரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக போதிய பயணிகள் இல்லாமல் ஒரே வழித்தடத்திற்கு செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பாளரை நியமனம் செய்து பயணிகளின் தேவைக்கேற்ப பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாறு பயணிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து கழகத்திற்கு என்று தனியாக ஒரு அறையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி இந்திய நாதன் என்பவரது விவசாய தோட்டத்திலும் சுமார் 900 அடி கேபிள் வயர் திருடப்பட்டு உள்ளது.
- போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அக்கணம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவரது விவசாய தோட்டத்தில் சுமார் 100 அடி நீளமுள்ள மின்சார மோட்டாரின் கேபிள் வயரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இதே போல அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி இந்திய நாதன் என்பவரது விவசாய தோட்டத்திலும் சுமார் 900 அடி கேபிள் வயர் திருடப்பட்டு உள்ளது. விவசாயிகள் இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள விவசாய தோட்டங்களில் மின் மோட்டாரில் மாட்டியிருக்கும் வயர்கள் திருட்டுப் போவது தொடர்கதையாக உள்ளது என்றும், போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவை கணபதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 63) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அவிநாசி பாளையம், சுங்கம் அருகே நேற்று இரவு கோவையிலிருந்து திருச்சி நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூரிஸ்ட் காரின் மீது மோதியது. இதில் கோவை கணபதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 63) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
திருப்பூர்:
சுதந்திரப் போராட்டத் தியாகி கொடி காத்த குமரனின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாகி குமரன் அறக்கட்டளையின் சார்பாக, திருப்பூர் குமரனை நினைவு கூறும் வகையில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டு உரையாற்றுகையில், இங்கு வந்துள்ள தாய்மார்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளைப் போலவே, உங்கள் மருமகள்களையும் உங்கள் பிள்ளைகளாக நினைத்து வழி நடத்த வேண்டும். அது மட்டுமல்லாது, படிப்பு ஒன்றே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டு ஆண், பெண் என உங்களின் இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வையுங்கள். கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றார். மேலும், சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
- நேற்று இரவு நூலை துணியாக மாற்றும் நிட்டிங் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தார்.
- 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 23). இவர் திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே தங்கி இருந்து அருகில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு நூலை துணியாக மாற்றும் நிட்டிங் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தார்.
நள்ளிரவு மிஷின் ஓடி கொண்டிருக்கும்போதே தரையில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது திடீரென நிட்டிங் மிஷின்ராம்குமார் மேலே விழுந்து நசுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
சத்தம் கேட்டு உடன் பணியாற்றிய சக ஊழியர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராம்குமாரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக இருந்தார்.இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி குமரனின் உருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்தார்.
- பள்ளி பொருளாளர் ராதா ராமசாமி , செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
தியாகி திருப்பூர் குமரனின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி குமரனின் உருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்தார். பிறகு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி திருப்பூர் குமரனின் வரலாற்றை எடுத்துக்கூறினார். பள்ளி பொருளாளர் ராதா ராமசாமி , செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






