என் மலர்
தூத்துக்குடி
- தூத்துக்குடி கடற்கரையில் 60 மீட்டர் ஆழத்தில் இந்த விலாங்கு மீன்கள் காணப்படுகின்றன.
- வெளிர் நிறத்துடன் உடல் பழுப்பு முதுகு வெள்ளி நிறத்தில் உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற போது அரியவகை மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டது. பிடிபட்ட மீன் மாதிரிகளை ஆராய்ச்சியாளர் கோடீஸ்வரன் என்பவர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார்.
அதன் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் பிடிப்பட்டது புதிய வகை விலாங்கு மீன் என்பது தெரியவந்துள்ளது. இது கான்கிரிட் ஈல் இனத்தைச் சேர்ந்த அரியோசோமா வகையை சேர்ந்தது ஆகும். இந்த வகை காங்கிரிட் ஈல்ஸில் 32 இனங்கள் உள்ளன.
மேலும் 243 வெவ்வேறு ஈல் இனங்கள் உலகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று தான் தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டவை.
தூத்துக்குடி கடற்கரையில் 60 மீட்டர் ஆழத்தில் இந்த விலாங்கு மீன்கள் காணப்படுகின்றன. இந்த இனங்கள் இந்தியப் பெருங்கடலில் காணப்படும் வகையாகும். தேசிய மீன் ஆராய்சியாளர் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் இது ஒரு அறியப்படாத ஈல் இனங்களின் உருவவியல் என தெரியவந்துள்ளது.
இது அதன் மற்ற மீன் இனங்ளில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இது வெளிர் நிறத்துடன் உடல் பழுப்பு முதுகு வெள்ளி நிறத்தில் உள்ளது. எனவே இவை இந்திய நீர்நிலைகளின் அனைத்து ஒருங்கிணைப்புகளில் இருந்தும் வேறுபடுகின்றன. இவை குறைந்த பட்சம் 42 சென்டிமீட்டர் நீளம் கொண்டவையாக உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
- பஜாரில் உள்ள பேக்கிரி கடை முன்பு உள்ள டீ கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.
- பேக்கரி கடை முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமடைந்துள்ளது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி பஜார் எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய பகுதியாகும்.
திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் சாலையில் உள்ள இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்கு வரத்து அதிகமாக இருக்கும்.
சம்பவத்தன்று இந்த பஜாரில் உள்ள பேக்கிரி கடை முன்பு உள்ள டீ கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.
அப்போது திருச்செந்தூரில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி பேக்கரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ டிரைவர் வாகனத்தை ஓட்டி வரும்பொழுது திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கடையில் நின்று கொண்டிருந்த 3 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலும் பேக்கரி கடை முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் கடை முன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்து ஆட்டோ மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சொத்து தகராறு காரணமாக செந்தில் ஆறுமுகத்தை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.
- பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (வயது32).
வக்கீலான இவர் அந்தப் பகுதியில் மருந்துக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு செந்தில் ஆறுமுகம் மருந்துக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
செந்தில் ஆறுமுகத்திற்கும், கோவில்பட்டியை சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
எனவே இந்த கொலை சம்பவம் சொத்து தகராறில் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்சனை காரணமாக நடைபெற்றதா? என்று கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதை தொடர்ந்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு உடனடியாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது கொலையில் தொடர்புடைய 6 பேர் கும்பல், இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தில் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக செந்தில் ஆறுமுகத்தை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது. எனினும் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 42). இவர் பெயிண்டராகவும், பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள அவரது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அவரை தேடி சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடம், கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முத்துப்பாண்டியை தேடி வந்த நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மறுநாளே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பது கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
- அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) வீரசக்க தேவி ஆலய திருவிழா நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 12-ந்தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சதீஷ், ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
- சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குடும்பத்துடன் வசிப்பவர் செல்வேந்திரன் (வயது 57). காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்தலிங்கம் (25).
இவர் கஞ்சா விற்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி செல்வேந்திரனும், அவரது மனைவி பார்வதியும் வெளியே சென்று இருந்த வேளையில் அவர்களது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இதில் திருடப்பட்ட, பணம் ரூ.48 லட்சம் என்றும் பின்னர் ரூ.7 லட்சம் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே 12 கிராம் தங்க நகையும், ரூ.2 லட்சமும் திருட்டு போனதாக ஆறுமுகநேரி போலீசார் 5-ந் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
தொடர் விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஏரல் சேதுக்குவாய்தான் கிராமத்தை சேர்ந்த விஜயராமன் மகன் சத்தியமுகேஷ் என்ற சதீஷ் (24) மற்றும் இவரது உறவினரான மேலாத்தூர் சொக்கப்பழக்கரையை சேர்ந்த கோபால் மகன் சச்சின் (23) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் சதீஷ் மீது ஆறுமுகநேரி, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இப்படி ஒரு வழக்கின் காரணமாக சதீஷ் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக இருந்தபோது தான் அவருக்கும் காயல்பட்டினம் ஆனந்த லிங்கத்திற்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சதீஷ் ஜாமீனில் வெளியே வர இருந்த சூழ்நிலையில் அவரிடம், ஆனந்தலிங்கம் உதவி கேட்டுள்ளார். அதாவது, தன்னை பெற்றோர்கள் ஜாமீனில் எடுக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதனால் நீ எங்கள் வீட்டிற்கு சென்று அங்கே வைத்திருக்கும் லட்சக்கணக்கான பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு பின்னர் என்னை ஜாமினில் வெளியே கொண்டு வந்துவிடு. நாம் அதன் பிறகு பணத்தை செலவழித்து ஜாலியாக இருக்கலாம் என்ற திட்டத்தை கூறியுள்ளார்.
இதன்படி சதீஷ் ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் திசை திருப்பிவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். தனக்கு உதவியாக சச்சின் என்பவரை சேர்த்துக் கொண்டுள்ளான்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதீஷிடமிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.
- நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.
- எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.
தூத்துக்குடி:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக்கூடாது. இதைபற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.
தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.
விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.
தூத்துக்குடி, மே.7-
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.
இதில் தூத்துக்குடியில் உள்ள மையத்தில் மொத்தம் 760 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 2 தேர்வு மையத்தில் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மையத்தில் மட்டும் எம், என், ஓ, பி ஆகிய வரிசையில் கேள்வி தாள்கள் வழங்கப்பட்டன. அதில் சிலருக்கு கியூ, ஆர், எஸ், டி. வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் தேர்வு முடிந்தபிறகு தனியார் பயிற்சி மையங்கள் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டனர். அதில் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்களுக்கு விடைகள் வெளியிடப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் விடைகளை சரிபார்த்தபோது அவர்களின் வினாத்தாள் வித்தியாசமாக இருப்பதை அறிந்தனர். இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் குழப்பம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து சில மாணவர்களின் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அங்கு உள்ள மனுக்கள் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றனர். அந்த மனுவில், துத்துக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் வேறு வரிசை கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் குழப்பம் உள்ளது. எனவே தேசிய தேர்வு முகமை இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறுகையில், எப்போதும் ஒரே விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்வில் ஒரே மையத்தில் 2 விதமான கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்களுக்கு மட்டும் தான் விடைகள் வந்துள்ளன.
எம், என், ஓ, பி. ஆகிய வரிசை கேள்வி தாள்களுக்கு விடை வரவில்லை. இந்த 2 கேள்வி தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருந்தது. இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே எம், என், ஓ, பி. வரிசையில் தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக கட் ஆப் மார்க் வழங்க வேண்டும் என்றனர்.
- வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த யோவான்ராஜ் (வயது33). இவருக்கு திருமணம் ஆகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். யோவான்ராஜ் நேற்று இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவினர் பெண்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் யோவான் ராஜ் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.
தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற யாரும் உதவ முன் வராததால், சுதா செல்வி வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதியில் பணிபுரியும் கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அய்யாசாமி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் அசரியா. இவரது மனைவி எஸ்தர் (வயது 52).இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அசரியா இறந்து விட்டதால் வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்திதிற்கு சொந்தமான அய்யாசாமி காலனி வீட்டில் வசித்து அவரது 3 குழந்தைகளையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் கோவையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக எஸ்தர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டு கடந்த 30-ந்தேதி மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பான புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கலைவாணர், பொன்பாண்டி உட்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள்ராஜ் என்ற கருவாடு (20), சந்தோஷ்குமார் (21), சந்திரன்(20), ஹரிபிரசாத் (23), சோட்டையன் தோப்பை சேர்ந்த 18 வயதுடைய 2 பேர் மற்றும் ஒரு இளஞ்சிரார் உட்பட 7 பேர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று சிப்காட் காவல் சரக பகுதியில் மேலும் 5 வீடுகளில் அவர்கள் திருடியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- விடுமுறை தினத்தால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.
கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
- இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தினந்தோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
தரிசனத்திற்கு முன்னதாக அவர்கள் கடலில் புனித நீராடி அதன்பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் கடல் அலைகள் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பிற்பகலில் 1 மணி அளவில் கடலில் சீற்றம் ஏற்பட்டு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் வெளியேறியது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.






