search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி நகை-பணம் கொள்ளை
    X

    வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி நகை-பணம் கொள்ளை

    • வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த யோவான்ராஜ் (வயது33). இவருக்கு திருமணம் ஆகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். யோவான்ராஜ் நேற்று இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவினர் பெண்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் யோவான் ராஜ் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.

    தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற யாரும் உதவ முன் வராததால், சுதா செல்வி வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதியில் பணிபுரியும் கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×