search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருந்துக்கடை உரிமையாளர் கொலையில் 6 பேர் சிக்கினர்
    X

    மருந்துக்கடை உரிமையாளர் கொலையில் 6 பேர் சிக்கினர்

    • சொத்து தகராறு காரணமாக செந்தில் ஆறுமுகத்தை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.
    • பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (வயது32).

    வக்கீலான இவர் அந்தப் பகுதியில் மருந்துக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு செந்தில் ஆறுமுகம் மருந்துக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    செந்தில் ஆறுமுகத்திற்கும், கோவில்பட்டியை சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    எனவே இந்த கொலை சம்பவம் சொத்து தகராறில் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்சனை காரணமாக நடைபெற்றதா? என்று கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதை தொடர்ந்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு உடனடியாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது கொலையில் தொடர்புடைய 6 பேர் கும்பல், இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தில் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக செந்தில் ஆறுமுகத்தை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது. எனினும் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×