என் மலர்
தூத்துக்குடி
- இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.
- துண்டால் கழுத்தை நெரித்து கொலை.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா (வயது41). பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரும் முத்துக்கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (43) என்பவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நண்பர் கேட்டுக்கொண்டதால் பரமசிவம் மோகன்ராஜுக்கு தள்ளு வண்டியில் பிரியாணி கடை வைத்துக் கொடுத்துள்ளார். இவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பரமசிவன் வீட்டில் அனை வரும் வெளியூர் சென்றிருந்த தால் மாலை வரை இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், துண்டால் பரமசிவத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
இரவில் வீடு திரும்பிய பரமசிவத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் பரமசிவம் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.
- கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
- கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூரில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
- வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- போதைப்பொருள் கடத்தலுக்கு துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழைய வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பழைய துறைமுகத்திற்கு வரும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் மத்திய வருவாய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் முரளி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தோணி மூலம் மாலத்தீவு நாட்டிற்கு 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனுடைய சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த சுதாகர் (வயது36), ஜேசுராஜ் (34), தோணியின் மாலுமியான கிங்சிலி (56), மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர் துணையுடன் தோணி மூலம் போதைப்பொருள் கடத்த இருந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் பல கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் அதிகாரிகள் உடந்தையுடன் வெளி ஆட்கள் உதவிகள் மூலம் கண்டெய்னர் மற்றும் டாரஸ் லாரிகள் மூலம் வெளியே கொண்டு சென்று தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு குடோன்களில் கடத்தி பதுக்கி வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல நாட்களுக்கு பிறகு யானை வெளியே அழைத்து வரப்பட்டது.
- 2 மாத காலத்திற்கு பிறகு பக்தர்களுக்கு தெய்வானை யானை ஆசி வழங்கியது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. யானையை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியில் தினமும் இந்த தெய்வானை யானை குளித்து மகிழும்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தெய்வானை யானை கோவில் நிர்வாகத்தினர், வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
தொடர்ந்து பல நாட்களுக்கு பிறகு யானை வெளியே அழைத்து வரப்பட்டது. மேலும் காலை நடைபயிற்சி அழைத்து வரப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு ஆசி வழங்க அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று தெய்வானை யானை கோவிலை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டது. அப்போது அங்கு நின்ற பக்தர்கள் தெய்வானையை கண்டு அருகே சென்று பார்த்தனர்.
அந்த சமயத்தில் 2 மாத காலத்திற்கு பிறகு பக்தர்களுக்கு தெய்வானை யானை ஆசி வழங்கியது. இதை அங்கிருந்த பக்தர்கள் கண்டு ரசித்ததுடன் தங்களுடன் வந்தவர்களையும், உடன் வந்த குழந்தைகளையும் அழைத்து தெய்வானை யானையிடம் ஆசி பெற்றனர்.
- கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன.
- கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால் படிக்கட்டுகள் பகுதியில் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு பக்தர்கள் இறங்காதவாறு அடைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன. இதனால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் கடற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமொழி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வானது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
டி.ஜி.பி.எஸ். என்ற நவீன கருவி மூலம் திருச்செந்தூர் கடற்கரையில் கடலின் ஆழம் எவ்வளவு என்பது பற்றி ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரால் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பு எவ்வளவு தூரம் என்பதையும், தரை மட்டத்தை எவ்வளவு தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் மணல்சரிவு எவ்வளவு என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வானது சென்னை இந்திய தொழிற் நுட்ப வல்லுநர்களால் ஆய்வு முழுமையாக மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து இன்று வல்லுநர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14-ந் தேதி தைப்பொங்கல் தொடர் விடுமுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், காவடி, பால்குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. சுப முகூர்த்தம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வழக்கம் போல் அதிகாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இன்று நடைபெற்ற தை உத்திர வருஷாபிசேகத்தை முன்னிட்டு காலை 7மணியில் இருந்து காலை 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
- கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டு கடற்கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் வரை 7 அடியில் இருந்து 10 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் அரிப்பை தடுத்து கோவிலை பாதுகாக்கும் பொருட்டு இன்று காலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஆகியோர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலையொட்டி உள்ள கடற்கரை தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத நிலை உள்ளது. கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து கடல் அரிப்பு பாதிப்பு ஏற்படுவது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடற்கரை குறைந்து கொண்டே வருகிறது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம்.
இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக கடற்கரை அரிப்பை தடுக்க ஐ.ஐ.டி. நிபுணர்கள் மற்றும் சிறந்த வல்லுனர்கள் மூலமாக ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையாளர் சுகுமாரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, தலைமை பொறியாளர் பெரியசாமி, திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையாளர் அன்புமணி, கோவில் பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தாசில்தார் பாலசுந்தரம், ஐ.ஐ.டி. பேராசிரியர் சன்னாசிராஜ், மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் புஷ்ரா சற்குணம், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இன்று அதிகாலை தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் மினி லாரியில் வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினர்.
அந்த வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்டவர்கள், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
- திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
- பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. அவர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர்.
இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர், அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி நடராஜர், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் தனித்தனி தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிராகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கழி படைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூர் நகர எல்லையில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெருக்கடியால் திருச்செந்தூர் சன்னதி தெரு, பட்டர் குளம் தெரு, அக்ரகாரம், ரதவீதிதளில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கோ அல்லது அத்தியாவசிய தேவைக்கோ வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ராணிமகராஜபுரத்தில் உள்ளது. திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். எனவே வரும் காலங்களில் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
- சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு முன்பாக பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
சில பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வந்து வழிபாடு செய்வர். தற்போது சர்ப்பகாவடி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பொங்கல் திருநாள் நெருங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
- கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கும் அதிகமாக அரித்து சென்றது. அங்கு பாறைகள் தென்படுவதால் அவற்றில் நின்று புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் இடையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் வடக்கூரை அடுத்த காட்டு பகுதியில் கடற்கரையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களை கடல் அலைகள் வாரி சுருட்டின. சரிந்த சில பனை மரங்களை கடல் அலைகள் இழுத்து சென்றன. மேலும் சில பனை மரங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.
குலசேகரன்பட்டினத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இவைகளும் கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
- 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும்.
சென்னை:
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06569) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.33 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரெயில் (06570) வருகிற 11-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக இரவு 7.35 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






