என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் நடைபயிற்சியின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்கிய தெய்வானை யானை
- பல நாட்களுக்கு பிறகு யானை வெளியே அழைத்து வரப்பட்டது.
- 2 மாத காலத்திற்கு பிறகு பக்தர்களுக்கு தெய்வானை யானை ஆசி வழங்கியது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. யானையை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியில் தினமும் இந்த தெய்வானை யானை குளித்து மகிழும்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தெய்வானை யானை கோவில் நிர்வாகத்தினர், வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
தொடர்ந்து பல நாட்களுக்கு பிறகு யானை வெளியே அழைத்து வரப்பட்டது. மேலும் காலை நடைபயிற்சி அழைத்து வரப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு ஆசி வழங்க அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று தெய்வானை யானை கோவிலை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டது. அப்போது அங்கு நின்ற பக்தர்கள் தெய்வானையை கண்டு அருகே சென்று பார்த்தனர்.
அந்த சமயத்தில் 2 மாத காலத்திற்கு பிறகு பக்தர்களுக்கு தெய்வானை யானை ஆசி வழங்கியது. இதை அங்கிருந்த பக்தர்கள் கண்டு ரசித்ததுடன் தங்களுடன் வந்தவர்களையும், உடன் வந்த குழந்தைகளையும் அழைத்து தெய்வானை யானையிடம் ஆசி பெற்றனர்.






