என் மலர்
திருவாரூர்
- சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது
- தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்:
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு
சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைமுன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
வடுவூர் தெற்கு தெருவில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதைப்போல தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது
- நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.
- மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீடாமங்கலம்:
கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே உள்ள வலங்கைமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்.
இவரது தாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்துவிட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பண்டித சோழநல்லூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 43) என்பவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பன்னீர் வீட்டுக்கு வந்தார்.
தொழிலாளியான இவர் அப்பகுதியில் தென்னை மட்டைகள் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.
எதிர்பாராதவிதமாக தென்னை குருத்து உடைந்தது.
இதில் நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கியதில் தனசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் வலங்கை மான் இன்ஸ்பெக்டர் சந்தனமேரி, போலீஸ் சந்திரமோகன், சிறப்பு தனிப்படை போலீஸ் அறிவழகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், நடத்திய சோதனையில் அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது.
பின், போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்து ராஜேஷை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.
- பஸ் நிலையம் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது.
- நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மாரிமுத்து எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பின், புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, அலுவலக ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
- முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
மன்னார்குடி:
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராசுப்பிள்ளை, நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை இலக்கிய படைப்பிதழான 'விளையும் பயிர்' கையெழுத்து ஏட்டினை திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இந்திரா பாண்டியன் வெளியிட அதனை மேனாள் தலைமை யாசிரியர் தவமணி சந்திரன் பெற்றுக்கொண்டார்.
சாரணர் இயக்கத்தின் மாவட்ட ஆணையர் மீனாட்சி உள்ளிட்ட அனைவரும் குத்து விளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினர். பின், பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
முன்னதாக பாரதியார் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் முதுகலை தமிழாசிரியர் ராச கணேசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இணை செயலாளர் சுகந்தி இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.
முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- இந்துக்கள் சர்க்கரை பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட கொடிக்கால்பாளை யத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நூற்றாண்டுகள் பழமையான மத நல்லிணக்க பாச்சோறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பாச்சோற்று திருவிழா கடந்த நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த பாச்சோற்று திருவிழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறும்.
இந்த திருவிழா தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் பொருட்டு தங்களது வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து அதனை எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி வழிபாடு செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் நினைவிடத்தில் சந்தனம் பூசி வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த திருவிழாவின் இறுதி நாளும் ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் வின் நாளுமான நேற்று முக்கிய நிகழ்வான பாச்சோறு திருவிழா நடைபெற்றது.
இதில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வீட்டில் சர்க்ரைப் பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இவ்வாறு நூற்றுக்க ணக்கான சட்டிகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்தனர். அந்த அனைத்து பாத்திரங்களிலிருந்தும் சர்க்கரை பொங்கல் எடுக்கப்பட்டு மொத்தமாக ஒரு பெரிய சட்டியில் இடப்பட்டு பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைத்து தரப்பு மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
இந்து முஸ்லீம் என அனைத்து தரப்பு மக்களும் மதப் பாகுபாடு இன்றி கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை இங்கு செலுத்தினர்.
இந்த திருவிழாவில் செவ்வாடை அணிந்து ஆதி பராசக்தி பக்தர் ஒருவர் தலையில் சக்கரை பொங்கல் அடங்கிய பாத்திரத்தை எடுத்து வந்து வழிபாடு நடத்தியது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
- மன்னார்குடியில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடை பெற்றது.
- தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் மன்னார் குடியில் உள்ள பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனராஜ் தலைமை தாங்கினார்.
மன்னார்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனபால் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் இன்பவேணி, தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சத்யா (நீடாமங்கலம்), அனுப்பிரியா (திருத்துறைப்பூண்டி) மற்றும் ஆசிரிய பயின்றுனர்கள் கலந்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரிய பயின்றுனர் காளிமுத்து நன்றி கூறினார்.
- ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
- ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து சமுதாயத்தினரும் வந்து செல்வதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு 10.30 டிரஸ்டிகள் இல்லத்தில் இருந்து சந்தனங்கள் நிரப்பிய குடங்கள் தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிறப்பு பிராத்தனையுடன் தொடங்கி நடைபெற்றது. பின்னர், நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று, 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர்
எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தனக்குடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். தொடர்ந்து, வானவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது.
சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று, பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு வந்தடைந்து, மீண்டும் தர்காவை 3 முறை சுற்றியது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பூக்களை சந்தனக்கூடு மீது தூவி பிராத்தனை செய்தனர்.
பின்னர் அதி காலை 5 மணிக்கு சந்தன கூட்டில் இருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு, ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ உத்தரவிட்டார்.
பாதுகாப்பு பணியில் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர்ராஜேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, இன்று மாலை உள்ளூர் மக்களுக்காக அந்திக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. வருகிற 27-ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா முடிவடைகிறது. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் நடந்த இந்த கந்தூரி விழாவால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
- வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
- மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க வேண்டும்
நீடாமங்கலம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்பாட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் வடக்கு தெரு சாலை, மேலத் தெரு சாலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதனால் மழைக்கா லங்களில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே சாலையை சீரமைத்து தரவேண்டும்.
மேலும் அங்குள்ள மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க கோரியும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றித் தரக் கூறியும், நீர்த்தேக்க தொட்டியை மாதந்தோறும் முறையாக சுத்தம் செய்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்களுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
- எடையூர் இ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
- மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது, முத்துப்பேட்டை அருகே எடையூர் இ.சி.ஆர். சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே சாலை ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இந்த சாலை திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பிரதான சாலையாகும்.
இந்த சாலையில் கனரக வாகனங்களும் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் அதிக அளவில் செல்லும்.
இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவே போடப்பட்ட சிமெண்ட் குழாய் உடைந்து பள்ளம் உருவானது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு குழாயை கொண்டு வந்து பாலத்தில் வைத்து மேற் பரப்பில் மணலை நிரப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விபத்து நடப்பதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிய பாலத்தையும் கட்டி தரவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி அப்பகுதிளை சேர்ந்த நடையழகன் கூறியதாவது:-
இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பாசன வாய்க்காலின் நடுவே ஏற்பட்ட10 அடி ஆழத்திற்கும் 2 அடி அகலத்திற்கும் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து பாலத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் அதுவரையில் மாற்று வழியில் போக்குவரத்து இயக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையின்படி மக்கள் நல பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணியிடத்தில் எவ்வித நியமன ஆணையும் வழங்காமல் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வரன்முறையுடன் கூடிய ஊதியத்தை கணக்கிட்டு அரசாணை வெளியிட வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மாநில தலைவர் செல்ல பாண்டியன், மாநில பொதுச்செ யலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரங்கராஜ் உள்ளிட்ட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நல பணியாளர்கள் பேரணியாக வந்து பொதுமக்களிடம் யாசகம் பெற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
- இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் பாதிக்கப்படக்கூடும்.
திருவாரூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை என்பது பெய்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை நின்றது.
இதனால் விவசாயிகள் தங்கள் நெல் பயிர்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
குறிப்பாக திருவாரூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமானது முதல் கன மழை என்பது பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக சம்பா நெல் பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பெய்த மழையின் கார ணமாக நெல் பயிர்களில் மழை நீர் தேங்கி இருந்ததால் நெல் பயிர்கள் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகி இருந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை என்பது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இந்த மழை தொடர்ந்து பெய்தால் ஒட்டுமொத்த நெல் பயிர்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.






