என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.
    • ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள்.

    * உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது.

    * வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.

    * காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

    * மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.

    * நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது.

    * மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.

    * ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது.
    • சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான சேதம் அடைந்தது. இந்த வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

    எனவே வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை கணக்கீடு செய்து அவைகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு சேதமடைந்த வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

    அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் இதுவரை 780 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த 780 வீடுகளில் முற்றிலும் சேதம் அடைந்த வீடுகள், பக்கவாட்டு சுவர்கள் இடிந்த வீடுகள் என பல தரப்பிலான சேதங்களும் அடங்கும். இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

    முற்றிலுமாக சேதம் அடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு ரூ.8ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வண்ணார்பேட்டையில் செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே உள்ள பணிமனைகளிலும் வெள்ளம் புகுந்தது.
    • சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் முழு அளவில் அங்கு பஸ்கள் இயக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நெல்லை வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி போக்குவரத்து பணிமனை கடும் பாதிப்புக்குள்ளானது.

    இதேபோல் வண்ணார்பேட்டையில் செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே உள்ள பணிமனைகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் வெள்ளத்தில் சிக்கியது.

    மேலும் அங்குள்ள அலுவலக அறைகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் ஏராளமான ஆவணங்கள், உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து சேதமடைந்த பஸ்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே மற்ற பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு குறைந்ததையடுத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று பஸ்கள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணிமனைகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் வெள்ளநீர் சுமார் 10 அடி உயரத்திற்கு நின்றுள்ளது. இதனால் பணிமனைக்குள் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்குள்ள நிர்வாக இயக்குனர் ரூ.10 கோடி அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் தற்போது 55 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகிறது. சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் முழு அளவில் அங்கு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்காலிக வீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் 444 வீடுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

    நெல்லை:

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து முழுவதும் மீள முடியவில்லை.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலில்,

    * நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 212 வீடுகளுக்கு முதல்கட்ட நிதியாக 8.96 லட்ச ரூபாய் மாவட்ட பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

    * தற்காலிக வீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

    * நெல்லை மாவட்டத்தில் 444 வீடுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    * நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லையில் மழை பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
    • ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததில், ஒரு வீட்டில் வசித்த 3 பேர் இறந்தனர்.

    நெல்லை:

    நெல்லையில் மழைக்கு நேற்று முன்தினம் வரை 12 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல்லை டவுன் தாமிரபரணி ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் இறந்தார். நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளம் வடிந்த நிலையில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (61) என்பவர் மாவு அரைப்பதற்காக சுவிட்ச் போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் நெல்லையில் மழை பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 20 பேர் இறந்தனர். வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் நேற்று ராஜகோபால் (61) என்பவர் இறந்து கிடந்தார்.

    இதேபோன்று தூத்துக்குடியில் மற்றொருவரும் பிணமாக மீட்கப்பட்டார். ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததில், ஒரு வீட்டில் வசித்த 3 பேர் இறந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

    • நெல்லை மாவட்டத்தில் 1 முதல 9 வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை.
    • தற்போது மழை பெய்து வருவதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்க முடிவு செய்யலாம் என செய்தி வெளியானது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 17 மற்றும் 18-ந்தேதிகளில் அதீத கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், குளங்கள் உடைப்பால் பல கிராமங்ளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் இன்னும் சில கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    போக்குவரத்து மெல்லமெல்ல சீராகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இன்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்புகள் வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை வெள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 9 பள்ளிகள் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் இன்று காலை ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் "நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம். பிரைமரி மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்தினால கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு வரச் சொல்லியோ, சிறப்பு வகுப்புகள் சொல்லியோ மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது" குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நெல்லையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.
    • தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லையில் அதிகனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ் அணி செயலாளர் வி.கே.பி. சங்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல். ஏ., ஓ.பி.எஸ். அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை மனக்கவலம்பிள்ளை நகருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டனர். வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வைத்து, முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது.

    ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வீடுகள் தோறும் கணக்கெடுத்து ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு எங்கு மழை பெய்யும் எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது. அரசுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எடுக்க தவறி விட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறு. பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை ஒரு மாதம் அல்லது 2 மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

    சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

    வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி புரியும் வேலையில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.
    • அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையான பாதிப்படைந்துள்ளது.

    இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கீடு செய்வதற்காக மத்திய குழு நேற்று தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தது. இந்நிலையில் அந்த குழுவினர் இன்று காலை கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்தடைந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயனுடன் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்ய தொடங்கியது. அப்போது சேதங்களையும், அதன் மதிப்பீடையும் கணக்கீடு செய்தனர்.

    இந்த குழுவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், ஜல்சக்தி அமைச்சகம் தங்கமணி, நிதித்துறை துணை இயக்குனர் ரெங்கநாத் ஆடம், ஐதரபாத்தில் உள்ள மத்திய வேளாண் இயக்குனர் முனைவர் பொன்னுசாமி, மின்சாரத்துறை துணை இயக்குனர் ராஜேஸ் திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தால் சேதம் அடைந்திருப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து சந்திப்பு மற்றும் டவுன் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்து அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு ஊர்க்காடு, சாட்டுபத்து, கோடாரன்குளம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் பின்னர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் ராஜபதி, பாலாமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதில் ஒரு குழு களக்காட்டில் வாழைகள் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்ட பின்னர் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்கிறது.

    • அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
    • டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    • பல மாதங்களாக கிணற்றுக்குள் வெள்ளம் சென்றும் கிணறுகள் நிரம்பவில்லை.
    • கடந்த 17-ந்தேதி சபாநாயகர் அப்பாவு நதிநீர் இணைப்பு கால்வாய் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் படுகை அருகே 2 பம்பு செட் கிணறு உள்ளது. சுமார் 75 அடி ஆழம் கொண்ட பழமையான இந்த கிணற்றில் மழைக்காலங்களில் படுகைகளில் உள்ள தண்ணீரை அந்த பகுதி விவசாயிகள் கால்வாய் வெட்டி கிணறுகளுக்குள் விட்டனர்.

    பல மாதங்களாக கிணற்றுக்குள் வெள்ளம் சென்றும் கிணறுகள் நிரம்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் அதனை சுற்றிலும் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் அவற்றில் இருந்த உப்பு நீர் நல்ல தண்ணீராக மாறியது. இந்த அதிசய கிணறு குறித்த தகவல் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. உடனே அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் அதிசய கிணற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு 4 முறை ஆய்வு செய்தனர். அதிசய கிணறு, தண்ணீரின் தன்மை, அருகில் உள்ள மற்ற கிணறுகளின் தன்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டம், ராதாபுரம் முதல் சாத்தான்குளம் வரை 150 கிணறுகளில் உள்ள நீர் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பயனாக பூமிக்கு அடியில் சுண்ணாம்பு பாறைகள் உள்ளது எனவும், பூமிக்கு அடியில் 50 கிலோமீட்டர் விரிந்து காணப்படும் நீரோடைகள் உள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு டிரோன் கேமரா மூலமாக நடத்தப்பட்டது.

    இதனால் இந்த அதிசய கிணறு நதிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. தண்ணீர் கிணறுகளுக்குள் செல்வதற்கு வசதியாக ஆயன்குளம் படுகை அருகில் 200 கனஅடி தண்ணீர் செல்ல வசதியாக தனி ஷட்டர் அமைக்கப்பட்டு கிணறுகள் வரை தனி கால்வாயும் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 17-ந்தேதி சபாநாயகர் அப்பாவு நதிநீர் இணைப்பு கால்வாய் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நீரானது அதிசய கிணற்றில் அதிக அளவில் சென்றதால் கால்வாயில் வைக்கப்பட்டு இருந்த மரப்பலகைகள் கிணற்றுக்குள் விழுந்தது.

    இதனால் கிணற்றுக்குள் தண்ணீர் செல்லும் பாதை அடைபட்டது. அதை அந்த பகுதி விவசாயிகள் அகற்றியதை தொடர்ந்து தற்போது அதிசய கிணறுகளில் தண்ணீர் குறைந்த அளவில் சென்று கொண்டிருக்கிறது. எனவே கால்வாயில் செல்லும் தண்ணீரை தற்காலிகமாக அடைத்து கிணற்றில் விழுந்த காங்கிரீட் தகடுகளை அகற்றி கிணற்றை தூர்வாரி மீண்டும் 200 கனஅடி தண்ணீர் கிணற்றுக்குள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காட்டில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழையினால் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

    தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் களக்காடு ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்கு றிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

    முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வீடு களை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×