என் மலர்
திருநெல்வேலி
- அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்.
- தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஒரு வேளை உணவு, குடிநீர், பால், உறைவிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நானும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் அவர்களை தினசரி சந்தித்து எங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் இது. வெள்ள நிவாரண பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை எடை போட்டு பார்க்க கூடாது.
அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை விட அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று நெல்லை வந்தார்.
அவர் பாளை வெள்ளகோவில் பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அந்த பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது. அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுக்கக்கூடிய 6000 ரூபாயை ரேசன் கார்டு அடிப்படையாகக் கொண்டு கொடுக்காமல் கியாஸ் சிலிண்டர் முகவரிகளை கணக்கில் கொண்டு அதன்படி கொடுக்க வேண்டும்.
மேலும் நிவாரணமாக கொடுக்கக்கூடிய ரூ.6 ஆயிரம் என்பது பொதுமக்களுக்கு போதாது. எனவே அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் நேரடியாக சென்று விசாரித்து பாதிப்பை அறிந்து பொதுமக்களிடம் கேட்டு கொடுக்க வேண்டும். வானிலை மையத்தை தமிழக அரசு குறை சொல்லக்கூடாது. உலக அளவில் சவால் விடும் வகையில் இந்தியாவின் வானிலை மையம் நவீன கருவிகள் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது.
- வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை விளைவித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை பெய்து ஏற்பட்ட வெள்ளம் கடந்த ஒரு வாரமாகியும் இதுவரை பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. இன்றளவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அங்கு படிப்படியாக குறைந்து தற்போது முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
மாவட்டத்தில் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி பிரதான சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் இந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆழ்வார்தோப்பு, ஏரல், பழைய காயல், புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் தனித்தீவுகளாக காட்சியளித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கிராம சாலைகள், நகர்ப்புற சாலைகள், ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட வைகளும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவற்றை கணக்கெடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதன்பின்னர் பாலங்கள், சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு சில கிராமங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒரு வாரமாகியும் இதுவரையிலும் பொதுமக்கள் இருளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் வரையிலும் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்து முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் ஆய்வு செய்து வெள்ள நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொன்னன்குறிச்சி, வல்லநாடு, முறப்பநாடு, அகரம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மின்மோ ட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி பல்லாயிரம் கன அடி நீர் வீணாக ஆற்றில் கலக்கும் சூழ்நிலையிலும் அப்பகுதி மக்கள் குடிக்க ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
இதனால் ஆற்றில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்யும் பணி, கோரம்பள்ளம் ஆறு, சிற்றாறு பகுதிகளில் பாதிப்பை சரி செய்யும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி, கோவை, மதுரை மண்டலங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 12 செயற்பொறியாளர்கள், 20 உதவி செயற்பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு முழுமையாக இயல்புநிலை ஏற்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், இது தவிர களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்டவைகள் வெள்ளத்தால் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களாக வெள்ள சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையான கணக்கெடுப்பு முடிந்த பின்னர் கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன்பின்னரே வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.
இதற்கிடையே வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த கிராமங்களிலும் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு விநியோகம் சீரடைந்துள்ளது. மாவட்டத்தில் இன்று சுமார் 110 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
- முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3,4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 2-வது அணு உலையில் இன்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதைத்தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் இருந்து வழக்கம் போல் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது.
- கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மீண்டும் ஆற்றில் குளிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து பெரிய அளவில் குறைந்து இருந்தாலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், புதர் செடிகள், பாறைகள் ஆங்காங்கே நீருக்கடியில் உள்ளன. மேலும் பல்வேறு நீர் நிலைகளில் சகதி அதிகமாக உள்ளது.
எனவே தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்கினால் இதுபோன்ற புதர்கள், கற்பாறைகள், சகதிகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறு சிக்கிக்கொண்டால் மீட்பது மிகவும் கடினமாகும்.
எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைகளுக்குள்ளும் இறங்க வேண்டாம். மேலும் கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதேபோல், பெருமழை வெள்ள காலத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நீர் வடிந்துள்ள இடங்களில் வீடுகளுக்கு செல்லும் மக்கள் மின் இணைப்புகளை முறையாக பரிசோதித்த பிறகு அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.
விவசாய நிலங்கள், மரங்கள் ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் ஏதேனும் உரசிக்கொண்டு உள்ளதா?, அறுந்துள்ளதா என்பதை எல்லாம் கவனமாக பார்த்த பிறகே மக்கள் செல்ல வேண்டும்.
இது தொடர்பாக புகார்கள், தகவல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
- மின் இணைப்பு கொடுக்கப்படாத இடங்களுக்கு துரிதமாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்பு சற்று குறைவாக இருந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் நீரில் மூழ்கின. 2 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதம் அடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது. பஸ், ரெயில் போக்குவரத்துகள் தொடங்கியது. மின் இணைப்பு கொடுக்கப்படாத இடங்களுக்கு துரிதமாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றுடன் 7 நாட்களாகியும் சில இடங்களில் மக்களின் துயரம் தீரவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகர், ஏரல், ஆத்தூர், முக்காணி, ஆழ்வார் தோப்பு, அகரம், வசவப்பபுரம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இன்னும் வெள்ளம் வடியாமல் தீவுகளாகவே காட்சி அளிக்கின்றன. பழையகாயல், புன்னக்காயல், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை-தூத்துக்குடி 4 வழிச்சாலை, புதிதாக கட்டப்பட்ட ஆற்று பாலங்கள், திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின்ரோடு உள்ளிட்டவைகளும் பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் உள்ள நிலையில், அரசு சார்பிலும், தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் நிவாரணங்கள், உணவு, உடை வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நெல்லையில் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம் பாதிப்படைந்த மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், இந்த மாவட்டங்களில் லேசான பாதிப்பு மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்கள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. வேளாண்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து இந்த பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகா தேவி, அம்பை, மானூர் உள்ளிட்ட 8 தாலுகாக்களிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்றும், இன்றும் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 10 தாலுகாக்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் முழுவதும் 68 ஆயிரம் ஏக்கரில் பிசான பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், சுமார் 70 சதவீதம் வரை நெற்பயிர்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் முழுமையான சேத விபரங்கள் தெரிய வரும். கால்நடைகள் சேதம், மனித உயிரிழப்பு உள்ளிட்டவையும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த 2 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 பேர் வரவழைக்கப்பட்டு ள்ளனர். அவர்கள் இன்று முதல் அனைத்து பகுதிக்கும் சென்று கால்நடை சேதம், பயிர்சேதம், உயிர்சேதம், வீடு சேதம் உள்ளிட்டவைகளை கணக்கெடுக்கின்றனர். 2 அல்லது 3 நாட்களில் கணக்கெடுப்பு முடிவடையும். ஒவ்வொரு குழுக்களுக்கு ஒரு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் பாஸ்போர்ட், ஆதார் ஆட்டை, ரேஷன் அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களை இழந்தவர்களுக்காக 2 நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று சான்றுகளை விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
வெள்ளத்தில் சேதமடைந்த பெரிய மற்றும் சிறிய பாலங்கள் கிராம நிர்வாக அலுவவர்கள், போலீசார் மூலம் கணக்கெடுக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. கடந்த 6 நாட்களாக துண்டிக்கப்பட்ட தொலை தொடர்பை மீண்டும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எளிமையான முறையில் விரைவாக கணக்கெடுத்து உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பாதிப்படைந்த பகுதிகளுக்கான பட்டியலை அரசுக்கு வழங்கியவுடன் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
உயிரிழப்பு தொடர்பான கணக்கெடுப்புகளும் துரிதமாக நடந்து வருகிறது. விவசாய பாதிப்பு கணக்கெடுப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2,682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.
- 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்த இடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர்.
மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 6 முதல் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்த நிலையில் அங்குள்ள கேத் லேப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.
வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2,682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் மூலம் 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 764 பேருக்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2,565 நபர்கள் சளி உள்ளிட்ட நோய்கள் பாதிப்பில் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குணமாகி வருகிறார்கள்.
இந்த மருத்துவ முகாமை பல நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவை தவிர 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் சேர்த்து 190 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 மருத்துவ ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.
வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் அப்பல்லோ, மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்திலும் தேவைப்பட்டால் மெகா மருத்துவ முகாம் நடத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகிச்சை அளிக்க 50 முதுநிலை மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 8,545 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஆண்டு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை முழு கட்டுப்பாட்டில் உள்ளது . கொரோனா பரவல் தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை. அதனையும் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
- நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
இந்நிலையில் நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
* 4 மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 261 துணை சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
* நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இழப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
* அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
- ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
- உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.
நெல்லை:
நெல்லையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதி பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதையடுத்து சேத விவரங்கள் கணக்கீடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் செல்கிறது. ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.
- சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும்.
- துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில் தான், மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "துல்லியமாக கணிக்க இயலாத சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும்" என கூறினார்.
அன்புமணியின் இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், அன்புணி ராமதாஸ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-
வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை.
வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்கவில்லை என்பது எனது ஆதங்கம்.
வெளிநாடுகளில் உள்ளது போல் ஏன் நமது வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாக கணிக்க முடியவில்லை.
இனிவரும் காலங்களில் இன்னும் அதிகம் மழை, புயல், வெள்ளம் வரும். துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில் தான், மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறின.
- ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சுமார் 1.5 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.
குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறின.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்கத்து ஊர்களில் உள்ள சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் தங்கியுள்ளனர்.
தற்போது வரை சில கிராம மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மூலமும் உணவு வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் சாலை வசதி துண்டாகி இருப்பதால் படகு மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மேற்கூரைகள் இல்லாமல் எலும்பு கூடுகளாக காட்சியளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது. புன்னக்காயல் பகுதியில் வெள்ளம் வடிந்தாலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் இன்னும் அந்த பகுதி தனித்தீவாகத்தான் காட்சியளிக்கிறது.
இதேப்போல ஏரல் பகுதியே உருக்குலைந்து காணப்படுகிறது. இங்கும் ஏராளமான வீடுகள் முழுமையாக இடிந்துள்ள நிலையில் இங்குள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டது. மேலும் வெள்ளத்தில் விளைநிலங்கள் மூழ்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளும் வெள்ளத்தில் இறந்து போனதால் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.
இதேப்போல உடமைகள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்து விட்டதால் இப்பகுதி மக்கள் மீளமுடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். தற்போது நிவாரண முகாம்களில் வசித்து வரும் இப்பகுதி மக்கள் வெள்ளப்பாதிப்பில் இருந்து முழுமையாக மீள்வது எப்போது என்ற கவலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள தளவாய்புரத்தில் ஓடும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த பாலம் பழுதடைந்ததால், அந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை த்துறை சார்பில் கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. இதையொட்டி வாகனங்கள் செல்ல அதன் அருகில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்த மிக கனமழையின் காரணமாக தளவாய்புரம் கால்வாயிலும் கட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடியது. இந்த வெள்ளத்தால் தற்காலிக பாதை உடைந்தது. தற்போது மழை ஒய்ந்த நிலையில் தற்காலிக பாதை இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. தளவாய்புரம் வழியாக களக்காடு-நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையான ராஜபுதூர், ரோஸ்மியாபுரம், பணகுடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து முடக்கத்தால் தளவாய்புரம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது. இன்று 6-வது நாளாக அங்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
எனவே தற்காலிக பாதையை சீரமைத்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய பால கட்டுமான பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளதால், நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் விளைநிலங்கள் மண் மேடாக காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆன நிலையில் தூத்துக்குடி நகர பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதேப்போல தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்பும் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் 6-வது நாளாக இன்று வரை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
- தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்த மாவட்டங்களுக்கு வர வேண்டும்.
- வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை இந்த மாவட்டங்கள் சந்தித்துள்ளன.
நெல்லை:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை வேகமாக சரி செய்ய வேண்டும். அரசின் தற்போதைய வேலையில் வேகம் வேண்டும். தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்த மாவட்டங்களுக்கு வர வேண்டும்.
அப்போதுதான் வேலை வேகமாக நடக்கும். வெள்ளம் பாதித்து 6 நாட்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவை கிடைக்கவில்லை.
நெல்லை நகரப் பகுதிக்குள் இந்த நிலைமை என்றால் கிராமங்களில் மக்களின் நிலை என்னவாக இருக்கும்?. அரசு அறிவித்துள்ள ரூ.6000 நிவாரணம் போதாது. 3 கட்டங்களாக சேர்த்து மொத்தம் ரூ.25,000 பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும்.
கால்நடைகள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு கால்நடைகள் இறந்துள்ளது என்ற கணக்கே இல்லை.
இந்த பெரு வெள்ளத்திற்கு காரணம் தாமிரபரணி ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்தது தான். முதலில் 30 ஆயிரம் கன அடி என்றார்கள். அதன் பின்னர் 50,000 கன அடி என்றார்கள். அதன் பின்னர் ஒரு லட்சம் கன அடி திறந்து உள்ளதாக தெரிவித்தாலும் அதனை விட கூடுதலாகவே தண்ணீர் திறந்தனர்.

இதன் காரணமாகவும், ஏற்கனவே ஆற்று படுகைகளில் ஆக்கிரமிப்பு காரணமாகவும் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் நகரத்துக்குள் வந்து விட்டது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்டவைகள் பாதிப்படைந்துள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை இந்த மாவட்டங்கள் சந்தித்துள்ளன.
ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை காயல்பட்டினத்தில் ஒரே நாளில் பெய்துள்ளது. தூத்துக்குடியில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இனி இது போன்ற நிலை ஏற்படாமல் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் மனநிலையும் மாற வேண்டும் ஒவ்வொரு முறையும் மழை வரும் போது இந்த நிலை தான் ஏற்படும் என்பதை உணர்ந்து அதற்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம் பெயரவேண்டும்.
அரசு இலவச பொருள்களை கொடுத்து மக்களை ஏமாற்ற கூடாது. புதிதாக ஏரிகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெள்ள காலத்தில் கடலுக்கு நீர் செல்வதை தடுத்து ஏரிகள், குளங்களில் நிரப்பலாம்.
ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளை போன்று மழை நீர் வடிகால்கள் அமைக்க வேண்டும். அடுத்த வெள்ளம் வருவதற்குள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாறுகால்கள் அமைக்க வேண்டும்.
தாமிரபரணியை காக்க நான் 2 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட போது பார்த்தேன். பாபநாசத்தில் ஆரம்பித்து புன்னக்காயல் வரையிலும் ஆற்றை கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக ஆளுநரும் நேரில் வந்து பார்க்க வேண்டும். மத்திய அரசுக்கு பாதிப்பின் தன்மை குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழக அரசு தற்போது நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டுள்ளது. அதனை மத்திய அரசு கொடுப்பதில் தவறில்லை. இந்த நேரத்தில் கொடுக்காமல் வேறு எந்த நேரத்தில் மத்திய அரசு கொடுக்கப் போகிறது. இது போன்ற காலகட்டம் அரசுக்கும் மிகப்பெரிய சவால் தான். எனினும் மீட்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






