search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து முழுமையாக வழங்க நடவடிக்கை
    X

    குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து முழுமையாக வழங்க நடவடிக்கை

    • நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது.
    • வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை விளைவித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை பெய்து ஏற்பட்ட வெள்ளம் கடந்த ஒரு வாரமாகியும் இதுவரை பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. இன்றளவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அங்கு படிப்படியாக குறைந்து தற்போது முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

    மாவட்டத்தில் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி பிரதான சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் இந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதுதவிர திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆழ்வார்தோப்பு, ஏரல், பழைய காயல், புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் தனித்தீவுகளாக காட்சியளித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


    அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கிராம சாலைகள், நகர்ப்புற சாலைகள், ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட வைகளும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவற்றை கணக்கெடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதன்பின்னர் பாலங்கள், சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு சில கிராமங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒரு வாரமாகியும் இதுவரையிலும் பொதுமக்கள் இருளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் வரையிலும் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்து முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் ஆய்வு செய்து வெள்ள நிவாரணமும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொன்னன்குறிச்சி, வல்லநாடு, முறப்பநாடு, அகரம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மின்மோ ட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனால் காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி பல்லாயிரம் கன அடி நீர் வீணாக ஆற்றில் கலக்கும் சூழ்நிலையிலும் அப்பகுதி மக்கள் குடிக்க ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

    இதனால் ஆற்றில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்யும் பணி, கோரம்பள்ளம் ஆறு, சிற்றாறு பகுதிகளில் பாதிப்பை சரி செய்யும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி, கோவை, மதுரை மண்டலங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 12 செயற்பொறியாளர்கள், 20 உதவி செயற்பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு முழுமையாக இயல்புநிலை ஏற்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், இது தவிர களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்டவைகள் வெள்ளத்தால் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களாக வெள்ள சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையான கணக்கெடுப்பு முடிந்த பின்னர் கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன்பின்னரே வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    இதற்கிடையே வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த கிராமங்களிலும் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு விநியோகம் சீரடைந்துள்ளது. மாவட்டத்தில் இன்று சுமார் 110 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×