என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெருமழை வெள்ளத்தினால் நெல்லை மாவட்டத்தில் 780 வீடுகள் சேதம்
- வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது.
- சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான சேதம் அடைந்தது. இந்த வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.
எனவே வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை கணக்கீடு செய்து அவைகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு சேதமடைந்த வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.
அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் இதுவரை 780 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த 780 வீடுகளில் முற்றிலும் சேதம் அடைந்த வீடுகள், பக்கவாட்டு சுவர்கள் இடிந்த வீடுகள் என பல தரப்பிலான சேதங்களும் அடங்கும். இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.
முற்றிலுமாக சேதம் அடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு ரூ.8ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






