என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    • மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி களில் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    வாகன சோதனை

    மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகர பகுதி முழுவதும் கடந்த சில வாரங்களாக போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் கடுமையான வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த சோதனையின் போது விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்குபவர்கள் என பல்வேறு தரப்பி னருக்கும் போலீசார் அதிக அளவு அபராதம் விதித்து வருகின்றனர்.

    லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை

    அதேபோல் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் ஆர்.டி.ஓ.வுக்கு அவர்களது லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர் தனது ஹெல்மெட்டில் காமிராவை பொருத்திக் கொண்டு சென்றுள்ளார்.

    வீடியோ வைரல்

    தொடர்ந்து குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற அந்த வாலிபர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்கு வரத்து போலீசாருக்கு சைகை காட்டி விட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வந்தது.

    அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளை யத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 6 பேர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதும், மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை போலீ சார் பிடித்து மேலப்பாளை யம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலீஸ் கமிஷ னர்கள் சீனிவாசன், சரவண குமார் ஆகியோரும் விரைந்து வந்தனர். அப்போது போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் காமிரா பொருத்தி சாகசத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் மற்றும் 5 வாலிபர்கள் சிக்கி உள்ளனர். இதில் 5 பேருக்கு லைசென்ஸ் உள்ளது. அவர்களது மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

    மாநகரப் பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்று விபத்தை ஏற்படுத்தி அந்த நபர் இறந்து விட்டால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது கொலைக்கு நிகரான குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.

    விபத்தில் சிக்கிய நபர் காயம் அடைந்து இருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 308-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். தொடர்ந்து மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடுவது கூடாது என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது தவிர இன்ஸ்டா கிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதில் புகார் கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிப்போம். இது தவிர புதிய வாகனங்கள் வாங்கி அதில் கூடுதல் வேகத்திற்காக சில பாகங்களை பொருத்திக் கொடுக்கும் கடைகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆயிரத்து 315 மாணவர்கள் மற்றும் 11ஆயிரத்து 439 மாணவிகள் ஆகியோர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
    • போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் ஒப்படைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    21,754 பேர் தேர்வு எழுதுகிறார்கள்

    மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 21 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    இதில் 10 ஆயிரத்து 315 மாணவர்கள் மற்றும் 11ஆயிரத்து 439 மாணவிகள் ஆகியோர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர சிறைக் கைதிகள், தனித்தேர்வுகளுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    தேர்வையொட்டி மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு உள்ள வினாத்தாள் கட்டுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    நாளை காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தூய்மை பணிகள்

    நாளை தேர்வு தொடங்குவதையொட்டி மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு அறைகளில் பதிவு எண்கள் ஒட்டும் பணி முடிவடைந்து விட்டது.

    இன்று பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் டவுன் மண்டலத்துக்குட்பட்ட தேர்வு மையங்களில் தூய்மை பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

    நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு உள்ள வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

    • போதையில்லா பாதை என்ற தலைப்பில் சைக்கிள் பயணம் நடைபெற்றது.
    • 500-க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாளை கத்தோலிக்க மறை மாவட்டம் தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக போதையில்லா பாதை என்ற தலைப்பில் இறைவன் இயற்கை இனிய நலம் தேடி என்ற சைக்கிள் பயணம் நடைபெற்றது. மறை மாவட்டத்தின் சவேரியார் பேராலயத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் சீவலப்பேரி வழியாக தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் வரை சென்றடைந்தது.

    தவக்காலத்தில் நடைபெற்றுள்ள இந்த சிறப்பு சைக்கிள் விழிப்புணர்வு பயணம் புனித அந்தோணியார் திருத்தலத்தில் இறை வழிபாட்டுடன் முடி வடைந்தது.

    விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போதை ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை சைக்கிளில் பொருத்தியபடி கலந்து கொண்டனர்.

    • மாவட்டங்களை சேர்ந்த 305 வீரர்,வீராங்கனைகள் போட்டியில்14 கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான வலுதூக்கும் போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.

    இதில் தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களை சேர்ந்த 305 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் என 4 பிரிவுகளில் 8 உட்பிரிவுகளுடன் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தென் தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் சுரேஷ், மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ், கவுன்சிலர் ரவீந்தர், வக்கீல் ராஜா முகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • இன்று கோவில் நடை திறக்கப்பட்டு காலையில் பூஜைகள் நடைபெற்றது.
    • அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பெயா் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்பட்டது.

    நெல்லை:

    பாளையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேத நாராயணா் ஸ்ரீஅழகிய மன்னாா் ஸ்ரீராஜ கோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் கல்விக்கு அதிபதியான ஸ்ரீவேத நாராயணா் அருளினால் ஆண்டுதோறும் 10 மற்றும் 12-வது வகுப்பு மாணவ- மாணவிகள் பொதுத்தோ்வில் ஞாபகசக்தி அதிகாித்து அதிக மதிப்பெண் பெற்றிட வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் இன்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலையில் பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து கோவில் வெளி மண்டபத்தில் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தாா். பெருமாள் முன் யாகசாலை அமைக்கப்பட்டு கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பெயா் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்பட்டது. பின்னர் வெண்தாமரை, வெண்கடுகு, வெல்லம், நெல்லிக்கனி,பாயாசம் மற்றும் ஹோம திரவியங்கள் கொண்டு ஹோமம் நடைபெற்றது.

    தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். யாக பூஜையில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பேனா மற்றும் சிறப்பு பிராத்தனை செய்த நெல்லிக்கனி வழங்கப்பட்டது.

    • 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிபடி மற்றும் பால்தர்மமும், மாலை 5 மணிக்கு சுவாமிதோப்பில் இருந்து முந்திரி பதம் மற்றும் கடம்பன்குளத்தில் இருந்து திருஏடு எடுத்துவருதல், நம்பியான் விளையில் இருந்து மேளதாளம் முழங்க பதியை வந்தடைந்தது.

    இரவு 7 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிக்கு அய்யா வழி அருளிசை வழிபாடு அய்யாவின் அருளிசை புலவர் சிவசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 நாட்களும் இரவு 8 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறும். நிகழ்ச்சிகளை வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதி அன்பு கொடி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    • மகளிர் தின விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி உள் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் டாக்டர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் ஏனைய பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • ஆர்பாட்டத்தில் மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் நடைபெற்றது.

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர்கள், மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர்கள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வட்டார தலைவர்கள்,நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள்,மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள்,காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்பாட்டத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ,பொது நிறுவனங்களின் சொத்துக்களை பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு தாரை வார்த்ததாக கூறி கோஷங்கள் எழுப்பி னர்.

    நிகழ்ச்சியில் பாளை வடக்கு வட்டார பகுதி களை சேர்ந்த மாற்று கட்சி இளைஞர்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.அவர்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • நெல்லை மாநகர பகுதியில் பைக் சாகசங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.
    • வண்ணார்பேட்டையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி யில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    20 இடங்களில் வாகன சோதனை

    வாகனங்களில் விதிகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட் மாட்டுதல், பைக் சாகசங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் இன்று மாநகர பகுதி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து துறை மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட் மாட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    துணை கமிஷனர் ஆய்வு

    முதல் முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ.500-ம், 2-வது முறையாக அதே குற்றத்தை செய்தவர்களுக்கு ரூ.1,500-ம் அபராதம் விதிக்கப்பட்டது.

    வண்ணார்பேட்டையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிற்பகல் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை துணை கமிஷனர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

    அப்போது விதிமுறை களை மீறி நம்பர் பிளேட் மாட்டி வந்தவர்களிடம் உடனடியாக அதனை மாற்றுமாறு எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கடைகளுக்கு சென்று அவர்கள் நம்பர் பிளேட்டை மாற்றி துணை கமிஷனரிடம் அதனை காட்டி விட்டு சென்றனர். தொடர்ந்து நெல்லையில் உள்ள வாகன ஷோரூம்களுக்கு சென்ற போலீசார் விதிமுறைகளை பின்பற்றி நம்பர் பிளேட் வழங்குமாறும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். 

    • நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி மாவட்டந்தோறும் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் சுமார் 22 ஆயிரம் பேர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

    இதுதவிர பாளை மத்தியச்சிறை, சேரன்மகாதேவி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடியில் தனியார் மெட்ரிக் பள்ளி, பாளை தனியார் பள்ளிகளில் 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    பறக்கும் படை

    தேர்வையொட்டி வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    தேர்வு நாளன்று காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக 16 வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் 7 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நிலையான படையும் ஒவ்வொரு மையத்திற்கும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஆய்வு செய்து வருகிறார்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-1 பொதுத்தேர்வை 16, 499 பேரும், பிளஸ்-2 தேர்வை 18,299 மாணவர்களும் எழுத உள்ளனர். இதற்காக 2 தனிதேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 64 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 தேர்வுகளுக்காக 1,322 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனித்தேர்வு மையங்களில் சிறை கைதிகள் உள்பட பலர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    கட்டுப்பாடுகள்

    தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்கா ணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாண வர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • விதை விவர அட்டை இல்லாமல் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்.
    • உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜாதாபாய் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிமம் பெறாமலும், விற்பனை பட்டியல் இல்லாமலும். விதை விவர அட்டை இல்லாமலும் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர் தாங்கள் விற்கும் புதிய ரக விதை களுக்கு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், பதிவு எண் மற்றும் முளைப்புத் திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விதைகளை வாங்கும்போது விதைச் சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்ப ட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும்.

    மேலும். உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தகுந்த உரிமம் பெறாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கா மல் விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அணுகி seedcertificationtn.gov.in என்ற வலைதள முகவரியில் முறையாக விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதற்கிைடயே நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளி யிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தி லும், தென்காசி மாவ ட்டத்தில் கடையம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலும் கோடை நெல் சாகுபடியும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடியும் மேற்கொள்ள விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 15 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். எனவே விதை வாங்கும் விவசாயிகள் கீழ்கண்ட அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

    விதைச்சான்றுத்துறை மூலம் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை யாளரிடம் இருந்து மட்டுமே விதைகள் வாங்க வேண்டும். விதைக்குரிய விற்பனை பட்டியலை விற்பனையாளரிடம் கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் விற்பனையாளர் மற்றும் வாங்கும் விவசாயி கையொப்பம் இட வேண்டும்.

    ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களை பயிர் செய்யு ம்போது விதை சிப்பங்களை தனித்தனியே ஊற வைக்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் விற்பனை நிலையங்களில் ஏற்கனவே விநியோகி க்கப்பட்ட மற்றும் தற்சமயம் இருப்பில் உள்ள விதைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசா யிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கருத்தரங்கத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை தலைமை தாங்கினார்.
    • கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து சதுரங்க விளையாட்டு குறித்த 'சதுரங்கத்தில் நிகழ்வு மேலாண்மை நுட்பங்கள்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை தலைமை தாங்கினார். பிடே சங்கத்தின் நடுவர் மற்றும் தேசிய பயிற்சியாளருமான கற்பகவள்ளி 'சதுரங்க போட்டியின் நிர்வாக நுட்பங்கள்' என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தார். கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய பயிற்சியாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயிற்சியாளருமான சாந்தி 'சதுரங்க போட்டியின் வெற்றிக்கான உத்திகள்' என்ற தலைப்பில் செயல்முறை மூலம் செய்து காண்பித்தார்.

    இதில் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர்கள் சேது, துரை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் பேச்சிமுத்து நன்றி கூறினார். கருத்தரங்கில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×