என் மலர்
திருநெல்வேலி
- ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.
- ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.
பக்கவாட்டு சுவர் இடிந்து விபத்து
கடந்த 3-ந்தேதி கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பால் பாக்கெட் வாங்குவதற்காக மொபட்டில் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருந்த பெரிய அளவிலான கல் ஒன்று அவர் மீது விழுந்தது.
இதில் வேல்முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
முதியவர் பலி
இந்நிலையில் இன்று அதிகாலை வேல்முருகன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணத்தை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்த அவரது உடலை சந்திப்பு போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ஈரடுக்கு மேம்பாலத்தில் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உத்தரபிரேதச மாநிலம், அசோஹா உன்னா மாவட்டம், குசாலிகெராவை சேர்ந்தவர் விஜய் ஷியாம் மகன் நீரஜ் (வயது26).
- இவர் ஏர்வாடி அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
களக்காடு:
உத்தரபிரேதச மாநிலம், அசோஹா உன்னா மாவட்டம், குசாலிகெராவை சேர்ந்தவர் விஜய் ஷியாம் மகன் நீரஜ் (வயது26).
இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏர்வாடி அருகே உள்ள பெரிய நாயகிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள தெரு நல்லியில் குல்பி ஐஸ் வைக்கும் பாத்திரத்தை கழுவினார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேல் (50) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த செந்தில்வேல், நீரஜை ஆபாசமாக பேசி, தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த நீரஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்வேலை கைது செய்தனர்.
- நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 15).
- நெல்லையப்பனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் சூசை மரியான். கூலித்தொழி லாளியான இவரது மகன் நெல்லையப்பன் (வயது 15). இவனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் அவனை பெற்றோர் வெளியே எங்கும் செல்ல அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோருக்கு தெரியாமல் நெல்லையப்பன் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றிற்கு சென்றுள்ளான். அப்போது திடீரென அவனுக்கு வலிப்பு ஏற்படவே தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டான். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அவனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
+2
- சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்.
- அகழாய்வு மூலம் கிடைத்த அரும்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
நெல்லை:
தமிகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழாய்வு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட அரும்பொருட்கள் ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அரும் பொருட்களை மக்கள் பார்வையிட்டு, பழங்கால வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொல்லியல் துறை அதிகாரிகள் சார்பில் நடந்த இடம் தேர்வு பணியில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நெல்லையின் அடையாளமாகவும், தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையிலும் அங்கு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அங்கு ஆரம்ப கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனையொட்டி ரெட்டியார்பட்டியில் நடந்த அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு ரெட்டியார்பட்டி மலை பகுதியில் மொத்தம் 13 ஏக்கர் பரப்பளவு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். 55 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இங்கு அகழாய்வு மூலம் கிடைத்த அரும்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
கொற்கை அகழாய்வில் கிடைத்த 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் கிடைத்த 1,620 பொருட்கள், சிவகளையில் கிடைத்த 185 பொருட்கள் என 2,617 பொருட்கள், 106 முதுமக்கள் தாழிகள் ஆகியவை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட உள்ளது. மேலும் அந்த 3 இடங்களிலும் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரத்தாலான பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.
அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலா தலமாகவும் பயன்படுத்தும் வகையில் இதன் அருகில் உள்ள உயரமான பகுதியில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'வியூ பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது. இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதி கிடைக்கும்.
மேலும் இங்கு மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று பல்வேறு அம்சங்களுடன் இந்த அருங்காட்சியக வளாகம் அமைக்கப்பட உள்ளது.
- வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட 103 பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர்.
- பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேளாண் கல்லூரி பயின்ற மாணவர்கள் எந்தவித தடையும் இல்லாமல் தமிழக அரசால் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மருத்துவக் கல்லூரி படித்து திரும்பிய மாணவ- மாணவிகளுக்கு அவ்வாறு இல்லை. இங்கு நீட் தேர்வில் இருப்பதால் மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். விரைவில் அவர்களும் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட 103 பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர். பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட 4 பேர் மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
விஷ சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் அமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், திருமண நாள், பிறந்தநாள் போன்றதற்கு வாழ்த்து பெற பலர் வருகிறார்கள். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை வைத்து முடிவு செய்ய முடியாது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- சிறுபான்மை பள்ளிகளுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
நெல்லை:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லை வந்தார்.
ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மனு
அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொரு ளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பின ருமான ரூபி மனோகரன் நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மை பள்ளி களுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல அனைத்து அரசு நலத்திட்ட ங்களையும் சிறுபான்மை பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
7.5 சதவீத இடஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை போல, நீதியரசர் கலையரசன் பரிந்துரைப்படி அதை 15 சதவீதமாக உயர்த்தி, அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதுமை பெண் திட்டம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் பெறுவது போல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
இதுவரை அரசால் மதிய உணவு திட்டம் அரசு பள்ளி மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டமானது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட வில்லை. எனவே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையிலும் அந்த திட்டத்தை விரிவு படுத்திட வேண்டும்.
உதவித்தொகை
கடந்த 16 ஆண்டுகளாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஒன்றிய அரசால் வழங்கப் பட்டு வந்த சிறுபான்மை மாண வர்களின் கல்வி உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை பள்ளிகளில் தகுதியான காலி இடங்களில் முறையான விதிமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்க ளுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அரசு ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவர்கள் ஊதியம் பெறாமலேயே ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நியமன ஒப்புதல் வழங்கி அவர்களுக்கு ஊதியம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- நர்மதா,சந்தோஷிணி, உமா ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.
- 3 மாணவிகளுக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உதவித்தொகை வழங்கினார்.
நெல்லை:
நெல்லை டவுனில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், பாளை தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப் கலந்து கொண்டு பிளஸ்-2 வகுப்பில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவிகளான நர்மதா -588, சந்தோஷிணி- 586, உமா- 580 ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மேலும் 3 மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ, கவுன்சிலர் அனார்கலி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமார் ஜெயராஜ், முனைவர்கள் முத்துராஜ், காந்திமதி மற்றும் நிர்வாகிகள் சரவணன், சுந்தர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஏற்கனவே இருந்த 250 கிலோவாட் மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய 500 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டது.
- புதிய மின்மாற்றியால் மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் வினியோகம் வழங்கப்படும்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்ப்புற கோட்டத்தில் சந்திப்பு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி, நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி வழிகாட்டலில், ஏற்கனவே இருந்த 250 கிலோவாட் மின்மாற்றி அகற்றப்பட்டு மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தில் வருங்கால மின் நுகர்வோர் மின் நுகர்வை கருத்தில் கொண்டு புதிய 500 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டது. ரூ.9 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் சன்னதி தெரு, கணேசபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் வினியோகமும், புதிய மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு வழங்கினாலும் குறைந்த மின்னழுத்த குறைபாடு முற்றிலும் தவிர்க்கப்படும்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர் உமா மகேஸ்வரி, ஆக்க முகவர்கள் அசோகன், சஷ்டிகுமார் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- மாடுகளை பிடித்து நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
- அபராதம் செலுத்தாவிட்டால் மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் ரத வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி தெரிவதாக பொதுமக்கள் புகார் கூறிவந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.
இதையடுத்து நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இன்று தூய்மை பணியாளர்கள் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையப்பர் கோவில் முன்பு சுற்றி திரிந்த 3 மாடுகளை பிடித்து நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து இன்று மாலைக்குள் ஒவ்வொரு மாடுகளுக்கும் தலா ரூ.1000 அபராதமாக செலுத்தி பெற்று செல்லுமாறு மாட்டின் உரிமை யாளர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ள தவறினால் மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.
மாடு பிடிக்கும் பணியை மேஸ்திரி சிவக்குமார் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், சேக், உதவி மேஸ்திரி கள் அருணாச்சலம், ஆறுமுகம் மற்றும் தூய்மை பணி யாளர்கள் மேற்கொண்டார்கள்.
- தாசில்தார் தலைமையில் வருவாய்துறையினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடு முறை அளிக்கப் பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் திறப்பு
இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும், வகுப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை துரித படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காகவும், அவற்றை சீரமைத்து சான்று வழங்கிடவும் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் செல்வராஜ் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தாசில்தார்களுக்கு உத்தர விட்டார்.
குழு ஆய்வு
இதைதொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவிலும் தாசில்தார் தலைமையில் வருவாய்துறை யினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டிடங்களை பள்ளி திறப்பதற்கு முன்பாக சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளிலும், கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து தீயணைப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் மூலம் கூட்டுப் புலத்தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
மாணவர் சேர்க்கை
மேலும் ஜூன் மாதம் முதல் வாரம் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்து வருகின்றனர்.
தகவல் தெரிவிக்கலாம்
எனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கச் செல்லும் பெற்றோர், அந்தப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதும் இருப்பதை கண்டறிந்தால் கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 'வணக்கம் நெல்லை கைப்பேசி எண் -97865 66111 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 33 பயனாளிகளுக்கு தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
- 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை யினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் 33 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 280 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். மேலும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 110 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்தில் உதவித்தொகை வழங்கினார். மொத்தமாக 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
சட்டத்தின் ஆட்சி
நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழகத்தில் மட்டும் தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் சிறுபான்மை யினர் நிம்மதியாக வாழ்வதாக சொல்ல முடியாது.
சிறுபான்மை மக்க ளுக்குமட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கான முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.
அமைச்சர் பேச்சு
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அயலக பணிக்கு செல்வோர் எந்த பணிக்கு செல்கிறோம் என்பதை அறிந்து செல்வதோடு அரசிடம் பதிவு செய்து செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லும் நாட்டின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். போலி ஏஜெண்ட்கள் ஆசை வார்த்தை காட்டி இங்கு உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டரிடம், வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கட்டாயம் பதிவு செய்து செல்ல வேண்டும்.
சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்திட மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முஸ்லீம் மகளிர் உதவும் கரங்கள் சங்க செயலாளர் செய்யது அகமது, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் பிரான்சிஸ் சேவியர், சிறுபான்மை நல அலுவலர் சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இசக்கியப்பனுக்கும், கொம்பையாவிற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
- ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், பலவேசக்கண்ணும் சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி இசக்கியப்பன் (வயது67). இவருக்கும், இவரது தம்பி கொம்பையாவிற்கும் (60) இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இசக்கியப்பன் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பையாவிற்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், அவரது மகன் பலவேசக்கண்ணும் (33) சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.
இதனை தடுக்க வந்த இசக்கியப்பனின் மனைவி அம்மா பொன்னுவையும் (60) தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த இசக்கியப்பன், அம்மாபொன்னு ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொம்பையா, அவரது மகன் பலவேசக்கண்ணு ஆகியோரை கைது செய்தனர்.






