search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் கலெக்டரிடம் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
    X

    விழாவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கிய காட்சி. அருகில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்டபஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் மற்றும் பலர் உள்ளனர்.

    வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் கலெக்டரிடம் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

    • 33 பயனாளிகளுக்கு தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
    • 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை யினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் 33 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 280 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். மேலும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 110 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்தில் உதவித்தொகை வழங்கினார். மொத்தமாக 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

    சட்டத்தின் ஆட்சி

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழகத்தில் மட்டும் தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் சிறுபான்மை யினர் நிம்மதியாக வாழ்வதாக சொல்ல முடியாது.

    சிறுபான்மை மக்க ளுக்குமட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கான முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.

    அமைச்சர் பேச்சு

    விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அயலக பணிக்கு செல்வோர் எந்த பணிக்கு செல்கிறோம் என்பதை அறிந்து செல்வதோடு அரசிடம் பதிவு செய்து செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லும் நாட்டின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். போலி ஏஜெண்ட்கள் ஆசை வார்த்தை காட்டி இங்கு உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டரிடம், வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கட்டாயம் பதிவு செய்து செல்ல வேண்டும்.

    சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்திட மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முஸ்லீம் மகளிர் உதவும் கரங்கள் சங்க செயலாளர் செய்யது அகமது, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் பிரான்சிஸ் சேவியர், சிறுபான்மை நல அலுவலர் சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×