என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கரீம் நகர் பகுதியில் கழிவு நீரோடை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • 47-வது வார்டு முழுவதும் சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிரமமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நிர்வாகிகள் மேயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

    மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட 52- வது வார்டில் இருக்கும் கரீம் நகர் பகுதியில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான கரீம் நகர் கழிவு நீரோடை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. சில ஆக்கிரமிப்பாளர்களின் குறுக்கீடுகளினால் கழிவு நீரோடை அமைக்கும் பணியானது முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணியை விரைந்து முடித்துத் தர வேண்டும். கரீம் நகர் மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசல் அருகே அமைந்திருக்கும் கழிவு நீரோடை முறையான அமைப்பில் இல்லாமல் கழிவுநீர் சீராக செல்லாமல் பள்ளிவாசல் அருகே தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதனை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    மேலும் 47-வது வார்டு முழுவதும் தெருப்புறங்களில் இருக்கும் சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிக சிரமமாக உள்ளது. எனவே அந்த வார்டு முழுவதும் புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் புகாரி சேட், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் காதர் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங், அந்த சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை க்காக அழைத்து வருபவ ர்களின் பற்களை பிடுங்கி யதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட தோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்போதைய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற வாலிபர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

    மேலும் சூர்யாவுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சூர்யா மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

    அதன்படி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சூர்யாவுக்கு சம்மன் வழங்கி உள்ளனர். அவர் நேரில் ஆஜராக வரும் பட்சத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இவரது புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.
    • கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்று தர தி.மு.க.வை வலி யுறுத்தி ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.

    நெல்லை வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே ஓ.பி.எஸ் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரம சிவன், நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தச்சநல்லூர் பகுதி செயலாளர் சொர்ணம் வரவேற்றார்.

    தொடர்ந்து கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த தி.மு.க. அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆவின் அண்ணசாமி, துவரை பேச்சிமுத்து, மணி மூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், ஓ.பி.எஸ். அணி இளைஞர் பாசறை செயலாளர் லெனின், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலசுப் பிரமணியன், மாணவரணி செயலாளர் செல்வ பிரதீப், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வ கணபதி, மகளிர் அணி செயலாளர் தமிழ் செல்வி,

    நாங்குநேரி சட்ட மன்ற தொகுதி செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பகுதி செயலாளர்கள் நெல்லை சுப்பையா, காஜா மைதீன், ஒன்றிய செயலா ளர்கள் ராமர், டோமினிக் பாண்டி, தங்கப்பல் பரம சிவன், பொதுக்குழு உறுப்பி னர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாளை வடக்கு பகுதி செயலாளர் அருள் இம்மானுவேல் ஸ்டீபன் நன்றி கூறினார்.

    • நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
    • விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

    நெல்லை:

    சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பாளை அரசு அருங்காட்சி யகத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மஹன்யா, 3-ம் வகுப்பு மாணவன் பிரணவ் கார்த்திகேயன் மற்றும் மஹிந்தேவ் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர். நெல்லை பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பெமினா ஷர்மி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வல் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முக ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரின்சி ரோஸ் குண்டு எறிதலில் 2-ம் இடமும் மற்றும் வட்டு எறிதலில் 3-ம் இடமும், லனிஸ் ஜேசுவா குண்டு எறிதலில் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.

    வள்ளியூர்:

    சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் வர்ஷா உயரம் தாண்டுதலில் 2-ம் இடமும், ரின்சி ரோஸ் குண்டு எறிதலில் 2-ம் இடமும் மற்றும் வட்டு எறிதலில் 3-ம் இடமும், லனிஸ் ஜேசுவா குண்டு எறிதலில் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜஸ்டின், முனிராஜா,அய்யப்பன் ஆகியோரை பள்ளி சேர்மன் கிரகாம்பெல், பள்ளி தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பாராட்டினர்.

    • ரெயில்வே சார்பில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் நாட்டின் 26-வது ரெயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
    • வி.ஐ.பி. பெட்டிகளுக்கு ரூ.2,800 வரையிலும், சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1,300 வரையிலும் கட்டணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    ரெயில் பயணிகளுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் விதமாக இந்திய ரெயில்வே சார்பில் நாள்தோறும் புதிய நவீன ரெயில்கள் அறிமு கப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சுமார் 25 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 22-ந்தேதி முதல் முதலாக தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சென்னை-மைசூரு இடையே இயக்கப்பட்டது.

    தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி சென்னை-கோவை இடையே 2-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பலத்த கோரிக்கை எழுந்த நிலையில், ரெயில்வே சார்பில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் நாட்டின் 26-வது ரெயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலை இந்த மாதத்தில் இருந்து ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பிட்லைன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக இருக்கும். இந்த ரெயிலில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேளை உணவு வழங்கப்படும். இந்த ரெயிலில் தானியங்கி கதவுகள், தீத்தடுப்பு அலாரம், கண்காணிப்பு கேமிராக்கள், அகலமான ஜன்னல் கண்ணாடிகள், பயணிகளின் உடைமைகளை வைக்க ரேக்குகள் வசதி, சென்சாரில் இயங்கும் நீர் குழாய்கள் உள்ளிட்ட நவீன ஏற்பாடுகள் இருக்கும்.

    மேலும் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இலவச வைபை வசதி, ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் மையம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மெட்ரோ ரெயில்களை போல, பயணிகளின் பாதுகாப்பிற்காக ரெயில் நின்ற பிறகே கதவுகள் திறக்கும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவான எல்.எச்.பி. பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டு உள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    இந்த ரெயிலில் வி.ஐ.பி. பெட்டிகளில் சுழலும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும். சாதாரண பெட்டிகளில் சாயும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை-சென்னை இடையே உள்ள 658 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும் வகையில் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்த ரெயில் வருகிற 6-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சுதந்திர தினத்தன்று தமிழக மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு சுதந்திர தின பரிசாக பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சந்திப்பு ரெயில்வே மேலாளர் முருகேசன் கூறியதாவது:-

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 3 பிட் லைன்கள் உள்ளன. இதில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளில் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள மின்சார வசதி தேவை என்பதால் முதல் 2 பிட்லைன்களை தவிர்த்து, 3-வது பிட்லைனில் மட்டும் அதற்கேற்ப மின்மயமாக்கல் பணிகள் தொடங்கி முடிவடைந்துவிட்டது. மேலும் பெட்டிகளில் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் படுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும்.

    தொடக்கத்தில் பயணிகள் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரியாததால் 8 பெட்டிகளை மட்டுமே கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால், அந்த ரெயிலில் 2 வி.ஐ.பி. பெட்டிகளும், 16 சாதாரண பயணிகள் பெட்டிகளும் பொருத்தப்பட்டு இருக்கும். இதில் சுமார் 1,100 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.

    வி.ஐ.பி. பெட்டிகளுக்கு ரூ.2,800 வரையிலும், சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1,300 வரையிலும் கட்டணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் 8 மணி நேரத்தில் சென்னை செல்லவேண்டி இருப்பதாலும், இதே ரெயில்தான் சென்னைக்கு சென்றுவிட்டு, மறுமார்க்கமாக நெல்லைக்கு வரவேண்டும் என்பதாலும் மதுரை, திருச்சி ஆகிய ரெயில்நிலையங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும். இதுதவிர திண்டுக்கல் அல்லது விருதுநகரில் கூடுதலாக ஒரு நிறுத்தம் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    வந்தே பாரத் ரெயில் இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடுக்க விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • ரத்தம் சொட்ட சொட்ட வேலம்மாள் அங்கிருந்து ஓடிச்சென்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தார்.
    • தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் விரைந்து சென்று ஆறுமுகத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள்(வயது 54). இவர்களது 2 குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஆறுமுகம் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆறுமுகம் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் வீட்டை விற்பதற்காக பத்திரம் கேட்டு வேலம்மாளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அரிவாளால் வேலம்மாளின் தலையில் வெட்டினார்.

    உடனே ரத்தம் சொட்ட சொட்ட வேலம்மாள் அங்கிருந்து ஓடிச்சென்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஆத்திரம் தீராத ஆறுமுகம் வீட்டில் இருந்த பீரோ மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுகுடிப்பதற்காக வீட்டை விற்பதற்கு பத்திரம் கேட்டு, கிடைக்காத ஆத்திரத்தில் மனைவியை வெட்டியதோடு சொந்த வீட்டுக்கே தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று அதிகாலை கட்டிட வேலைகள் நடைபெறும் வணிக வளாகத்தின் முன்பிருந்து புகைமூட்டம் எழுந்தது.
    • மரப்பலகையில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் அணைத்தனர்.

    நெல்லை:

    பாளை பஸ் நிலையம் அருகே மாநகராட்சி மேயரின் பழைய பங்களா இருந்தது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப்பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக சென்ட்ரிங் அமைப்பதற்காக ஏராளமான மரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    இந்நிலையில் இன்று அதிகாலை கட்டிட வேலைகள் நடைபெறும் வணிக வளாகத்தின் முன்பிருந்து புகைமூட்டம் எழுந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய வீரர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்ட மரப்பலகையில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மரப்பலகையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? மர்மநபர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டனரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேட்டை போலீஸ் நிலையம் எதிரே புதியதாக மீன் விற்பனை கூடம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.
    • கொக்கிரகுளம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கற்களை வீசியும், அரிவாளால் தாக்குதலும் நடத்தினர்.

    நெல்லை,ஜூலை.31-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்த முருகேசன் தலைமையில் வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மீன் விற்பனை கூடம்

    பேட்டை போலீஸ் நிலையம் எதிரே புதியதாக மீன் விற்பனை கூடம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. அதனை தகுதியுள்ள மீனவர்களுக்கு வழங்கிட வேண்டும். தகுதி இல்லாத நபருக்கு வழங்கியுள்ளனர். அதனை ரத்து செய்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.

    இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டு வரும் நெல்லை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் எங்களுடைய மீனவர்கள் அடையாள அட்டை மற்றும் மீனவர்கள் நலவாரிய அட்டையை திரும்ப ஒப்ப டைப்பதை தவிர வேறு வழியில்லை.

    கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருகிற 7-ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மீனவர்களின் அடையாள அட்டை மற்றும் மீனவர் நல வாரிய அட்டையை ஒப்படைக்க உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கும்பல் தாக்குதல்

    மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சுரேந்திர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ் பாண்டியன், பாக்யராஜ், ராஜா, சுரேஷ் குடும்பனார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று முன்தினம் நள்ளிரவில் கொக்கிரகுளம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ஸ்ரீவைகுண்டம், தாழையூத்து மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கற்களை வீசியும், கடைகளின் மீதும் அரிவாளால் தாக்குதலும் நடத்தினர்.

    கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவை ஒட்டி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை இழிவு படுத்தும் வகையிலும், சமுதாய தலைவர்களை இழிவு படுத்தும் வகையிலும் அவர்கள் செயல் பட்டுள்ளனர்.

    இந்த செயல்களுக்கான வீடியோ பதிவுகள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    • தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது.
    • நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வானுமாமலை வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை அரிவாளால் வெட்டினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் வானுமாமலை (வயது 62). விவசாயி. கடந்த 27-ந் தேதி இவரது குடும்ப கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக வானுமாமலையின் தம்பி ராமையா மகன் சுடலை, சின்னத்துரை மகன் செல்வம் ஆகியோர் பூசாரியை அழைப்பதற்காக அதே ஊரை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் என்ற கபாலி கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றனர்.

    அப்போது தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வானுமா மலைக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வானுமாமலை நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை தாக்கி, அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்ணனை தேடி வருகின்றனர்.

    • பாபநாசம் அணையில் திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது.
    • 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு தலைவர் செல்லத்துரை தலைமையில் செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முருகன் மற்றும் விவசாயிகள் ஏராள மானவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் கால்வாய்களில் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படியும், கருகிய வாழைக்கன்றுகளை கையில் ஏந்தியபடியும் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கும், சுத்தமல்லி, கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட ஊர்களில் உள்ள குளங்களுக்கும், தாமிரபரணி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கோடகன் கால்வாய் மூலமாக வந்து சேர்கிறது. அதன் மூலம் பாசன வசதி பெற்று நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டு வருகிறோம்.

    தற்போது பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது. அதன் கீழ் உள்ள சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேர முடியாமல் போய்விடுகிறது.

    இதனால் நாங்கள் 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது. மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • முத்துக்குமார் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
    • இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார்.

    களக்காடு:

    களக்காடு கோவில்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் ஓட்டலில் மாஸ்டராக உள்ளார். இவர் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதனை அவர் திரும்ப கொடுக்க வில்லை. இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு முத்துக்குமார் பணம் தற்போது இல்லை, ஆனால் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

    சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆனந்த், புதுபேட்டை அரசடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மகாராஜன் (20), புதுபேட்டை செக்கடியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் கேசவன் (23) ஆகியோர் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்தனர். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி முத்துக்குமார் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்த் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றார்.

    ×