என் மலர்
திருநெல்வேலி
- கணபதி முன்னீர்பள்ளத்திற்கு மொபட்டில் சென்றார்.
- ஆம்புலன்சு மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த தருவை பாலாஜி நகரை சேர்ந்தவர் கணபதி(வயது 75). இவர் நேற்று தருவையை அடுத்த முன்னீர்பள்ளத்திற்கு மொபட்டில் சென்றார். பின்னர் மேலமுன்னீர்பள்ளம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது மொபட்டில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நெல்லையை நோக்கி வந்த அரசு மகப்பேறு நல ஆம்புலன்சு கணபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை கணபதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வள்ளியூர் மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
- திலக் நகர், பாபுஜி நகர், சிந்து பூந்துறை உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நெல்லை கோட்டம் வள்ளியூர் வினியோக செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது;-
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி வள்ளியூர் துணைமின் நிலையத்திற்கு உட்டபட்ட சமாதானபுரம், பூங்கா நகர், இ.பி. காலனி, சண்முகாபுரம், வடலிவிளை, நல்ல சமாரியன் நகர், லூத்தர் நகர், கேசவனேரி, ராஜாபுதூர், திருக்குறுங்குடி, நம்பி தலைவன் பட்டயம், ஆவரந்தலை, ஏர்வாடி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
நாங்குநேரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெரு மளஞ்சி, ஆச்சியூர், வாகை குளம், கோவநேரி உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நெல்லை நகர்புற வினியோக செயற்பொறி யாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தச்சநல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
- நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கியது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.
நெல்லை:
2023-ம் ஆண்டிற்கான நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ கலந்து கொண்டு தேசிய கொடி, ஜோதியினை ஏற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 6 பிரிவுகளில் (12, 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் கள்) மற்றும் பொது பிரிவுகளில் 500 வீரர்கள், 400 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர்.
இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும் முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டி கள் உட்பட மொத்தம் 67 போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.
இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி யில் நெல்லை மாவட்ட தடகள சங்க தலைவர் செய்யது நவாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு வெற்றிக் கோப்பை களும், சுழற்கோப்பைகளும் வழங்கி பாரட்டினார்.
மேலும் ஆசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கு பெற்று 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வென்று சாதனை படைத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகளான தங்கப் பதக்கம் வென்ற கனிஷ்டா தீனா மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற அபிநயா ராஜராஜன் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தடகள சங்க துணைத்தலைவர் சுரேஷ் , டாக்டர் பிரேம்நாத் மற்றும் நிர்வாகிகள், தடகள சங்க உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்று நர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செய லாளர் சேது நன்றி கூறினார்.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் பொறுப்பு அலுவலர் கேப்டன் ஜாய்சன் கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க 22-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நெல்லை வண்ணார் பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது.
இதில் சங்க தலைவர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார்.செயலாளர் செல்லத்துரை, பள்ளி தாளாளர் திருமாறன், ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகமது ஷபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் பொறுப்பு அலுவலர் கேப்டன் ஜாய்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.வக்கீல் செல்லதுரை வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாணவர்கள் சாதனையாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
முதன்மை ஒருங்கி ணைப்பாளர் தேவதுணை நன்றி கூறினார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளத்துரை, அந்தோணி சுப்பிரமணியம், பிரின்ஸ் சங்கரபாண்டியன் விஸ்வ நாதன் சுப்பையா, லட்சு மணன் அண்ணாமலை, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஒரு வருட பூஜைகளின் பலன் கிடைக்குமாறு வேண்டி நடத்தப்படும் விழா பவித்ரோட்சவம் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
- இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தில் டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா சென்று வருவார்கள்.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டில் 12 மாதமும் திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும். இவ்வாறு நடைபெறும் விழாக்களில் எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் அதனை நீக்கி ஒரு வருட பூஜைகளின் பலன் கிடைக்குமாறு வேண்டி நடத்தப்படும் விழா பவித்ரோட்சவம் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் பவித்ரோட்சவ திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது. அன்றைய தினம் இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தி லும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிர மணியர் மர மயில் வாகனத்திலும் என பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா சென்று வருவார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறிப்பட்டுள்ளது
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்பொழுது தட்கல் முறை யில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
- இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.
நெல்லை:
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் கேரளாவில் பெண்கள் தங்களது வீடு முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தில் குமரி மாவட்டம் தோவாளை, நெல்லை சந்திப்பு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் இருந்து அதிகளவு பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரளா மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் கொண்டாடுவார்கள்.
இதனையொட்டி நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.500 வரை விற்பனையானது.
அதே விலையிலேயே பிச்சிப்பூ விற்பனையானது. அதேநேரத்தில் பூக்களை வாங்கி கொண்டு தெருக்களில் சென்று விற்கும் வியாபாரிகள் ரூ.600 வரை விற்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.600-க்கு விலை போனது. இதேபோல் சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ தலா ரூ.200-க்கு விற்பனையானது.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.
கடந்த 2 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.500 வரை விற்பனையாகி உள்ளது. நாளை அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.
- நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
- தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர்.
நெல்லை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக பாளை ஜான்ஸ் கல்லூரி, ஜான்ஸ் பள்ளி, சேவியர் பள்ளி உள்பட 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்ட நிலையில் இன்று காலை எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மெயின் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தேர்வும் நடைபெற்றது. தேர்வர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.இதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 மையங்க ளிலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர். கடுமையான பரிசோதனை களுக்கு பின்னரே தேர்வறை க்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையங்களில் இன்று காலை முதலே தேர்வர்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4,311 பேருக்கு தேர்வெழுத அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.
தேர்வுக்காக வந்திருந்த தேர்வர்கள் அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தேர்வறைக்குள் செல்லும்போது புகைப்ப ட்டத்துடன் கூடிய அடையாள அட்டை, பரீட்சை அட்டை, ஊதா அல்லது கருமை நிற பேனாவை தவிர வேறு எந்த பொருளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வுக்காக 5,144 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.
இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. முன்னதாக நேற்று தேர்வு மையங்களை தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ள நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் எடுத்துச்செல்ல தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
- மாவட்ட தொழில் மையம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
- படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனை குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 28 பேர், ஆசிரியர்கள் 5 பேர் மற்றும் ஒரு உதவியாளர், ஒரு ஓட்டுனர் என 35 பேர் ஒரு வேனில் பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஜிம்னாஸ்டிக் போட்டி பயிற்சிக்காக நேற்று வந்தனர்.
பாளையில் மாவட்ட தொழில் மையம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் லேசான காயமடைந்தவர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனை குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை இன்று காலை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனம் பழுது ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என தெரிவித்தார்.
அப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், சித்திக், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், பி.சி. ராஜன், ஜோசப் பெல்சி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார்.
- மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 44). இவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி இந்திராகாந்தி(42). இவர் களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கார்த்திக்கிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து ள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார். இதில் அரவது கையில் நரம்பு அறுபட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவரது கை செயல் இழந்தது. இதையடுத்து அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மூலக்க ரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
- சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது.
திசையன்விளை:
பிரசித்தி பெற்ற திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான கொடைவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் கலர் கோலப்போட்டி, நாடகம், இன்னிசை கச்சேரிகள், மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்சியாக நேற்று அன்னபூஜையுடன் விழா தொடங்கியது. காலை 11 மணிக்கு மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க குதிரைகள் முன் செல்லமுத்து குடைபவனி வர மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிவழியாக சென்று கோவிலை அடைந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவு கரகாட்டம், மகுட ஆட்டம், வில்லிசை, பரிசளிப்பு விழா, சிலம்பாட்டம், பொம்மலாட்டம் பேஷன் ஷோ, முன்னாள் அரசு வக்கில் பழனி சங்கர் சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம், இசை திறன் போட்டி, நள்ளிரவு சுவாமிக்கு விசேச அலங்கார பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சுவாமி முட்டை விளையாட்டு உள்பட பல்வேறு நிகழ்சிகள் அதிகாலை வரை நடந்தது.
விழாவில் ஸ்டார் சேம்பர் பிரிக்ஸ் ஏ.எஸ். குமார், கே.ஆர்.பி. டிரேடர்ஸ் என்ஜினீயர் கனகராஜ், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் புஸ்பலெட்சுமி, டி.கே. ராஜா அண்ணாமலை, தங்கையா சுவிட்ஸ் கணேசன், முருகேசன், ஜி.பி.எம். குமார், ஆகாஷ், முன்னாள் அரசு கூடுதல் வக்கீல் பழனிசங்கர், ரோட்டரி அட்வகேட் கில்டா பழனிசங்கர், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், தொழில் அதிபர் சரவணக்குமார், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி தலைவர் கமலா சுயம்புராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் செய்திருந்தார்.
- நாகர்கோவில் சுரக்ஷா குடும்ப ஆரோக்கிய மையத்தை சேர்ந்தவர்கள் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
- சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள், போதைக்கு அடிமையாவதை தடுத்தல் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பேசினார்.
வள்ளியூர்:
தெற்கு வள்ளியூர் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் மகளிர் குழு சார்பாக இளமை பருவத்தின் சவால்கள் மற்றும் பாலின துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் சுஜா பிரேம ரஜினி வரவேற்று பேசினார்.
நாகர்கோவில் சுரக்ஷா குடும்ப ஆரோக்கிய மையத்தை சேர்ந்தவர்கள் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினர். மாணவ-மாணவிகளுக்கு இளம் பருவத்தில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்கள், உடலை பேணும் முறைகள், பாலின வன்கொடுமைகளை தடுத்தல், சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள், போதைக்கு அடிமையாவதை தடுத்தல், மாணவர்களின் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளும் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பேசினார்.
இதில் நாகர்கோவில் சுரக்ஷா மையத்தின் பொரு ளாளர் அனிதா நடராஜன், குழு உறுப்பினர் தினேஷ் கிருஷ்ணன், நாகர்கோவில் நகராட்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமா செல்வன், சி.பி.ஐ.யின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திரன் சிவராம பிள்ளை, டாக்டர் கிருஷ்ண சுரேந்திரா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே ஆலோசனைகள் வழங்கப்பட்டடு அவர்களது பிரச்சினைகள் கேட்டறிந்து தீர்வுகளும் கூறப்பட்டன. மகளிர்குழு உறுப்பினர் கலைச்செல்வி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். கருத்த ரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.






