என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும்.
    • வந்தே பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    இந்திய ரெயில்வே சார்பில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை-கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.

    இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி சுதந்திர தின நாளில் வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்கும் என தகவல் பரவிய நிலையில் அது தள்ளிப்போனது.

    தொடர்ந்து கடந்த வாரம் நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலுக்கு வண்டி எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை-சென்னை எழும்பூர் ரெயிலுக்கு 20632 என்ற எண்ணும், சென்னை-நெல்லை ரெயிலுக்கு 20631 என்ற எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. நெல்லை ரெயில் நிலையத்தில் தொடக்க விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த முன்னேற்பாடு பணிகளை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் இன்று ஆய்வு செய்தார். அப்போது நடைமேடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில் தென்னக ரெயில்வே கோட்டத்தில் காசர்கோடு-திருவனந்தபுரம், சென்னை-விஜயவாடா, நெல்லை-சென்னை ஆகிய 3 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதற்கான தொடக்க விழா நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெறுகிறது. அதனை ஆய்வு செய்ய வந்துள்ளோம். நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் முதல் கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று செல்லும். மேலும் சில இடங்களில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை வைத்துள்ளர். அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் சந்திப்பு ரெயில் நிலையத்தை எத்தனை கோடியில் புதுமைபடுத்தலாம்? , எத்தனை எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள் அமைக்கலாம்? என்பது போன்ற தகவல்களை அறிக்கையாக எங்களுக்கு அளிப்பார்கள்.

    நாங்கள் அதனை இந்திய ரெயில்வே துறைக்கு அனுப்பி அனுமதி வாங்கிய பின்னர் பணிகள் நடைபெறும் என்றார். அப்போது முதல் நிலை வணிக மேலாளர் ரதிபிரியா, சீனியர் கோட்ட இயக்குனர் பிரசன்னா, சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவையொட்டி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்திப்பு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். சுமார் 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும். இதில் 1 பெட்டி வி.ஐ.பி.களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வி.ஐ.பி. பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும், மற்ற பெட்டிகளில் தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்தடையும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் நெல்லையில் இருந்து தனது இயக்கத்தை தொடங்க உள்ளதால், சென்னையில் தயார் நிலையில் உள்ள வந்தே பாரத் ரெயிலை நெல்லைக்கு கொண்டு வர நெல்லையில் இருந்து தொழில்நுட்ப குழு சென்னைக்கு இன்று புறப்படுகிறது. இந்த குழு நாளை வந்தே பாரத் ரெயிலை நெல்லைக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு, சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரெயில் இயக்கம் எப்போது என பயணிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    • நெல்லை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்க தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதியில் சாலை மோசமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. புகார்

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் பாறையடி மணி, பகுதி துணை செயலாளர் மாரீசன் ஆகியோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்க தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாக தினமும் 700 பணியாளர்கள் மற்றும் குப்பை வாகனங்கள், உபகரணங்கள் மூலமாக குப்பைகளை சேகரிக்க வேண்டும். 4 மண்டலங்களிலும் 55 வார்டுகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் இதுவரை எந்த வார்டிலும் அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு ரூ.86 லட்சம் அந்த தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்போம்.

    பெண் கவுன்சிலர் மனு

    12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை சாலை தெருவில் இருந்து உடையார்பட்டி சாலை தெரு வரை சுமார் 1200 மீட்டர் நீளத்துக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கியது. ஆனால் இதுவரையிலும் 400 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

    நேதாஜிக்கு சிலை

    தச்சை மண்டலம் 2-வது வார்டு தி.மு.க வட்டச் செயலாளர் சடாமுனி அளித்த மனுவில், தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதியில் சாலை மோசமாக உள்ளது. குடிநீர் வசதியும் முறையாக இல்லை. எனவே இந்த 2 வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நம்பி குமார் அளித்த மனுவில், நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள மார்க்கெட்டில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பழையபடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும். மேலும் மார்க்கெட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • அந்தோணிராஜ் என்பவருக்கும், மாறனுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • மாறனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வடக்கு அப்பர்குளத்தை சேர்ந்த சக்தி சேகர் மகன் மாறன் (வயது 30). இவருக்கும், புதூரை சேர்ந்த அந்தோணிராஜ் (42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று அந்தோணிராஜ், அவரது உறவினர் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாதேவன் (25) மற்றும் 4 பேர் ஒரு காரில் வடக்கு அப்பர்குளத்திற்கு வந்து, மாறன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் மாறனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக அந்தோணிராஜ், மகாதேவன் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    • செரீப் பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.
    • குறுக்கே சென்ற நபர் மீது மோதாமல் இருக்க செரீப் பிரேக் பிடித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் செரீப் (வயது 25). இவர் பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு மனைவியும், அப்துல் காதர் (4) என்ற மகனும் உள்ளனர். நேற்று மாலை செரீப் தனது மகன் அப்துல்காதரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெட்ரோல் டேங்க் மீது உட்கார வைத்து சென்றுள்ளார்.

    ஆமீன்புரம் 6-வது தெருவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டி ருந்தபோது சாலையின் குறுக்கே ஒரு நபர் சென்றுள்ளார். இதனால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக செரீப் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது டேங்க் மீது அமர்ந்திருந்த அப்துல்காதர் கீழே தூக்கி வீசப்பட்டான். இதில் படுகாயமடைந்த அவனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செரீப் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அப்துல்காதர் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியப்ப பாண்டியன் ஊராட்சி அலுவலகம் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நீங்கள் வரக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார்.

    நெல்லை:

    பாளை யூனியன் ராமையன் பட்டி பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக மாரியப்ப பாண்டியன் என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை யும் நடத்தி வருகிறார். இன்று காலை இவர் ராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் நெல்லை மாவட்ட ஊராட்சி களின் உதவி இயக்குனருக்கு அளிப்பதற்காக வைத்திருந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இந்த திறப்பு விழாவுக்கு பஞ்சாயத்து துணைத்தலைவரான செல்வகுமார் மற்றும் என்னை முறையாக அழைக்கவில்லை.

    நாங்கள் இது குறித்து கேட்டபோது, பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நீங்கள் வரக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.எனவே ஊராட்சி மன்ற தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அதிகார பேச்சை கண்டித்து நான் ஊராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து இன்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறி யிருந்தார்.

    • பழையபேட்டை துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பாரமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் காளி தாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம்,

    சிவந்திரோடு, சுந்திரதெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட், ஏ.பி. மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உசி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராசாத்திக்கும், முருகனுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • சம்பவத்தன்று ராசாத்தி தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் குமார் மனைவி ராசாத்தி (வயது43). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகனுக்கும் (50) நிலத்தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வருகிறது.

    பெண்ணுக்கு வெட்டு

    இந்நிலையில் சம்பவத்தன்று ராசாத்தி ஊருக்கு அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த முருகன், அவரது மனைவி ராஜேஷ்வரி (45), மகள் அனிதா (21) ஆகியோர் எங்கள் மீது ஏன் போலீசில் புகார் செய்தாய்? என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், ராஜேஷ்வரி, அனிதா ஆகியோர் ராசாத்தியை தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராசாத்தி களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.

    • தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.
    • புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, நெல்லை மாவட்டம் மணி முத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப் பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில்விட்டனர்.

    அதன்பின்னர் அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை புகுந்தது.

    நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.

    நேற்று அதிகாலையில், குடியிருப்பு பகுதிக்குள் யானைகளின் நடமாட்டத்தை அறிந்த தொழிலாளர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அரிக் கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இன்று காலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் அறிந்தனர்.

    தற்போது அதனை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக ப்ரியா கூறியதாவது:-

    மாஞ்சோலை வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அரிக்கொம்பன் யானை தான். வேறு யானை கூட்டம் எதுவும் வரவில்லை. தற்போது அந்த யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து உள்ளது. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும்.

    அதனால் தான் தற்போது அட்டகாசம் செய்து வருகிறது. இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனை சரி செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா.
    • திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா.

    நெல்லை:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா நடைபெற்றது. இத்திருச்சிலுவை ஆலயத்தில் வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையில் வசிக்கும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் சார்பில், இந்தியாவிலேயே உயரமான திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபம் 20 அடி உயரத்திலும், திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.

    பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமை தாங்கி, திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபத்தை அர்ச்சித்தார். பின்னர் ஆயரை கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக திருச்சிலுவை ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து திருச்சிலுவை ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் இரவில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அசன விருந்து நடைபெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் ஜோமிக்ஸ், ஞானப்பிரகாசம், அம்புரோஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை வ.எட்வின் ஆரோக்கியநாதன் மற்றும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் செய்து இருந்தனர்.

    • அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு பகுதியில் சாரல் மழை பெய்தது.
    • மணியாச்சியில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 62 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பாளை, நெல்லை டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 4.4 மில்லிமீட்டரும், நெல்லையில் 2.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாங்குநேரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.41 கனஅடியாக உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை 62.90 அடியாகவும், சேர்வலாறு அணை 77.49 அடியாகவும் உள்ளது. இந்த அணை பகுதிகளில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று பெரும்பாலான இடங்களில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 62 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    புதியம்புத்தூர் பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தூரல் மழை பெய்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், நிலங்களை குளிர வைத்ததாக கூறினர். பாஞ்சாலங்குறிச்சி, பசுவந்தனை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. எட்டயபுரம், விளாத்திகுளம், சாயர்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. விளாத்திகுளத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்த நிலையில் சுமார் 1 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

    மேலும் வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம், கீழ அரசடி, ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், திருச்செந்தூர், கடம்பூர், பசுவந்தனை, கழுகுமலை, கயத்தாறு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தென்காசியில் நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. அங்கு 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. செங்கோட்டையில் 4 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி 36 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 34.25 அடியாக உள்ளது.

    கருப்பாநதி அணையில் 7.5 மில்லி மீட்டரும், அடவிநயினாரில் 6 மில்லிமீட்டரும், கடனா மற்றும் ராமநதி அணைகளில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 1 அடி அதிகரித்து 93 அடியானது. ராமநதியில் 55.50 அடியும், கருப்பாநதியில் 32.81 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    • கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.
    • தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து அங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5, 6-வது அணு உலைகளுக்கான ரூ.600 கோடி மதிப்பிலான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கொண்டு வரப்பட்டது. அவற்றில் 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.

    மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களையும் கடந்த 8-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி கூடங்குளத்துக்கு வந்தபோது, அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இழுவை கப்பலுக்கும், மிதவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.

    தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சீற்றத்தால் மிதவை கப்பல் பாறையில் மோதி சேதமடைந்ததால், நீராவி ஜெனரேட்டர்களுடன் மூழ்கும் நிலை உள்ளது. அந்த ஜெனரோட்டர்களுக்கு ரூ.426 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், காப்பீடு நிறுவனத்தினர் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து அவர்கள் கடலுக்குள் ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைத்து, அதன்மூலம் கிரேனை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மிதவை கப்பலில் சேதம் அடைந்த பகுதிகளை வெல்டிங் செய்து சரிசெய்யும் பணியும் மற்றொரு புறம் நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் அந்த மிதவையை இழுவை கப்பலை கொண்ட இழுத்து செல்லலாம் என்ற முயற்சி நடக்கிறது.

    மேலும் தரையில் இருந்தபடியே அதிநவீன கிரேனை நிறுத்தி கடலுக்குள் இருக்கும் ஜெனரேட்டரை மீட்க முடியுமா எனவும் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பணிகள் 20 நாட்கள் வரை தொடரும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • மணிமூர்த்தீஸ்வரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த நாளில் விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் துன்பங்களும், துயரங்களும் உடனே நீங்கி விடுவதாக நம்பி அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மணிமூர்த்தீஸ்வ ரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாரதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாரதனையும், அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் திருவீதியுலாவும் தீபாரா தனைகளும் நடைபெற்றன. கோவிலில் வழிபாடுகள் இன்று அதிகாலையில் யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு விநாயகர் மூலமந்திர ஹோமம் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் மாபொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், பஞ்சாமிருதம், தேன் என 16 வகையான அபிஷேக பொருட்களால் ஸ்ரீமூர்த்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது.

    தியாகராஜநகர் விக்னவிநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு விநாயகர் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. நெல்லை மாநகரத்தில் இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் கடந்த ஆண்டை போல் 76 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெறுகிறது. நெல்லை டவுன் ஈசான விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 242 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    களக்காடு, திருக்குறுங்குடி, மானூர், வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள பிள்ளையார் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பூ, பழங்கள், கொழுக்கட்டைகள் வைத்து பக்தி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

    மாநகர இந்து முன்னணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அருகே 9 அடி உயர பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் மாநகர இந்து முன்னணி நிர்வாகிகள் இசக்கிமுத்து, ராகவேந்திரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் பகுதியில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அருகில் சானாதன கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் கோவில்களில் நடந்த சதுர்த்தி விழாவில் பக்தர்கள் எருக்கம் பூ மற்றும் அருகம்புல் ஆகியவற்றை மாலையாக கொண்டு வந்து விநாயகருக்கு சூட்டினர். மேலும் அவர்கள் கொண்டுவந்த நைவேத்திய பொருட்களான சுண்டல், பிடி கொழுக்கட்டை, மோதகம், அப்பம், அவல், பொரி, உள்ளிட்டவற்றையும் விநாயகருக்கு படைத்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் மட்டும் வழக்கம்போல் இந்த ஆண்டும் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி அங்கு மட்டும் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் மொத்தம் 320 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாது காப்புக்காக போடப்ப ட்டுள்ளனர். இதுதவிர இன்று சதுர்த்தி விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் ஏராளமான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்கள் விழாக்கோலம் பூண்டன.

    ×