search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solid Waste Management"

    • நெல்லை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்க தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதியில் சாலை மோசமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. புகார்

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் பாறையடி மணி, பகுதி துணை செயலாளர் மாரீசன் ஆகியோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்க தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாக தினமும் 700 பணியாளர்கள் மற்றும் குப்பை வாகனங்கள், உபகரணங்கள் மூலமாக குப்பைகளை சேகரிக்க வேண்டும். 4 மண்டலங்களிலும் 55 வார்டுகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் இதுவரை எந்த வார்டிலும் அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு ரூ.86 லட்சம் அந்த தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்போம்.

    பெண் கவுன்சிலர் மனு

    12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை சாலை தெருவில் இருந்து உடையார்பட்டி சாலை தெரு வரை சுமார் 1200 மீட்டர் நீளத்துக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கியது. ஆனால் இதுவரையிலும் 400 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

    நேதாஜிக்கு சிலை

    தச்சை மண்டலம் 2-வது வார்டு தி.மு.க வட்டச் செயலாளர் சடாமுனி அளித்த மனுவில், தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதியில் சாலை மோசமாக உள்ளது. குடிநீர் வசதியும் முறையாக இல்லை. எனவே இந்த 2 வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நம்பி குமார் அளித்த மனுவில், நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள மார்க்கெட்டில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பழையபடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும். மேலும் மார்க்கெட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பாலசம் அகடமி இணைந்து, திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பல்ராம் மெமோரியல் டிரஸ்ட் பொருளாளர் சுந்தர் தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னதாக மகளிர் குழுவினர் அமைத்திருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் தயாரித்த பொம்மைகள், மற்றும் மக்கும் குப்பைகள்,மறுசூழற்சி குப்பைகள்,மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யமுடியாத பொருட்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ், திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் ராஜசேகர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் காவேரி ப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், அம்மூர், திமிரி, விளாம்பாக்கம், கலவை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது.
    • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, மேற்கு ரோட்டரி மற்றும் துப்புரவாளன் அமைப்பு ஆகியன இணைந்து திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு குறும்பட வெளியீடு ஆகிய நிகழ்ச்சியை நடத்தின. துப்புரவாளன் அமைப்பு இயக்குநர் மோகன் வரவேற்றார். அமைப்பாளர் பத்மநாபன் அதன் நோக்கம் குறித்து பேசினார்.

    மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை மற்றும் அவற்றை முறையாக மாற்று வழியில் பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது. நகரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சேகரமாகும் குப்பை தான் காரணமாக உள்ளது.திடக்கழிவு மேலாண்மையை மக்கள் இயக்கமாக கொண்டு செல்கிறோம். இதில் தன்னார்வ அமைப்புகள் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவற்றுடன் மக்கள் ஒத்துழைப்பையும் அளித்தால் நிச்சயம் இந்த சவாலை எதிர் கொண்டு சமாளித்து வெற்றி பெற முடியும்.

    குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கினால், அவற்றை மறு சுழற்சி முறையில், நுண்ணுயிர் உரம், மின்சாரம், இயற்கை எரிவாயு, கட்டுமானப் பொருள் என பல விதங்களில் பயன்படுத்த முடியும். தற்போது 4 வார்டுகளில் செகன்டரி பாயின்ட் என்ற குப்பை குவியும் பகுதி இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் 60 வார்டுகளிலும் இது நடைமுறைக்கு வரும்.

    வீடுகளில் சேகரமாகும் குப்பை 800 மெட்ரிக் டன் அளவும், தொழிற்சாலை கழிவு மேலும் 600மெட்ரிக் டன். மாதம் சராசரியாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் சேகரமாகிறது. குப்பைகளை தரம் பிரித்தாலும் அவை ஒன்றாகவே பாறைக்குழிகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது. நிர்வாகத்துக்கு அதிக செலவும் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசு கையில், 'திருப்பூரைப் பொறுத்தவரை வீடு, கடை, ஓட்டல், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து விதமான கழிவுகளும் ஒன்று சேர்ந்து சேகரமாகிறது. இதைப் பிரித்து முறையாக மாற்று முறையில் பயன்படுத்தினால் அதை பலன் தரும் விதமாக கையாள முடியும்' என்றார்.துணை மேயர் பாலசுப்ரமணியம், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

    • பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • குப்பைகளை எவ்வாறு தரம்பிரித்து பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் தீவிர தூய்மை பணி முகாம் அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம், அரசு தாலுகா மருத்துவமனை, ரெட்டைமடம் தெரு, கீரைக்கடைத் தெரு, மந்தை வெளி, பவுண்டு தொழு தெரு, பழைய காவல் நிலையம் அருகில் மற்றும் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

    இப்பகுதியில் மக்கும் குப்பை தொட்டி மற்றும் மக்காத குப்பை தொட்டிகள் வைத்து பொதுமக்கள் தனித் தனியே குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில் சேகரிக்கும் குப்பைகளை பள்ளியின் வளாகத்தில் குப்பை கிடங்கு ஏற்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    மேலும் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உரப்பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை இயற்கை உரங்கள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய விவசாய உற்பத்தி குறித்தும், இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளையக்கூடிய விளை பொருட்களால் ஏற்படும் பயன்கள் குறித்தும், குப்பைகளை எவ்வாறு தரம்பிரித்து பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், வரிவிதிப்பு குழு உறுப்பினர் செந்தில்வேல், கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, மருதவள்ளி முருகன், ரத்தினராஜ், முத்துலட்சுமி, தலைமை எழுத்தர் தங்கராஜ், மாடசாமி, சக்திவேல், குமார், தினேஷ் குமார், லாசர் எட்வின் ராஜாசிங், செல்லப்பன், மேஸ்திரி இசக்கி மற்றும் தூய்மை பணியாளர்கள், விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 4வது சனிக்கிழமையில், ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • துப்புரவு பணியாளர்களுக்கான சுகாதார முகாம் நடத்தப்படும்.

    உடுமலை:

    உடுமலை தாலுகாவில் உள்ள பேரூராட்சிகளில், 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' என்ற பெயரில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வீடுகளிலேயே குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகை பிரித்து, சுற்றுப்புற தூய்மை, பாலித்தீன் தவிர்ப்பு குறித்து அறிவுறுத்தப்படுகிறது.இதற்கென இரண்டாவது மற்றும் 4வது சனிக்கிழமையில், ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இதேபோல அடுத்த மாதம், 9-ந் தேதி சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு கழிவுநீரை பாதுகாப்பாக அகற்றுவது, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்குவது சமூக மற்றும் பொது கழிப்பறை சுத்தம் தொடர்பான ஓவியப்போட்டி நடத்தப்படும்.

    தவிர இவை தொடர்பான கண்காட்சி, குறும்படம் காண்பிப்பது, தெரு நாடகப்போட்டி நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். இது ஒருபுறமிருக்க வீணாக வீசியெறியப்படும் பொருளில் இருந்து கலைநயமிக்க பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கப்படுவர்.துப்புரவு பணியாளர்களுக்கான சுகாதார முகாம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×