என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • கொடியேற்றத்தையொட்டி மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் பவனியாக எடுத்து வரப்பட்டது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் புனித மிக்கேல் அதிதூதர் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தார்.

    இந்த புனித கொடியை குருவானவர்கள் ஜெபநாதன், லாரன்ஸ், பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை ஜாண் ரோஸ் ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர் அசன விருந்து வழங்கப்பட்டது.

    தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, மன்றாட்டு மாலை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு திருவிழா நாட்களையும் அன்பியங்களை சேர்ந்த இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படு கிறது.

    அன்று மாலை 7 மணிக்கு பாதிரியார் நெல்சன் பால்ராஜ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. திராளான பக்தர்கள் இப்பவனியில் பங்கேற்று உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.

    29-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் பாதிரியார் சகாயம் தலைமை யில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி மரிவல வழிபாடும், அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. இரவு அசனவிருந்து வழங்கப்படு கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமையில் விழாக்கு ழுவினர் செய்துள்ளனர்.

    • சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் உரிய புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டார். எனினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    • ரெயிலுக்கான பயண கட்டணம், பயணிகளுக்கான உணவு, டிக்கெட் முன்பதிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.
    • இன்று அல்லது நாளை முழுமையான பயண விபரங்கள் வெளியாகும் என்று ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்த நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையில் நடக்கிறது. அன்று காலை 11.30 மணியளவில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் தனது பயணத்தை தொடங்குகிறது. தொடக்க விழா ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த ரெயில் 8 பெட்டிகள் கொண்டதாக உள்ளது. சுமார் 652 கிலோமீட்டர் தூர பயணத்தை வந்தே பாரத் ரெயில் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தினமும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 7.15 மணிக்கு விருதுநகர், 7.50 மணிக்கு மதுரை, 8.40 மணிக்கு திண்டுக்கல், 9.55 மணிக்கு திருச்சியை இந்த ரெயில் சென்றடைகிறது. மணிக்கு சுமார் 83.30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் 2.50-க்கு புறப்பட்டு, மாலை 6.45 மணிக்கு திருச்சி, இரவு 7.55 மணிக்கு திண்டுக்கல், 8.45 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரெயில் வந்தடைகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் வந்தே பாரத் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரெயிலுக்கான பயண கட்டணம், பயணிகளுக்கான உணவு, டிக்கெட் முன்பதிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இன்று அல்லது நாளை முழுமையான பயண விபரங்கள் வெளியாகும் என்று ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரெயிலை கொண்டு வர நேற்று தொழில்நுட்ப குழு அங்கு புறப்பட்டு சென்ற நிலையில், இன்று காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. காலை 7.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் அந்த ரெயில், 2 நிமிடங்கள் பயணிகள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து காலை திருச்சியை வந்தடைந்தது. தொடர்ந்து திண்டுக்கல்லுக்கும், மதுரைக்கும் வந்தே பாரத் ரெயில் வந்து சேர்ந்தது. அங்கு 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் மதியம் விருதுநகர் வந்தடைந்தது. தொடர்ந்து நெல்லைக்கு பிற்பகலில் வந்தே பாரத் ரெயில் வந்து சேர்ந்தது.

    இந்தநிலையில் நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கான சோதனை ஓட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நேர அட்டவணைப்படி காலை 6 மணிக்கு ரெயில் புறப்படுகிறது. இதில் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    குறிப்பிட்ட நேரங்களில் ரெயில் பயண தூரத்தை கடந்து செல்கிறதா? என சோதனை செய்யப்படும். இதேபோல மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • காலையில் வெயில் அடிப்பதும், மாலையில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை, திருச்செந்தூர் சாலை, பாளை, புதிய பஸ் நிலையம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    இந்த மழையால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இரவு நேரத்தில் வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 8.6 மில்லிமீட்டர் மழை கொட்டியது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அங்கு 16 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாளையில் 3.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் நீர் இருப்பு 80.35 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 520.75 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் காக்காச்சி எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் 8 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் அணை பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் மட்டும் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையில் தற்போது நிலவரப்படி 94.75 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணையில் 34.87 அடியும், கடனா அணையில் 47.60 அடியும், ராமநதியில் 55 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணியாச்சி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கடம்பூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    அங்கு 39.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் கயத்தாறு பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. காடல்குடியில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சிரமப்பட்டதோடு வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீரென பெய்த மழையினால் இப்பகுதிமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
    • வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

    நெல்லை:

    கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிக்கொம்பன் யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

    பின்னர் அந்த யானை குமரிமாவட்டம் மேல் கோதையாறு பகுதியை கடந்து குட்டியாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி மாஞ்சோலை பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் நாலுமுக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அதனை வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

    இந்நிலையில் மஸ்து பாதிப்பால் ஆக்ரோசமாக இருந்த அந்த யானைக்கு நேற்று காலை பாதிப்பு குறைந்து ஊத்து தொழிற்சாலை, பள்ளிக்கூடம் பகுதியில் சுற்றித்திரிந்தது. அதனை விரட்டினால் குடியிருப்புக்குள் புகுந்துவிடும் என்பதால் வனத்துறையினர் நிதானம் காட்டி வந்தனர்.

    தொடர்ந்து அதன் நடமாட்டத்தை ரேடார் மூலம் அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், நேற்று மதியம் மேல் கோதையாறு பகுதிக்கு அரிக்கொம்பன் திரும்பியது. அங்கு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், அந்த இதமான சூழ்நிலையை நோக்கி அரிக்கொம்பன் நகர்ந்து கொண்டே இருந்த நிலையில் இரவு முத்துக்குழி வயல் பகுதியை அடைந்தது.

    தற்போது முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கு தேவையான உணவை அரிக்கொம்பன் யானை தேடி அலைவதாகவும், ஆனாலும் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் விடவேண்டும் என்று கேரளாவை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் அரிக்கொம்பன் யானை மீட்பு குழு என்ற பெயரில் அம்பை வனக்கோட்ட அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை கால கட்டத்தில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாளை தீயணைப்புத்துறை சார்பில் பாளையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    பேரிடர் மீட்பு

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் பேரிடர் மீட்பு குறித்து விளக்க உரையாற்றினார்.

    கலெக்டர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். தீய ணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பிளாஸ்டிக், தேங்காய் மட்டை, கியாஸ் சிலிண்டர், தண்ணீர் கேன்கள், தெர்மாகோல் உள்ளிட்டவை மூலமாக வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனை ஒத்திகையாகவும் தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ஒத்திகை

    வெள்ளத்தில் சிக்கி கொண்ட கர்ப்பிணிகள், முதியோர்களை பாது காப்பாக மீட்பது எப்படி?, தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருவதற்கு முன்பாக என்னென்ன சாதனங்களை பயன்படுத்தி வெள்ளத்தில் இருந்து மீண்டு வரலாம் என்பது போன்ற மீட்பு ஒத்திகையை மாணவிகளுக்கு தீயணைப்பு துறை அலுவலர்கள் செய்து காண்பித்தனர்.

    அதேபோன்று விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் திடீர் உடல்நல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்தும் செயல்முறை விளக்கத்தின் மூலம் எடுத்துக்கூறினர். இதுதவிர தீயணைப்பு மீட்பு துறை சார்பில் அவசர கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் நவீன சாதனங்கள் குறித்தும் எடுத்து கூறினர்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்களை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    • ஆய்வின்போது கெட்டுப்போனதாக கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
    • தவறு நடைபெற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    நெல்லை:

    நாமக்கல் மாவட்டத்தில் காலாவதியான சவர்மா சாப்பிட்ட ஒருவர் உயிரி ழந்தார். மேலும் சிலர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

    உணவகங்களில் சோதனை

    இதன் எதிரொலியாக நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி மாநகரப் பகுதி முழுவதும் உள்ள ஓட்டல்களில் தரமான உணவுகள் விற்கப்படு கிறதா? சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சிகள் காலாவதியாகி அதனை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து 4 மண்டலங்களிலும் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டலில் இன்று சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இறைச்சி பறிமுதல்

    டவுன் பகுதிகளில் நெல்லை கண்ணன் சாலையில் உள்ள அசைவ ஓட்டல் மற்றும் சுவாமி சன்னதி சாலையில் உள்ள ஓட்டல்கள், டவுன் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது கெட்டுப்போனதாக கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. சில கடைக்காரர்களுக்கு அப ராதமும் விதிக்கப்பட்டது.

    அப்போது தூய்மை இந்தியா திட்ட பணியாளர் சங்கர், உதவியாளர் இசக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதே போல் கடைகளில் கெட்டு போன சிக்கன் பயன்படுத்தக்கூடாது. தவறு நடைபெற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப் பட்டது.

    களக்காடு

    களக்காடு நகராட்சி பகுதியில், அசைவ உண வகங்களில் நகராட்சி சுகா தார ஆய்வாளர் முத்து ராமலிங்கம் தலைமையில் மேற்பார்வையாளர் வேலு மற்றும் அதிகாரிகள் சோ தனை நடத்தினர். அப்போது உணவகங்களில் உணவு தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சவர்மா, சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை, உற்பத்தி செய்கின்ற அன்றே விற்பனை செய்ய வேண்டும் என்று உணவக உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.1000 அபரா தமும் விதிக்கப்பட்டது.

    • மாலை டவுன் பகுதியில் டியூசனுக்கு சென்ற பிளஸ்-1 மாணவன் பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.
    • விசாரணையில் சிறுவனை தாக்கியது கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவன் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இவன் நேற்று மாலை டவுன் பகுதியில் டியூசனுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

    அப்போது அவனை வழிமறித்த சிலர் மாணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிறுவனை அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த சிறுவன் இது தொடர்பாக தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்தி போது சிறுவனை தாக்கியது கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாணவனை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.

    • விஜயாபதி மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாங்குநேரி, ராஜாக்கள் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களான நாங்குநேரி, விஜயாபதி மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே நாங்குநேரி துணை மின்நிலை யத்திற்குட் பட்ட நாங்குநேரி, ராஜாக்க ள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள். மேலும் விஜயாபதி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளைய நயினார்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஜனவரி மாதம் நவநீதன் கிருஷ்ணன் கோவிலில் வைத்து ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
    • பேச்சிமுத்து உள்பட 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை (வயது 65). ஆட்டோ டிரைவர்.

    வெட்டிக்கொலை

    இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

    4 பேர் கைது

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் நவநீதன் கிருஷ்ணன் கோவிலில் வைத்து ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக அந்த கொலையில் தொடர்புடைய ஒருவரின் உறவினரான விஜயகுமாரை, அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக 12 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில் மேலச்செவலை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்ற கண்ணன் (வயது 25), முப்பிடாதி (20), மேலச்செவல் ரஸ்தா தெருவை சேர்ந்த மாயாண்டி (21), நடுக்கல்லூரை சேர்ந்த பேச்சிமுத்து (20) ஆகிய 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

    இதற்கிடையே 4 நாட்களாக விஜயகுமார் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து மேலச்செவல் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், தாசில்தார் விஜயா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அதில் விஜயகுமாரின் மனைவி அல்லது மகனுக்கு வேலைக்கு பரிந்துரை செய்வது, விதவைகளுக்கான சலுகைகள், நிவாரண உதவி கிடைக்க உதவி செய்வது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று உடலை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • மைக்கேல் அந்தோணி லூசியன் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
    • லாரி மோதியதில் மைக்கேல் அந்தோணி லூசியன் படுகாயம் அடைந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியை சேர்ந்த மைக்கேல் கிராண்ட் துரை மகன் மைக்கேல் அந்தோணி லூசியன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பொத்தைசுத்தி செங்கல்சூளை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை மைக்கேல் அந்தோணி லூசியன் முந்தி செல்ல முயற்சி செய்தார்.

    அப்போது திடீர் என லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைக்கேல் அந்தோணி லூசியன் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த வாகைகுளத்தை சேர்ந்த கந்தையா (54) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்து வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.
    • அரிக்கொம்பனை தற்போது நாங்களாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்களை பீதியடைய செய்த அரிக்கொம்பன் யானையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிடித்து வந்து மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மேல் கோதையாறு அணை வழியாக கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் வனத்துறையினர் விட்டனர். பின்னர் அதன் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் ரேடார் கருவியும் பொருத்தினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை திடீரென்று புகுந்தது. நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பு இருந்த வாழை மரங்களை சாய்த்தும், வாழைத்தார்களை தின்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் யானை நிற்பதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யானை அங்கு இல்லை.

    இதனால் அம்பை, களக்காடு வனக்கோட்டங்களை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அரிக் கொம்பன் யானை ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்து வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். தொடர்ந்து அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறியதாவது:-

    அரிக்கொம்பன் யானை இன்று காலை 8 மணி நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் சற்று தொலைவில் உள்ள ஆர்கானிக் தொழிற்சாலை அருகே நடமாடி வருகிறது. தற்போது அதற்கு மஸ்து எனப்படும் மதநீர் குறைந்து இயல்பு நிலையில் இருக்கிறது.

    நேற்று இரவு நாலுமுக்கு-ஊத்து சாலை பகுதியில் அடர்ந்த மூடுபனி காணப்பட்டதால் எங்களால் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ரேடார் கருவியில் எந்த பழுதும் இல்லை. தற்போது வரை அந்த ரேடார் சீரான இயக்கத்திலேயே உள்ளது.

    அரிக்கொம்பனை தற்போது நாங்களாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அதன் நடமாட்டத்தை மட்டுமே கண்காணித்து வருகிறோம். ஏனெனில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நாம் அரிக்கொம்பனை விரட்ட முயற்சிக்கும்போது, அது எங்கு செல்வது என்று தெரியாமல் குடியிருப்புக்குள் புகுந்து விட்டால் ஆபத்தாகி விடும்.

    எனவே அரிக்கொம்பனால் தேயிலை தோட்ட குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடாத வண்ணம், அதுவாகவே தானாக வனத்துக்குள் செல்ல வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×