என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை - நாளை சோதனை ஓட்டம்
    X

    இயக்கத்திற்கு தயாராக உள்ள வந்தே பாரத் ரெயில் இன்று காலை சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்ட காட்சி.

    நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை - நாளை சோதனை ஓட்டம்

    • ரெயிலுக்கான பயண கட்டணம், பயணிகளுக்கான உணவு, டிக்கெட் முன்பதிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.
    • இன்று அல்லது நாளை முழுமையான பயண விபரங்கள் வெளியாகும் என்று ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்த நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையில் நடக்கிறது. அன்று காலை 11.30 மணியளவில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் தனது பயணத்தை தொடங்குகிறது. தொடக்க விழா ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த ரெயில் 8 பெட்டிகள் கொண்டதாக உள்ளது. சுமார் 652 கிலோமீட்டர் தூர பயணத்தை வந்தே பாரத் ரெயில் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தினமும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 7.15 மணிக்கு விருதுநகர், 7.50 மணிக்கு மதுரை, 8.40 மணிக்கு திண்டுக்கல், 9.55 மணிக்கு திருச்சியை இந்த ரெயில் சென்றடைகிறது. மணிக்கு சுமார் 83.30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் 2.50-க்கு புறப்பட்டு, மாலை 6.45 மணிக்கு திருச்சி, இரவு 7.55 மணிக்கு திண்டுக்கல், 8.45 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரெயில் வந்தடைகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் வந்தே பாரத் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரெயிலுக்கான பயண கட்டணம், பயணிகளுக்கான உணவு, டிக்கெட் முன்பதிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இன்று அல்லது நாளை முழுமையான பயண விபரங்கள் வெளியாகும் என்று ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரெயிலை கொண்டு வர நேற்று தொழில்நுட்ப குழு அங்கு புறப்பட்டு சென்ற நிலையில், இன்று காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. காலை 7.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் அந்த ரெயில், 2 நிமிடங்கள் பயணிகள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து காலை திருச்சியை வந்தடைந்தது. தொடர்ந்து திண்டுக்கல்லுக்கும், மதுரைக்கும் வந்தே பாரத் ரெயில் வந்து சேர்ந்தது. அங்கு 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் மதியம் விருதுநகர் வந்தடைந்தது. தொடர்ந்து நெல்லைக்கு பிற்பகலில் வந்தே பாரத் ரெயில் வந்து சேர்ந்தது.

    இந்தநிலையில் நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கான சோதனை ஓட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நேர அட்டவணைப்படி காலை 6 மணிக்கு ரெயில் புறப்படுகிறது. இதில் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    குறிப்பிட்ட நேரங்களில் ரெயில் பயண தூரத்தை கடந்து செல்கிறதா? என சோதனை செய்யப்படும். இதேபோல மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×