என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • காலையில் வெயில் அடிப்பதும், மாலையில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை, திருச்செந்தூர் சாலை, பாளை, புதிய பஸ் நிலையம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    இந்த மழையால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இரவு நேரத்தில் வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 8.6 மில்லிமீட்டர் மழை கொட்டியது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அங்கு 16 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாளையில் 3.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் நீர் இருப்பு 80.35 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 520.75 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் காக்காச்சி எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் 8 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் அணை பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் மட்டும் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையில் தற்போது நிலவரப்படி 94.75 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணையில் 34.87 அடியும், கடனா அணையில் 47.60 அடியும், ராமநதியில் 55 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணியாச்சி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கடம்பூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    அங்கு 39.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் கயத்தாறு பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. காடல்குடியில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சிரமப்பட்டதோடு வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீரென பெய்த மழையினால் இப்பகுதிமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×