என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 24-ந் தேதி முதல் இயக்கம்
- சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும்.
- வந்தே பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
இந்திய ரெயில்வே சார்பில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை-கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி சுதந்திர தின நாளில் வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்கும் என தகவல் பரவிய நிலையில் அது தள்ளிப்போனது.
தொடர்ந்து கடந்த வாரம் நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலுக்கு வண்டி எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை-சென்னை எழும்பூர் ரெயிலுக்கு 20632 என்ற எண்ணும், சென்னை-நெல்லை ரெயிலுக்கு 20631 என்ற எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. நெல்லை ரெயில் நிலையத்தில் தொடக்க விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த முன்னேற்பாடு பணிகளை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் இன்று ஆய்வு செய்தார். அப்போது நடைமேடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில் தென்னக ரெயில்வே கோட்டத்தில் காசர்கோடு-திருவனந்தபுரம், சென்னை-விஜயவாடா, நெல்லை-சென்னை ஆகிய 3 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெறுகிறது. அதனை ஆய்வு செய்ய வந்துள்ளோம். நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் முதல் கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று செல்லும். மேலும் சில இடங்களில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை வைத்துள்ளர். அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் சந்திப்பு ரெயில் நிலையத்தை எத்தனை கோடியில் புதுமைபடுத்தலாம்? , எத்தனை எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள் அமைக்கலாம்? என்பது போன்ற தகவல்களை அறிக்கையாக எங்களுக்கு அளிப்பார்கள்.
நாங்கள் அதனை இந்திய ரெயில்வே துறைக்கு அனுப்பி அனுமதி வாங்கிய பின்னர் பணிகள் நடைபெறும் என்றார். அப்போது முதல் நிலை வணிக மேலாளர் ரதிபிரியா, சீனியர் கோட்ட இயக்குனர் பிரசன்னா, சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவையொட்டி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்திப்பு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். சுமார் 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும். இதில் 1 பெட்டி வி.ஐ.பி.களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வி.ஐ.பி. பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும், மற்ற பெட்டிகளில் தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்தடையும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் நெல்லையில் இருந்து தனது இயக்கத்தை தொடங்க உள்ளதால், சென்னையில் தயார் நிலையில் உள்ள வந்தே பாரத் ரெயிலை நெல்லைக்கு கொண்டு வர நெல்லையில் இருந்து தொழில்நுட்ப குழு சென்னைக்கு இன்று புறப்படுகிறது. இந்த குழு நாளை வந்தே பாரத் ரெயிலை நெல்லைக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு, சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரெயில் இயக்கம் எப்போது என பயணிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.






