என் மலர்
தேனி
- தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
தேனியில் நாதக- தவெக இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருதரப்பு மோதலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
தவெக தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நகர செயலாளர் சலாம் ஆகியோருக்கு போலீசார் வலைவீசப்பட்டுள்ளது.
- பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே நீர்வரத்தாக இருந்து வந்தது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது. வைகை அணையில் இருந்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் 300 கன அடி வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 45.80 அடியாக உள்ளது. வரத்து 442 கன அடி. இருப்பு 1489 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3004 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.36 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாகவும் உள்ளது.
- காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார்.
- இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகில் உள்ள குல்லப்புரம் மேட்டுக்காலனியை சேர்ந்த சங்கிலி மகன் ஜான்பாண்டியன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் காதலை கைவிட்டார்.
அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டதால் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் ஜான்பாண்டியன் தரப்பினரை வரவழைத்து இனிமேல் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜான்பாண்டியன் தப்பி ஓடினார்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ஏட்டு சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜான்பாண்டியனை கைது செய்தனர்.
- வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
- கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல வைகை ஆற்றை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், வைகை ஆற்றில் நீர்வரத்து மிகக் குறைந்து காணப்படுகிறது. விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஆறு முழுமையாக வறண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும். அதே சமயம் வெயில் தாக்கம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உறைகிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறையும் என்பதால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கிராமங்களில் சேதம் அடைந்து குடிநீர் வீணாகி வரும் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.60 அடியாக உள்ளது. அணைக்க 277 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை சேடப்பட்டி, திருமங்கலம் குடிநீருக்காக 69 கன அடி மற்றும் பாசனத்துக்காக 300 கன அடி என மொத்தம் 369 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1468 மி.கன அடியாக உள்ளது.
- பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம்.
பெரியகுளம்:
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ள நிலையில் மேலும் சிலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வந்த நிலையிலும் ஓ.பி.எஸ். மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாளாக ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பலர் தமிழகம் முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இணைந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்றும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்து வருவதால் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதப்படுத்தி வந்தார். அ.ம.மு.க. அணியில் குக்கர் சின்னத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட்டு வழங்கப்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம், போடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு இதுவரை தோல்வியே காணாத தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எனவே வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது தமிழக வெற்றிக்கழகம் ஆகிய அணிகளில் ஓ.பி.எஸ். இணைவார் என்று பரவலாக கருத்துகள் வெளியாகின. இன்று பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது நிர்வாகிகள் அனைவரும் நாம் அடுத்து எந்த அணியில் இடம்பெற வேண்டும்? எவ்வாறு தேர்தலில் பங்காற்ற வேண்டும்? என்ற கருத்தை துண்டுச்சீட்டில் எழுதி தருமாறும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அளிக்கும் ஆலோசனைகளின் முடிவை வைத்து தான் முடிவு எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வதாகவும், துண்டுச்சீட்டு மூலம் கருத்தை வைத்து முடிவு எடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ராமநாதபுரம் தொகுதியில் நான் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க மட்டுமே.
ஆனால் அங்கும் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டனர். தற்போது வரை அ.தி.மு.க. வலிமையாகவே உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும். இதைத்தான் நான் இன்றும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில யூடியூப் சேனல்களில் நான் வெவ்வேறு அணியில் இணையப்போவதாக அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம். மீண்டும் நான் இணைய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரது நல்லெண்ணைத்தை காட்டுகிறது. அதைத்தான் நானும் கூறி வருகிறேன். அவர் நினைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வில் என்னை இணைக்க முடியும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு ரெடியாக உள்ளாரா? என்று கேட்டுச் சொல்ல வேண்டும். நான் இணைய தயாராகத்தான் உள்ளேன். எனவே ஒன்றிணைப்புகான முயற்சியில் டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைகை அணை நீர்மட்டம் பருவமழையின்போது முழு கொள்ளளவை எட்டியது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் பருவமழையின்போது முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதாபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அவ்வப்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து இன்று காலை நிலவரப்படி 46.62 அடியாக உள்ளது. 831 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 1869 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது. 142 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3802 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. தேக்கடி 1.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது.
- விவசாயிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக்கின் நினைவாக அவருக்கு தமிழக அரசு தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் நினைவு மணி மண்டபமும், அவருடைய முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மணி மண்டபத்திற்கு தேனி மாவட்ட பகுதி மக்கள் மட்டும் இன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். அவருடைய 185-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங், தங்க தமிழ்செல்வன் எம்.பி. ஆகியோர் தலைமையில் பென்னிகுவிக் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக லோயர்கேம்ப்பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பென்னி குவிக் மணிமண்டபம் வரை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து வண்டியை ஓட்டி வந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கதிரவன், திட்ட இயக்குனர் சந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி ,கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை, சுகாதார அலுவலர் விவேக், தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் சையதுகான், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், நமது வெற்றி கழககட்சி நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா, த.வெ.க. கட்சி, மின்வாரிய குடியிருப்புபகுதியினர், கம்பம் பள்ளத்தாக்குபாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம், பார்வர்டு பிளாக் கட்சி, நாம்தமிழர் கட்சி, பா.ஜ.க கட்சியினர், பாரதிய கிஷான் சங்கம், முல்லை சாரல்விவசாயிகள் சங்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர்உட்பட விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்துமாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.
விவசாயிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். கடந்த 2019ம் ஆண்டு முதல் பென்னி குவிக்கின் பிறந்தநாள் விழாவினை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.
இதையொட்டி கூடலூர் நகராட்சி சார்பில் மணிமண்டபம் முன்பு மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் கரகாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், பரதநாட்டியம், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்பட தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்பு துறை, சுற்றுலா துறை மற்றும் கூடலூர் நகராட்சியினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பென்னி-குவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதையொட்டி தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை கைகொடுத்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த அக்டோபர் மாதம் 70 அடியை தாண்டி முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறப்பாலும், அதன்பின் மழை குறைந்ததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 680 கனஅடியாக உள்ள நிலையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1933 மி.கனஅடியாக உள்ளது.
இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது. வரத்து 341 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 5060 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 3 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாகவும், சண்முகாநதி அணை நீர்மட்டம் 34 அடியாகவும் உள்ளது.
மாவட்டத்தில் மழை குறைந்துள்ள நிலையில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- அணையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70.24 அடிவரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது மழை பெய்தாலும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் முழு கொள்ளளவில் இருந்த அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை நிலவரப்படி 49.54 அடியாக உள்ளது. 752 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1933 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 744 கனஅடியாக உள்ளது. தம்பதி முல்லை பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்கள் உடலை தேடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதனால் அணையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதால் நேற்று முதல் பாசனத்திற்கான நீருடன் சேர்த்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் லோயர் கேம்ப்பில் உள்ள நீர்மின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக உள்ளது. 5212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 35.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் கள நிலவரங்களை தெரிவித்து வந்தோம்.
- ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளார்.
போடி:
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது சாத்தியமா என்பதற்கு சாத்தியப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே. அதற்காகத்தான் இந்த போராட்டம். இன்று மக்களுடைய குரலாக அது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் தற்போது த.வெ.க.வில் இணைந்து விட்டார். அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தது நான் தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி வெகு நாள் ஆகிவிட்டது.
நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் கள நிலவரங்களை தெரிவித்து வந்தோம். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கியபோது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் அதன் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவைகள் மீறிவிட்டது மீண்டும் எம்.ஜி.ஆர். உடைய இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தற்போது வரை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறோம். கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இயங்கி வருகிறோம்.
ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளார். மேலும் பலர் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். அனைவரும் ஒன்றிணைந்தாலே வெற்றி உறுதி. கட்சி விதிகளை மீட்டெடுக்கும்வரை எங்களது சட்டபோராட்டம் தொடரும் என்றார்.
- எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.
- ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்து போட்டியிட போவதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல. நான் ஏற்கனவே கூட்டணி குறித்து பிப்.24ம் தேதிக்கு பிறகு அறிவிப்பதாக தெரிவித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வெற்றி, தோல்விகளை இந்த இயக்கம் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என முடிவு செய்து களப்பணி ஆற்றினோம். அதேபோல் வருகிற தேர்தலிலும் அ.ம.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும்.
இதை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு நிர்வாகிகள் தயாராக உள்ளனர். வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.
நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 23 வயதில் இருந்து அரசியல் பாடம் கற்றவன். எனவே தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து வெற்றி வியூகம் வகுக்க வேண்டும் என தெரியும். திருவிழா போல ஒரே மாதத்தில் மறந்து முடிவதில்லை. ஒரு கட்சி தேர்தலுக்குப் பிறகும் களத்தில் நிற்க வேண்டும். அதனை மனதில் வைத்து எங்கள் பயணம் தொடரும். லட்சியம், கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட இயக்கமாகும். ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என்றார்.
- நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பாசனத்திற்கு போக வைகை அணைக்கு செல்லும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணையின் மேலாண்மை, நீர் பயன்படுத்தும் உரிமை, நீர்திறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை செய்து வருகிறது.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் வதந்தியை கிளப்பி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு தமிழக அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணை பலமாக உள்ளது. அச்சப்பட தேவையில்லை என உத்தரவிட்டு பல்வேறு வழிகளை வழங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் 10ம் தேதி அணையை மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. பின்னர் மதுரையில் நடத்திய ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நவீன ஆர்.ஓ.வி. மூலம் ஆய்வு நடத்த இரு மாநில அதிகாரிகள் ஒப்புதலோடு முடிவு எடுக்கப்பட்டது.
தரைக்கு மேல் இருந்து இயக்கப்படும் இந்த கருவி மூலம் அணைக்கு அடியில் நீரில் மூழ்கியுள்ள சுவர்கள், தடுப்புகள், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆராயலாம். மேலும் ஆழமான அபாயகரமான பகுதிகளில் கருவிகள் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் முப்பரிமாண வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்து கொள்ளலாம. 14 ஆண்டுகளுக்கு பின்னர் 2வது முறையாக ஆய்வு நடத்துவதற்காக ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்.ஓ.வி. நீர் மூழ்கி கலம் வரவழைக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஆய்வுக்காக சுமார் 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவுடன் துறை அதிகாரிகள், இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் நாளை முதல் அணையின் 250 மீட்டர் நீருக்கு அடியில் அணையின் உட்புறம், முன்புறப்பகுதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. தினசரி 20 மீட்டர் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்பதால் 12 நாட்கள் வரை ஆய்வு நடபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






