என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • மழையில் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பிகள் கீழே அறுந்து கிடப்பது தெரியாமல் 3 கறவை மாடுகளும் கம்பியில் உரசின.
    • இறந்து போன கறவை மாடு தலா 75 ஆயிரம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கூத்தைப்பாரை சேர்ந்த விவசாயி சேகர் ( வயது 53). இவர் சொந்தமாக பால் கறந்து வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 சீமை கறவை மாடுகளும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கறவைமாடும் மேய்ச்சலுக்கு சென்றன.

    இந்த நிலையில் மாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையில் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பிகள் கீழே அறுந்து கிடப்பது தெரியாமல் 3 கறவை மாடுகளும் கம்பியில் உரசின. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

    இன்று காலை மாட்டை தேடி மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்த பொழுது தான் மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இறந்த மாடுகளை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண்ணீர்விட்டனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் சம்பா ஒருபோக நடவு பயிருக்காக நாற்றங்கால்கள் உளவு ஒட்டி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது விவசாயப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் சென்று வரும் வருகின்றனர். அதிர்ஷ்ட வசமாக இந்த மின்கம்பி அருந்து விழுந்ததில் விவசாயிகள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தப்பி உள்ளனர். இறந்து போன கறவை மாடு தலா 75 ஆயிரம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. 

    • மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர்.
    • மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதா? முறைகேடுகள் நடந்துள்ளதா? என்ற அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை சோதனை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியதால், டிரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் ரத்து செய்து திரும்பினர்.

    இந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். இவற்றை டிரோன் கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று சோதனை நடத்த முடியாமல் போன மருவூர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். பின்னர் அவர்கள் குவாரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 மணல் குவாரிகளிலும் சோதனை நடந்து வருகிறது. இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    • தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
    • வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் , கர்நாடகாவில் போராட்டத்தை தூண்டி விடும் பா.ஜ.க. மற்றும் கன்னட அமைப்பு நிர்வாகிகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் உருவப்படம் அடங்கிய பேனருக்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பேனர் முன்பு நின்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த நூதன போராட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருகிற 25-ந் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா வரும் 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    சதயவிழா

    பார் போற்றும் புகழுடைய தஞ்சை பெரியகோவிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

    சதய நட்சத்திர நாளான 25 ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இவ்விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு சதய விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று பெரிய கோவிலில் நடைபெற்றது.

    பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டன.

    பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணை தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், நகை சரிபார்ப்பு துணை ஆணையர் சூரியநாராயணன், நகை சரிபார்ப்பு அதிகாரி சுப்பிரமணியன், கவிஞர் செழியன் உளபட பலர் கலந்து கொண்டனர்.

    வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் நடக்கும் சதய விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பெருவு டையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. 

    • காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது
    • தஞ்சை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு உரிய அளவு காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் தண்ணீர் திறந்து விட எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சி , இயக்கத்தினர், அமைப்பினர், தொழில் சங்கத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

    இதையடுத்து தஞ்சை காந்திஜி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் திறந்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்திரல் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், துணை செயலாளர் கனகவல்லிபாலாஜ், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், நிர்வாகிகள் 48-வது வார்டு பிரதிநிதி செழியன், 49-வது வார்டு சண்முகம், ராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், வயலூர் ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு மனோகரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்காராவி, வெற்றிவேந்தன், ம.தி.மு.க. மாவட்டசெயலாளர் தமிழ்செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி , செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் திலகர், பொருளாளர் சதீஷ்பாலாஜி, நகர பொருளாளர் செல்வம், நகர தலைவர் வாசுதேவன் , நகர செயலாளர் துரைகந்தமுருகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் சூரியகுமார், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆனந்த், அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் இருதயராஜ், விடுதலை தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாகக்குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, நிர்வாகிகள் ராஜா, பேர்நீதி ஆழ்வார், மக்கள் கலை இலக்கியம் ராவணன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஜெய்னூலாப்தீன், மனித நேய மக்கள் கட்சி பாதுஷா, விவசாய சங்க நிர்வாகி சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இறுதிப்போட்டி வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறுகிறது.
    • வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய கால்பந்து கழகம் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு கால்பந்து கழக வழிகாட்டுதலின் பேரில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் சார்பில் இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடை யேயான 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர் கால்பந்து போட்டி தொடங்கியது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்த கால்பந்து போட்டி வரும் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று நடந்த முதல் போட்டியில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும், கரூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும் மோதின.

    இந்த போட்டியை தஞ்சை மாவட்ட விளையா ட்டு அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உடற்கல்வி அலுவலர் கற்பகம், தமிழக கால்பந்து கழகத் துணைத் தலைவரும் தஞ்சை மாவட்ட கால்பந்து சங்கம் தலைவருமான சிவானந்தம், செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்பந்து போட்டியில் நடுவர்களாக 12 பேர் பணியாற்றுகின்றனர். இறுதிப்போட்டி வருகிற 15ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

    இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் கண்கா ணித்து அதிலிருந்து சுமார் 40 வீரர்களை தேர்வு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அதிலிருந்து 22 பேர் தேர்வு செய்யப்படுவர்.

    அவர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெ டுக்கப்படுவர்.

    அதனை தொடர்ந்து தேசிய அளவிலான மாநில ங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவர்.

    • டெல்டா மாவட்டங்களில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து போராட்டம்.

    தஞ்சாவூர்:

    காவிரியில் உடனே தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி இன்று டெல்டா மாவட்டங்களில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    அந்த வகையில் விவசாயி களுக்கு ஆதரவாகவும், முழு கடைய டைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு, போராட்டத்தை தூண்டிவிடும் கர்நாடக பா.ஜ.க மற்றும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷ ங்கள் எழுப்பினர்.இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட விக்ரம் என்ற பகுதியில் வருவாய் ஆய்வாளர் மாதவி தலைமையில் வடகிழக்கு பருவம ழையை மேற்கொ ள்வது பற்றிய கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.

    இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்காடி பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறைகள் மற்றும் நிறைகளை பற்றி தங்களது கருத்துக்களை கருத்துக்களை எடுத்து கூறினர்.

    இதை அடுத்து அதற்குரிய அதிகாரிகளிடம் முறையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும்.
    • ஏழை பயணிகளின் நலனை கருதி இலவச கழிவறை கட்ட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவையின் 37-வது ஆண்டு விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த குடிமக்கள் பேரவை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

    முன்னதாக பேரவை துணைத்தலைவர் பழனி வேலு அனை வரையும் வரவேற்றார்.

    சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் கோ.அன்பரசன், இணை செய லாளர் குருநாதன், பேரவை நிறுவனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 75 வயது நிரம்பியவர்களுக்கு மாவட்ட கருவூல அதிகாரி கணேஷ் குமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    தொடர்ந்து, விளை யாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாரத் கல்விக்குழும நிர்வாக இயக்குநர் புனிதா கணேசன் பரிசுகள் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தஞ்சை மருத்துக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி ஆஸ்ப த்திரியின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், பொதுச்செயலாளர் சேதுராமன், பொருளாளர் சுப்ரமணியன், துணை தலைவர் திருமலை மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்தர்தாஸ், துரைராஜன், அறிவழகன், அரிமா செல்வராசு, ஞானசேகர், தங்கவேலு, கோபாலகிருட்டிணன், அய்யனார், செண்பக லெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்,

    தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் தனி புற நோயாளிகள் பகுதியும், தனி உள் நோயாளிகள் பிரிவும் ஏற்படுத்த வேண்டும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. ஏழை பயணிகளின் நலன் கருதி இலவச கழிவறை கட்டுவதுடன் அவற்றை சுகாதாரமாக பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்படுகிறது.
    • நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கன் மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட காவ ல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் .ஜி. ரவிச்சந்திரன் தலைமையி லான போக்குவரத்து போலீசார் மற்றும் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 1 கிலோ சிக்கன் பிரியாணி , முட்டை, பிரெட் அல்வா உள்ளிட்ட வைகளை சுடச்சுட வழங்கி அசத்தினர்.

    இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் எம். ஜி. ரவிச்சந்திரன் கூறுகையில் , சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது .

    இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் .

    அதன்படி உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வந்த 50 இருசக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சுவையான சிக்கன் பிரியாணி மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி னோம்.

    இது போன்ற நூதன சாலை போக்குவரத்து நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் .

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்ததற்கு பரிசாக தஞ்சை போக்குவரத்து போலீசார் விலையில்லா பிரியாணி வழங்கியதை பார்த்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சர்யமடைந்தனர் .

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

    • அங்கு வைத்திருந்த கயிறு, பஞ்சு கட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
    • எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியில் ஆர்ஜி ஃபைபர் என்ற பெயரில் தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு,கயிறு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.வழக்கம் போல் நேற்று மாலை வேலை முடித்து சென்றார். இந்நிலை யில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியதில் நிறுவனத்தில் இருந்த தளவாட சாமான்கள் , தயாரித்து வைத்திருந்த கயிறு, பஞ்சுகட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர்.எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது .

    • திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது.

    இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், இயக்கத்தினர், அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் முழு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல், செல்போன், பேன்சி, அரிசிக்கடை உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பர்மா பஜார், கீழவாசலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் நகரில் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டன. காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை மூடப்பட்டதால் வெறிச்சோடின.

    கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பூதலூர், வல்லம், திருவையாறு உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

    திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதனால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பஸ்களும் இன்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகள், 3000 உணவகங்களை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், திருக்கடையூர், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் 11,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பால், மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

    உணவகம், பேக்கரி, டீக்கடைகள், ஸ்டேஷனரி என மொத்தம் 54 கடைகளில் 53 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது.

    திருச்சி மாநகரின் பிரதான மார்க்கெட் ஆன காந்தி மார்க்கெட் இன்று வழக்கம் போல் இயங்கியது. பஸ்கள், ஆட்டோ, கார்கள் வழக்கம் போல் இயங்கியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டங்கள் டெல்டா பாசனத்தில் காவிரி நதிநீர் மூலம் பாசனம் பெரும் பகுதியாக இருந்து வருகிறது.

    இதில் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் மற்றும் கடைமடை பகுதியான மேற்பனைக்காடு உள்ளிட்ட 2 ஊர்களில் மட்டும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கீரமங்கலம் பேரூராட்சியில் டீக்கடைகள், உணவகங்கள், பூ கமிஷன் கடைகளை தவிர்த்து 80 சதவீத வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல மேற்பனைகாடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் சுமார் 210 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புத்தூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சியில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. ஆட்டோ, வேன்களும் இயக்கப்பட்டது.

    மேலும் டெல்டா மாவட்டங்களில் மருந்து, பால் கடைகள் மட்டும் இயங்கின. பெட்ரோல் பங்குகளும் செயல்பட்டது.

    எனினும் கடைகள் அடைக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்கள் முடங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×