என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர வேண்டும்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தேவராயன் பேட்டை அருகே பொன்மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ரவாண்டி நெடுசாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொன்மான் மேய்ந்த நல்லூர் கருப்பூர் இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    கிராமமக்கள் சென்று வர மாற்றுவழி ஏற்படுத்தி தர நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்காததால் பொன்மான் மேய்ந்த நல்லூர் கிராமமக்கள் பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ர வாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பாபநாசம் மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூச்சிகளின் இனப்பெருக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.
    • காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே நாகக்குடி ஊராட்சியில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

    இதில் 25 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 5 விவசாயிகள் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் சிலந்தி, பொறிவண்டு, தரை வண்டு, ஊசித்தட்டான், குளவி என தனித்தனியே பெயர்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு குழுவும் வயல் பகுதிக்கு சென்று நன்மை, தீமை செய்யும் பூச்சிகளை இனம் கண்டு அவைகளின் இருப்பிடம், உணவு, இனப்பெருக்கம் ஆகியவை குறித்து அறிந்து கொண்டனர்.

    விவசாயிகளுக்கு கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் அசோக்ராஜ், கும்பகோணம் வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை பகுதி உதவி வேளாண்மை அலுவலர் துர்கா தேவி செய்திருந்தார்.

    பயிற்சியில் பார்வையிட்ட வகையில் வயல்களில் பாசி அதிகளவு காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ரஷ்யா பயணம் குறித்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே பெரியக்கோட்டையை சேர்ந்தவர் வீரையன்.

    இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17).

    இவர் மதுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த நிலையில், பிரம்மோஸ் மைய நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான சிவதானுப்பிள்ளை, அரசு பள்ளி மாணவர்கள் ராக்கெட் அறிவியில் தொழில்நுட்பத்தை இணைய வழி வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இணைய வழி தேர்வு செய்யப்பட்டது.

    அதில் மதுக்கூர் அரசு பள்ளி மாணவன் சந்தோஷ் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் தேர்ந்தெ டுக்கப்பட்ட 40 பேரில் சந்தோஷ் ஒருவர் ஆவார்.

    இந்நிலையில் ரஷ்யாவுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய மாணவர் சந்தோஷ்க்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், ராக்கெட் சயின்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஒவியரசன், உதவி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், பாலகுமார், ஆசிரியைகள் மதுக்கூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாலை அணிவித்து வெடி வெடித்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மேலும் அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    பள்ளி உதவித்தலைமை யாசிரியர்கள் பாலகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவருக்குப் பயிற்சியும் ஊக்கம் அளித்த ஒருங்கிணைப்பாளர்.

    ஓவியரசன் தலைமை ஆசிரியரால் கௌர விக்கப்பட்டார்.

    மேலும் மாணவர் சந்தோஷ் தனது ரஷ்யா பயணம் பற்றிய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து நீங்களும் என்னைப்போல் பயணம் மேற்கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம், மழைநீர் உயிர் நீர். வடகிழக்கு பருவமழைக் கால மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    இதில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர், துணை மேற்பார்வை பொறியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார்.

    போராட்டத்தை மாநில செயலாளர் தமிழ்வாணன் தொடங்கி வைத்தார்.

    கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன் ( திருவாரூர் ), சங்கர் (நாகை) ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

    மாவட்ட இணை செயலாளர்கள் ராஜா, குருநாதன், கோவிந்தராஜன், கோட்டச் செயலாளர்கள் ஜெகதீஷ், டோனிபிரிட்மேன், சந்துரு, முருகேஷ், தனசேகர், மோகன்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சி போர்க்கள அடிப்படையில் தொடங்கி கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த ப்பட்டது.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, சத்துணவு ஊழியர் சங்கம் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் சங்கம் கௌரவ ஆலோசகர் துரைசாமி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தை கால்நடை ஆய்வாளர் சங்கம் ( ஓய்வு ) மாநில செயலாளராக ஆறுமுகம் முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி ஜெயந்தி நன்றி கூறினார்.

    • தஞ்சை தபால் கோட்டத்தில் தேசிய தபால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விழாவில் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தபால் கோட்டத்தில் தேசிய தபால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி துணை தபால் அலுவலகத்திலும், கோட்டூர் துணை தபால் அலுவலகத்திலும் தபால் சமூக வளர்ச்சி விழா கொண்டாடப்பட்டது.

    நடுக்காவேரி துணை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஆரவல்லி ராஜாராமன், தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி, உதவி தபால் கண்காணி ப்பாளர்கள் உமாபதி, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோட்டூர் துணை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், தஞ்சை தலைமை தபால் நிலைய முதுநிலை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மன்னார்குடி தெற்கு உபகோட்ட தபால் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் துறையின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் தபால் சேமிப்பு கணக்குகளும், ஆயுள் காப்பீடு திட்டங்களும் தொடங்கப்ப ட்டன.

    தஞ்சை கோட்ட அலுவலகத்தில் நிதி வலுவூட்டல் நாளையொட்டி தபால் சேமிப்பு பிரிவு சம்பந் தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • மகாளாய அமாவாசையை முன்னிட்டு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • மொத்தம் 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது..

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் மகாளாய அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி (சனிக்கிழமை) பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தேவகோட்டை, இராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, ஆகிய இடங்களிலிருந்து இராமே ஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதே போல் இராமேஸ்வரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் இரவு, பகலாக 150 சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கவும், தஞ்சாவூர், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர், ஆகிய இடங்களிலிருந்து திருவையாறுக்கும் அதேபோல் திருவையாற்றிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களு க்கும் 25 சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களிலிருந்து பூம்புகாருக்கும், அதேபோல் பூம்புகாரிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப படுகின்றன.

    நாகப்பட்டினம், திருத்து றைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களிலிருந்து கோடியக்க ரைக்கும் அதேபோல் கோடியக்கரை யிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 25 சிறப்பு பஸ்களும்,திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்தும் பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களிலிருந்தும் சமயபுரத்திற்க்கும் அதேபோல் சமயபுரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும் அதேபோல் ஸ்ரீரங்கத்திலி ருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கும் 50 கூடுதல் சிறப்புப் பஸ்கள் என மேற்படி அனைத்து தடங்களிலும் என மொத்தமாக 270 கூடுதல் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.இராமேஸ்வரம் செல்லவும் இராமேஸ்வரத்திலிருந்து திரும்ப வரவும் பயணிகள் முன்னதாக முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும். எனவே பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்க கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியா ளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
    • கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் பெரும் சேதம் அடைந்ததால் இந்த ஆஸ்பத்திரி அருகிலேயே சுமார் ரூ.40 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்துள்ள ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் இந்த புதிய கட்டிடத்தில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மருந்து பொருட்கள் எடுப்பதற்காக கால்நடை உதவி மருத்துவர் ஜானகிப்பிரியா சென்ற போது புதிய கட்டிடத்தின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • வல்லம் பஸ்நிலையம் அருகில் ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • கர்நாடக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    வல்லம்:

    காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்து வல்லம் பஸ்நிலையம் அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காலை ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் தஞ்சை ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்த சாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வ ராணி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங்.ரா.அன்பழகன், ரெளலத்நி ஷா முகம்மது ஷாஃபி,மதிமுக ஒன்றிய செயலாளர் மாணிக்க வாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அபிமன்யூ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பஷீர் அகமது உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • தஞ்சை துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை அருகே உள்ள பூண்டி, ராகவாம்பாள்புரம் துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாதபுரம், சூழிய க்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளம ர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை க்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசபட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடையும்.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெறும்.

    இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் கலந்து கொள்ள வேண்டும்.

    முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 வீரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    கலந்து கொள்பவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் பதிவினை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி நிலா தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • இதில் 50 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.

    இம்முகாமில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, காவல்துறை ஆய்வாளர்கள் கலைவாணி, மகாலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சேகரன், உமாபதி போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.

    ×