search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் ஒரே நாளில் 214 மி.மீ. மழை கொட்டியது
    X

    தஞ்சை மூலை அனுமார் கோவிலுக்குள் புகுந்த மழை நீரை கடந்து செல்லும் பக்தர்கள்.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 214 மி.மீ. மழை கொட்டியது

    • பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்தது.
    • மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.‌

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை 23-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பே தற்போது மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்தது.

    இந்த சூழ்நிலையில் தஞ்சையில் நேற்று மாலை லேசான அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது. இடி -மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடின.

    கனமழையால் தஞ்சாவூர் மூலை அனுமார் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தன. நேற்று மகளாய அமாவாசை என்பதால் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு சூழ்ந்திருந்த தண்ணீரை கடந்து சென்றனர். இதேபோல் வல்லம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பாபநாசம் ,பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க வசதியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினர்.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 214.50 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 45 மி.மீ. மழை கொட்டின.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    தஞ்சாவூர் -45, வல்லம் -32, அய்யம்பேட்டை -24, கல்லணை -22.80, பூதலூர் -20.20, திருவையாறு -16, பட்டுக்கோட்டை -15.50, பாபநாசம் -13.

    Next Story
    ×